புர்கா, நிகாபிற்கு தடை விதிக்க தீர்மானிக்கவில்லை: வெளிநாட்டு அமைச்சு

புர்கா, நிகாபிற்கு தடை விதிக்க தீர்மானிக்கவில்லை: வெளிநாட்டு அமைச்சு

புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடையை விதிப்பதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு இன்று (16) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

"இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும். இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது" என வெளியுறவுச் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

"ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என வெளியுறவுச் செயலாளர் மேலும் கூறினார்.

நாட்டில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இதற்கு பதலளிக்கும் வகையில் வெளியுறவுச் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.