அம்பாறையில் பெரும்பான்மை ஆசன பலத்தை இழக்கப் போகும் முஸ்லிம்கள்

அம்பாறையில் பெரும்பான்மை ஆசன பலத்தை இழக்கப் போகும் முஸ்லிம்கள்

றிப்தி அலி

நாட்டில் அதிகூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறக் கூடிய ஒரேயொரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தினை திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் என விசேடமாக அழைக்கப்படுகின்றது.

சுமார் 750,000 சனத்தொகையினை கொண்ட இந்த மாவட்டத்தில் 44 சதவீத முஸ்லிம்களும் 38.4 சதவீத சிங்களவர்களும், 17.1 சதவீத தமிழர்களும் வழங்கின்றனர் என அம்பாறை மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்திலிருந்து ஏழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யவதற்காக சுமார் 5 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக 20 அரசியல் கட்சிகளும், 34 சுயட்சைக் குழுக்கள் சார்பில் 540 பேர் இந்த மாவட்டத்தில் களமிறங்கியுள்ளர். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் மகா சபை ஆகிய கட்சிகளுக்கு இடையிலேயே கடும் போட்டி நிலவுகின்றன.

இந்த மாவட்டத்தில் அதிக முஸ்லிம் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதற்காக மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்எம். அஷ்ரப் பல்வேறு வியூகங்களை வகுத்தார்.
அவரின் மறைவிற்கு பின்னர் 2001ஆம் மற்றும் 2004ஆம் ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டும் முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டம் என்பது நிரூபிக்கப்பட்டதுடன் அவரின் கனவும் நனவாக்கப்பட்டது.

எனினும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையினை இல்லாமலாக்குவதற்கான பல்வேறு சதித்திட்டங்கள் பெரும்பான்மை சக்திகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக பல அரசியல்வாதிகள் வெளி மாவட்டங்களிலிருந்து அம்பாறைக்கு இறக்குமதி செய்யப்பட்டு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த சதித் திட்டங்களிற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம்கள் தங்களின் சொற்ப சுய லாபங்களிற்காக துணைபோன வரலாறுகளும் இல்லாமலில்லை. இன்றும் இது தொடர்கின்றது.  

இதன் ஒரு அங்கமாகவே மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் 'சீ' வலயத்தில் காணப்பட்ட தெஹியத்தக்கண்டி எனும் பிரதேசத்தினை 1980ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மஹியங்களை மற்றும் பொலனறுவை ஆகிய இரு மாவட்டங்களுக்கு  இடையில் காணப்படுகின்ற இந்த நகரினை அம்பாறை மாவட்டத்துடன் இணைந்து பல சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் சிங்கள மக்களின் சனத்தொகை அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்தது.

இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளின் காரணமாக 2010ஆம் மற்றும் 2015ஆம் ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு மூன்று முஸ்லிம்கள் மாத்திரமே பாராளுமன்றம் சென்றனர்.

இதன் ஊடாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பல்வேறு வகையான இழப்புக்களை சந்தித்ததுடன் மாத்திரமல்லாமல் பல அச்சுறுத்தல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் முஸ்லிம்களின் ஆதரவினைக் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் களமறிங்கப்பட்டுள்ளனர். இதனால், முஸ்லிம்களின் வாக்குள் ஐந்து தரப்புகளுக்கு  பிரிவடையவுள்ளன. இதனால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதன் மூலம் 'அம்பாறை மாவட்டம் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாவட்டம்' எனும் நாமத்தினை இழப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேதமாசாவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவளித்தன.

இதனால், சுமார் 124,615 வாக்கு வித்தியாசத்தில் அம்பாறை மாவட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். எனினும் இந்த  தேர்தலில் இவருக்கு ஆதரவளித்த நான்கு கட்சிகளும் வௌ;வேறாக பிரிந்து நான்கு அணிகளாக போட்டியிடுகின்றன.

இதனால் ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தினை வென்ற சஜித் பிரேமதாசாவினால், பாராளுமன்ற தேர்தலில் அவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் மாவட்டத்தினை வெல்ல முடியுமா என்பது பாரிய கேள்விக்குறியாகும்.

இதனால் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாயக் கொண்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினரால் அழுத்தங்கள் வழங்கப்பட்டன.  

