கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர்

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர்

உலகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நாட்டுக்குப் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்விடயம் தொடர்பில் நேற்று (24) வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தன்னிடம் கேட்டறிந்துகொண்டிருப்பதுடன், நோய்த் தொற்று நாட்டுக்குள் ஊடுருவாமல் இருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய நாட்டுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அது குறித்து விமான நிலையத்திலுள்ள விசேட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக விமான நிலையத்தில் விசேட வைத்திய பீடமொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் நாட்டில் இருப்பது குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் பதிவாகவில்லையென்றும், கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சீனக் குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அக்குழந்தை சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இருந்தபோதும், இலங்கைக்குள் நுழையும் சகல விமானப் பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதுடன், குறித்த வைரஸ் நாட்டுக்குள் பரவாமல் இருப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.