இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி; இன்று முதல் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி; இன்று முதல் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை ஆரம்பம்

றிப்தி அலி

முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்  பரவல் காரணமாக ஏற்பட்ட கொவிட் - 19 எனும் தொற்றுப் பரவல் முழு உலகினதும் வாழ்வொழுங்கையே புரட்டிப் போட்டுள்ளது.

சீனாவில் முதன் முறையாக இந்;த வைரஸ் கண்டறியப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. எனினும் உலகம் முழுவதும் இந்த வைரஸின் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதுவரை உலகளாவிய ரீதியில் சுமார் 2.16  மில்லியன் பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இலங்கையைப் பொறுத்த வரை நேற்று (28) வியாழக்கிழமை காலை வரை நாட்டில் 60,694 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 52,566 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இத்தொற்று காரணமாக கடந்த புதன்கிழமை (27) நள்ளிரவு வரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 90 சதவீதமானோர் சிறுநீரகம், மாரடைப்பு, நீரழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு உள்ளானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி

இவ்வாறு கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த நோயிலிருந்து உலகை பாதுகாப்பதற்காக மிகப் பாரிய ஆய்வுகள் மூலம் பல்வேறுப்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற சில  நாடுகளினால் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாடுகளில் வெற்றிகரமாக தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில், இலங்கை  மக்களுக்கும் கொவிட் - 19 இற்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதற்காக, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான லலித் வீரதுங்க தலைமையில் எட்டுப் பேர் அடங்கிய கொவிட் -19 தடுப்புசியேற்றல் தேசிய திட்டத்துக்கான ஜனாதிபதி செயலணியொன்று கடந்த டிசம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

குறித்த செயலணி தடுப்புசியேற்றல் தொடர்பான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனது. இதேவேளை, கொவிட் - 19 இற்கான தடுப்பூசிகளை நன்கொடை அடிப்படையில் வழங்குமாறு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, சீனா ஜனாதிபதி ஜி.ஜின்பிங் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி பிளேடிமிர் பூட்டின் ஆகியோருக்கு ஜனாதிபதி கடிதங்களை அனுப்பியிருந்தார்.

இதற்கு மூன்று நாட்டுத் தலைவர்களும் சாதகமாக பதில்களை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இரண்டரை இலட்சம் பேருக்கு செலுவதற்காக இந்தியாவின் சேரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 500,000 ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ரா செனாகா கொவிட்ஷீல்ட் தடுப்புசிகளை இந்தியா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசிகள் நேற்று (28) வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தடைந்தன. குறித்த தடுப்பூசிகளை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகார் கோபால் பால்கேயினால்  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (29) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு (களுபோவில) போதானா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு (ராகம) போதனா வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலை ஆகியவற்றில் முதற்கட்டமாக இடம்பெற்றவுள்ளது.  

"கொவிட் ஒழிப்பிற்காக முன்னணியில் செயற்படும் சுகாதார துறையினருக்கும், பாதுகாப்பு படையினருக்குமே இந்த தடுப்பூசி முதலில் ஏற்பட்டவுள்ளது.  இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய் உள்ளவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

கொவிட் -19 தடுப்புசியேற்றல் தேசிய திட்டத்துக்கான ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று கடந்த புதன்கிழமை (27) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூட்டத்தில் 'சூம்' தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"அறுபது வயதுக்கு மேற்பட்ட 30 – 35 இலட்சம் பேர் நாட்டில் வாழ்கின்றனர். இவர்களை அடையாளம் காண வேண்டியுள்ளது. இதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக விசேட விண்ணப்பப்படிவமொன்று தேசிய பத்திரிகைகளின் ஊடாக கோரப்படவுள்ளது" எனவும் லலித் வீரதுங்க கூறினார்.

"இந்த தடுப்பூசிகள், தன்னார்வ அடிப்படையில் முன்வருபவர்களுக்கு மாத்திரமே ஏற்றப்படுமே தவிர, இதற்காக எந்தவித பலவந்தமும் பிரயோகிக்கப்படமாட்டாது" என அவர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசியினால் விரும்பத்தாக சம்பவங்கள் எதும் ஏற்பட்டால் அதனை அரசாங்கமே பொறுப்பேற்கும் என லலித் வீரதுங்க மேலும் கூறினார். இதேவேளை, குறித்த  தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட தடுப்பூசி அட்டையொன்று வழங்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 1,500 வைத்தியசாலைகள் உட்பட 4,000 இடங்களில் தடுப்பூசி ஏற்றல் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

இலங்கையைப் பொறுத்த வரை சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் அங்கீகாரம் பெறப்பட்ட மருந்து வகைகளை மாத்திரமே நாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இதற்கமைய நேற்று இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொவிட் - 19 தடுப்பூசிகளுக்கு தேவையான அனைத்து அனுமதியை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை வழங்கப்பட்டுள்ளது.

"புதிய வகையான தடுப்பூசியொன்றிற்கு அனுமதி வழங்குவதற்கு சுமார் 7  – 8 வருடங்கள் தேவைப்படும். எனினும் உலக அவசர நிலையினை கருத்திற்கு கொண்டு இந்த தடுப்பூசிக்கான அனுமதியினை குறுகிய காலப் பகுதிக்குள் குறித்த அதிகார சபையினால் வழங்கப்பட்டது.

இதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் முறையாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை மேற்கொண்டிருந்ததுடன் அரசாங்கம் எந்தவித அழுத்ததினையும் பிரயோகிக்கவில்லை. இதன் காரணமாகத் தான் இந்த தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டது" எனவும் லலித் வீரதுங்க கூறினார்.

இதேவேளை, சீனாவினால் தயாரிக்கப்படும் மூன்று இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கொழும்பிலுள்ள சீனா தூதரகம் நேற்று முன் தினம் அறிவித்தது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் அடிப்படையில் நன்கொடையாக  வழங்கப்படவுள்ள இந்த தடுப்பூசிகள்; எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் நடுப் பகுதியில் கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தூதுரகம் குறிப்பிட்டது.

சீனாவின் தேசிய மருந்து குழு தனியார் கம்பனியினால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சேர்பியா, பஹ்ரைன், ஜோர்தான், பாகிஸ்தான் போன்ற பல நாட்டு மக்களிற்கு ஏற்றப்பட்டு வருகின்றது.

இதேவேளை, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் - 5 எனும் கொவிட் - 19 தடுப்பூசியையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக, நாட்டிற்கு தேவைப்படுகின்ற மூன்று மில்லியன் தடுப்பூ10சிகளை இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் கொள்வனவு செய்வது தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிட்த்தக்கது.

அரசாங்கத்தினால் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்ற கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம், இந்த வருடம் முழுவதும் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி ஏற்றல் செயத்திட்டத்தினை அரசாங்கத்தினால் ஒருபோதும் தனியாக மேற்கொள்ள முடியாது. சுகாதார அமைச்சு. இராணுவம், பொலிஸ், ஜனாதிபதி செயலணி போன்ற பல துறைகள் இணைந்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

"அத்துடன் இந்த தடுப்பூசி தொடர்பான அறிவூட்டல் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைக்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்" என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.

கொவிட் - 19 நோயினை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைக்கு தேவையான பூரண ஒத்துழைப்பினை வழங்குவது அனைத்து மக்களினதும் தலையாய கடமையாகும்.

அத்துடன் தடுப்பூசியின் அவசியம் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டமும் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் மூலமே இது தொடர்பான சந்தேகங்கள், தப்பபிப்பிராயங்கள் ஆகியவற்றினை நீக்க முடியுமாக இருக்கும்.