இதற்காக அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா பல்வேறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த நிலையிலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து அகில இலங்கை மக்கள் காங்கரஸின் உறுப்புரிமையினை பெற்றுள்ள வை.எல்.எஸ். ஹமீட், கே.எம்.ஜவாத் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்), அஷ்ரப் தாஹீத் (நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்), எம்.மாஹீர் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மற்றும் அன்சில் (அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்) போன்றோரே குறித்த இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி, திருகோணமலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டாக இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதற்கு மேலதிகமாக குறித்த இரண்டு கட்சிகளும் இணைந்து தராசு சின்னத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் இணைந்து போட்டியிடுவதற்கு ஏன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இணங்கவில்லை எனும் கேள்வி இன்று பலராலும் எழுப்பப்படுகின்றது.

குறித்த இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசி சின்னத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டிருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.  

எனினும் தற்போதைய சூழ்நிலையில் தொலைபேசி சின்னத்தில் இரண்டு உறுப்பினர்களை மாத்திரமே பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தங்களுக்கு 40,000க்கு மேற்பட்ட  வாக்குகள் உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரசார மேடைகளில் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கட்சி கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் பிரமுகர் அரசியல் நடவடிக்கையினையே முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி 33இ102 வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் இக்கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், ஏ.எம். மஜீத் (எஸ்.எஸ்.பி), முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் தேசியப்பட்டியல் வேட்பாளாரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் இந்த தேர்தலில் மாற்று அணியில் இக்கட்சிக்கு எதிராக தற்போது பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அது மாத்திரமல்லாமல் 2015ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாவிற்கு எதிரான அலையொன்று அம்பாறை மாவட்டத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது அதாஉல்லாவிற்கு ஆதரவான அலையொன்றினையே மாவட்டத்தின் பல பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது.

அது போன்று கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 40,000 மேற்பட்ட வாக்குகளை பெற்றதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு வாக்குளை பெற்றிருந்தாலும் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தினதும் ஆட்சியினை அக்கட்சியினர் நேரடியாக கைப்பற்றவில்லை.

அவர்கள் ஆட்சியமைக்கும் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட ஐந்து வட்டாரத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோல்வியுற்றது. எனினும் போனஸாக கிடைக்கப் பெற்ற ஐந்து ஆசனங்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் போனஸ் உறுப்பினரான சுலைமாலெப்பையுடன் இணைந்தே குறித்த பிரதேச சபையின்  அக்கட்சி ஆட்சியினை கைப்பற்றியது.

அது போன்று அக்கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரான ஏ.எம்.நௌசாத், தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரசார நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளார்.

இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் இவர்களின் வாக்கு வங்கியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றன முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் தவிர்ந்த ஏனைய ஒன்பது பேரில் எவரும் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு இதுவரை வெற்றி பெறவிலல்லை.

இவற்றினை உணராத இக்கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், முஸ்லிம் காங்கிரஸிற்கு பழி தீர்க்கும் வகையில் தனித்து களமிறங்கி மாவட்டத்தின் முஸ்லிம் பெரும்பான்மை எனும் நாமத்தினை இல்லாமலாக்க முயற்சிக்கின்றனர்.

ஏற்கனவே கூறியது போன்று புத்தளம், வன்னி, திருகோணமலை மற்றும்  குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடியும் என்றால் ஏன் அம்பாறை மாவட்டத்தில் இணைந்த போட்டியிட முடியாது?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான றிசாத் பதியுதீனுக்கு எதிராக இனவாதிகளினால் பிரச்சினைகள் ஏற்படுகின்ற சமயத்தில் அவரை பாதுகாப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தேவை ஏன்றால் ஏன் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிற்காக இந்தவொரு விட்டுக்கொடுப்பினை அக்கட்சியின் தலைமத்துவத்தினால் மேற்கொள்ள முடியாமல் போனது?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட ஆதரவாளர்கள்  அங்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு ஆதராவாக பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

அதுபோன்று வன்னி மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்  தங்களின் விருப்பு வாக்கில் ஒன்றை றிசாத் பதியுதீனுக்கு வழங்குமாறு ரவூப் ஹக்கீம் அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இப்படியான சூழ்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஏன் அக்கட்சி இப்படியாதொரு தீர்மானத்தினை எடுத்தது எனும் விடயத்தில் இன்று வரை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதன்  காரணமாக இம்முறை அம்பாறை மாவட்டத்தில் நான்கு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு முஸ்லிம் பாராளுன்ற உறுப்பினர்களும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாவதற்கான வாய்ப்பே இப்போதைக்கு அதிகமாகும்.

இதன் ஊடாக அம்பாறை - முஸ்லிம்கள் பெரும்பான்மை எனும் மாவட்டம் எனும் நாமம் இல்லாமலாக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகும்.