Mastercard மற்றும் LankaPay இணைந்து அறிமுகப்படுத்தும் மும்முனைத் திட்டம்
இரு நிறுவனங்களும் சேர்ந்து இணை வர்த்தக நாமத்துடன் கூடிய டெபிட் அட்டைகள், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பாதுகாப்பான கொடுப்பனவுகள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்கும் குறைந்த செலவிலான QR கொடுப்பனவுகளின் நடைமுறைப்படுத்தலை அறிமுகப்படுத்தவுள்ளன
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதில் தாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்தும் வகையில் கொடுப்பனவு அட்டைகள் வழங்கல்கள், டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்த மூலோபாயக் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக Mastercard மற்றும் இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான LankaPay ஆகியன இன்று அறிவித்தன.
இரு நிறுவனங்களின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், நாட்டிலுள்ள முன்னணி வங்கிகள் மற்றும் நிதித்தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டாண்மையின் மூலம் மூன்று பிரதான தீர்வுகள் முன்வைக்கப்படவுள்ளன. டிஜிட்டல் முறையை ஏற்றுக்கொள்வது மற்றும் நிதி உள்ளடக்கத்தை துரிதப்படுத்தும் வகையில் இணை வர்த்தக நாமம் கொண்ட டெபிட் அட்டைகளை வழங்குதல், நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு வணிகங்களுக்கு குறைந்த செலவிலான QR கொடுப்பனவை செயற்படுத்தும் Mastercard Pay Local தீர்வு மற்றும் மேம்பட்ட பரிவர்த்தனையை உறுதி செய்யும் வகையில் Mastercard's Brighterion AI தீர்வுகள் என்பனவே அவையாகும்.
Mastercard-LankaPay இணை வர்த்தக நாமத்தைக் கொண்ட டெபிட் அட்டைகள் Priceless Specials மூலம் பிரத்தியேகமான டிஜிட்டல் தள சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து அதன் உரிமையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பை வழங்கும். அத்துடன், Mastercard Travel and Lifestyle Services ஊடாக இந்த அட்டையின் உரிமையாளர்கள் உலகளாவிய வரவேற்பு சேவைகள் மற்றும் பயண விபர சேவைகளைப் பெற்றக் கொள்ள முடியும்.
குறிப்பாக, இலங்கையில் உள்ள வங்கிகள் இந்தப் புதிய டெபிட் அட்டைகளை எவ்வித தடையும் இன்றி ஏற்கனவே உள்ள வணிக நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க முடியும் என்பதுடன், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களைப் பின்பற்றச் செய்வதில் நுகர்வோரின் ஈடுபாட்டை அதிகரிப்பது என்ற அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒத்துப் போகும் வகையிலும் இது அமைந்துள்ளது.
மேலும், Mastercard’s Pay Local தீர்வானது, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் LankaPay செயலியின் ஊடாகத் தமது கடன் மற்றும் டெபிட் அட்டைகளை இணைத்து, 400,000ற்கும் அதிகமான வணிகங்களில் தமது நாட்டின் நாணயப் பெறுமதியில் உடனடியாகக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதையும், சுற்றுலாத்துறை ஊடான வருமானம் முறைப்படுத்தப்படுவதையும் இந்தத் தீர்வு ஊக்குவிக்கும்.
அதேநேரம், Mastercard's Brighterion AI தீர்வானது, LankaPay இன் வலையமைப்பில் மோடிகள் இடம்பெறுவதைக் கண்டறிவதற்கும், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு தரவு மூலங்களின் ஊடாக நிகழ்நேர நுண்ணறிவை வழங்கும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் வலையமைப்புக்களின் உள்ளகத் தகவல்களை ஆய்வுசெய்வதன் ஊடாக Brighterion மூலம் மேம்படுத்தப்பட்ட நிகழ்நேர மோசடி ஆபத்துத் தொடர்பான மதிப்பெண்கள் உருவாக்கப்படும். இதன் ஊடாக மோசடி தொடர்பான ஆபத்துக்களைக் குறைத்து நிறுவனங்களினால் பயனாளிகளுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்க முடியும்.
எந்த வகையான தகவல் வகைகள், அளவு மற்றும் சிக்கலான தன்மையைக் கொண்ட கட்டமைப்பினாலும் தழுவிக்கொள்ளக் கூடியதாகவும், நிதிக் கட்டமைப்புக்குப் பாதுகாப்பை வழங்கக் கூடியதாகவும் இந்தத் தீர்வு அமைந்துள்ளது.
Brighterion AI தீர்வானது ATM மற்றும் இலங்கையில் எதாவது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பிறிதொரு வங்கிக் கணக்கிற்கு மேற்கொள்ளும் பரிமாற்றங்களின் பாதுகாப்பை மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவைக் கொண்ட பாதுகாப்பு அடுக்குகளினால் உறுதிப்படுத்துகின்றது. அது மாத்திரமன்றி, நிகழ்நேர மோசடிகளைக் கண்டறிந்து அதற்கான உரிய பாதுகாப்பை வழங்குகின்றது.
இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவம் பற்றிக் கருத்துத் தெரிவித்த, Mastercard இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான முகாமையாளர் சந்துன் ஹபுகொட,
“இந்த மும்முனைத் திட்டமானது இலங்கையின் டிஜிட்டல் மயப்படுத்தலின் முக்கிய தூண்களாக விளங்கும் அணுகல், பாதுகாப்பு மற்றும் புதுமை ஆகியவற்றை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Mastercard மற்றும் LankaPay இடையேயான இந்தக் கூட்டாண்மை தடையற்ற டெபிட் அட்டை வழங்கலை உறுதி செய்வதிலிருந்து பணம் செலுத்தப்படுவதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளை எளிதாக்க உதவுவது வரையில் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றது” என்றார்.
இந்தக் கூட்டாண்மையைப் பாராட்டிக் கருத்து வெளியிட்ட LankaPay இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சன்ன.த சில்வா குறிப்பிடுகையில்,
“LankaPayஇன் உலகளாவிய ரீதியான முன்னேற்றத்தில் இது முக்கியதொரு மைல்கல்லாக அமைகின்றது. நாட்டில் நிதிசார் உள்ளடக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நாம் முன்னணியில் இருப்பதுடன், Mastercard உடன் ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டாண்மையானது இப்பயணத்தின் மற்றுமொரு படியாகும்.
மதிப்பை அதிகரிப்பது மற்றும் மேம்பட்ட பாதுகாப்பின் மூலம் நிதித்துறை நன்மையடைவதை இந்தக் கூட்டாண்மை உறுதிசெய்கின்றது. அதேநேரம், சுற்றுலாப் பயணிகள் தடையின்றிக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதால் உள்நாட்டு சுற்றுலாத் துறையும் நன்மையடைகின்றது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)