மக்களை பிரிக்கும் அரசியல்வாதிகள்

மக்களை பிரிக்கும் அரசியல்வாதிகள்

றிப்தி அலி

இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியஸ்தளமாகக் காணப்படும் இலங்கையில்  சிங்கள், தமிழ், முஸ்லிம், கிறிஸ்வதர்கள், மலே மற்றும் இந்திய தமிழர்கள் எனப் பல இனத்தவர்கள் வாழும் ஒரு பன்மைத்துவ நாடாகும்.

இதற்கமையவே அரசியலமைப்பில் 12ஆவது பிரிவின் முதலாவது சரத்தில், "சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துரைடையவர்களாவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் - "இன, மத, மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாவும் எந்தப் பிரஜைக்கும் ஒரங்கட்டுதல் ஆகாது" எனவும் அரசியலமைப்பில் 12ஆவது பிரிவின் இரண்டாவது சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்மைத்து நாட்டில் வாழும் இனங்களிடையே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே அரசியல் அமைப்பின் ஊடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இனங்களிடையே பகைமையினை தோற்றுவிக்கும் நடவடிக்கையினை அனைத்து இன அரசியல்வாதிகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதன் காரணமாகவே பன்மைத்துவ நாட்டில் வாழும் மக்களிடையே தொடர்ந்தேசியாக பிரச்சினைகள் ஏற்படுகின்றமை வழமையாகக் காணப்படுகின்றது.

பிரித்தானியாவிடமிருந்து 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த பிரச்சினை இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபங்களுக்காவே இந்த பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட சிங்களம் மாத்திரம் எனும் சட்டத்தின் ஊடாக இப்பிரச்சினை நாட்டில் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு நாட்டின் பல பிரதேசங்களில் தமிழ் சமூகத்தினை இலக்கு வைத்து ஜுலைக் கலரம் இடம்பெற்றது.

ஆட்சியிலிருந்த தலைவர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே இந்த கலவரம் வீரியமடைந்தது. அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்றது.

இக்காலப் பகுதியில் தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள அரசியல்வாதிகளினால் சிங்கள மக்கள் மத்தியில் பிழையான தோற்றப்பாடொன்று தோற்றுவிக்கப்பட்டது. இதேவேளை, விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம், கிழக்கில் பள்ளிவாசல்களில் படுகொலை போன்ற பல சம்பவங்களை இவற்றுக்கு உதாரணமாக குறிப்பிட முடியும்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் தமிழ் அரசியல் கருத்து நிலையே காணப்பட்டது. இதனால் நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் மத்தியில் மற்றுமொரு சிறுபான்மையினரான தமிழ் மக்கள் தொடர்பில் சந்தேகப் பார்வையொன்று உருவானது.

யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் மானவல்லை, உடதலவின்ன, மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான கலவரம் தோற்றம் பெற்றது. இதன் பின்னணியிலும் அரசியல்வாதிகள் காணப்படமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அனைத்து இன மக்களும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அது கனவாக மாறியதே தவிர, நேரடி நல்லிணக்கமாக ஏற்படவில்லை. யுத்த காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சொல்லொண்ணா துயரங்களைப் போன்று யுத்த முடிவின் பின்னர் முஸ்லிம் எதிர்நோக்கினர். முஸ்லிம்களை இலக்கு வைத்து பௌத்த தேரர்கள் மற்றும் சிங்கள் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரால் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படடன.

சிங்கள கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போலிப் பிரச்சாரங்கள் கடந்த சில வருடங்களாக சமூக ஊடகங்கள் மூலம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த போலிப் பிரச்சாரங்களை படித்த புத்திஜீவிகளும் நம்பக்கூடியளவு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அளுத்கம, ஜின்தோட்டை, அம்பாறை, திகன, சிலாபம், குருநாகல், மினுவாங்கொடை போன்ற பல பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற்றன.

அரசியல்வாதிகளின் வாக்கு வாங்கிகளை அதிகரிப்பதற்காக இது போன்ற கலவரங்களின் பின்னனியில் அவர்கள் செயற்பட்டமையினை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக அமைச்சர் உதய கம்பன்வில தலைமையிலான பிவிதுரு ஹெல உருமய கட்சியின் முக்கியஸ்தரான பாடகர் மாதுமாதவ ஆனந்த, மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்ட போது களத்தில் நின்றதை சமூக ஊடகங்கள் வாயிலான அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக தென் பகுதியில் இனவாத நடவடிக்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான மறைமுக செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தற்போதைய ஆளும் அரசாங்கம் வழங்கி வருகின்றது. இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

இந்த மாகாணத்தில் அனைத்து இனத்தவர்களுக்கும் சொந்தமான பல தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன. எனினும், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை.

இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான தேசிய வெசாக் தினத்தினை யாழ்.  நைனாதீவு நாக விகாரையில் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்திருந்த போதிலும் கொவிட் - 19 தொற்று காரணமாக அது கைவிடப்பட்டுள்ளது.

அது போன்றே கிழக்கு மாகாண பொசன் பிரதான நிகழ்வினை அம்பாறையிலுள்ள தீகவாபி விகாரையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் சிறுபான்மையின மக்கள் பரந்து வாழும் பகுதியில் நடத்தி அங்குள்ள மக்கள் மத்தியில் பௌத்த மதம் தொடர்பில் நல்லிணக்கத்தினை கட்டியொழுப்ப முடியும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

ஆனால், ஆட்சியிலுள்ள அரசாங்கம் பல்வேறு மறைமுக நிகழ்;ச்சி நிரலின் அடிப்படையிலேயே குறித்த விழாக்களை சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் அதிகார தோரணையில் நடத்த விளைவதை கவனிக்க முடிகிறது.

இவ்வாறான நிலையிலேயே "மட்டக்களப்பு மாவட்டத்தின் புருட்டுமான் ஓடையில் புதிதாக விகாரையொன்றினை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் அண்மையில் குற்றஞச்சாட்டினார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு சொந்தமான 10,000 ஏக்கர் காணி மயிலந்த மடுவிலும் 5,000 ஏக்கர் காணி கெவிலியாமடுவில்லும் சுவிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"கிழக்கு மாகாணமானது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுகின்றனர். எனினும் இந்த மக்கள் மத்தியில் பிரச்சினைகளை தூண்டு நோக்கில் சிலர் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிளவினை தோற்றுவிப்பதற்கான முயற்சி காணப்படுகின்றனது. இதனை முறியடிக்க தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு எதிர்க்கட்சியினைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தவுடன் பாராளுமன்றத்தில் வாய் மூடி மெனியாகிவிட்டனர்.

இதனால் முஸ்லிம் சமூகம் நாட்டில் எதிநோக்கிய கட்டாய தகனம், நிகாப் மற்றும் புர்கா தடை, மாடாறுப்புக்கு தடை போன்ற பல்வேறு சம்பவங்களின் போதும் குறித்த ஏழு பேரும் பாராளுமன்றத்தில் உரையாற்றாமல் மௌனம் காத்தனர்.

இதனால் முஸ்லிம் சமூகம் அநாதையாக்கப்பட்டதுடன் அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் யார் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறான நிலையில், தமிழ் சமூகத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்தனர்.

இதனால் முஸ்லிம் மக்கள் பாரியளவில் சந்தோசமடைந்ததுடன் மேற்குறிப்பிட்டவர்களை சமூக ஊடகங்கள் வாயிலாக புகழ்பாடத் தொடங்கினர். இதில் முதற் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னிலையில் திகழ்ந்தார்.

இவ்வாறான நிலையிலேயே கடந்த பெப்ரவரி மாதம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையானா நடை பவணியொன்றினை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் உரையாற்றியமைக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் இந்த பேரணியில் முஸ்லிம்கள் பாரியளவில் கலந்துகொண்டனர்.

இதன் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நெருக்கிய உறவொன்று ஏற்பட்டதுடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் ஒற்றுமையினை வளர்ப்பதற்காக இவர் உழைப்பார் என முஸ்லிம்கள் கருதினர்.

இதனால் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தினை தமிழ் - முஸ்லிம் உறவினை கட்டியொழுப்ப தலைமை தாங்குமாறு முஸ்லிம்கள் கோரினர். எனினும் இது கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் பாரிய காழ்ப்புணர்ச்சியினை தோற்றுவித்ததுடன் எதிர்காலத்தில் தங்களின் செல்வாக்கு கேள்விக்குரியாகிவிடும் என்று யோசிக்குமளிவிற்கு சென்றது.

இதனால் சமூக ஊடகங்கள் வாயிலான பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை விமர்ச்சிப்பதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் களமிறங்கப்பட்டனர்.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் நகமும்; சதையும் போன்று வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம்களிடையே குழப்பத்தினை தோற்றுவிக்கும் நோக்கில் குறித்த அரசியல்வாதிகள், அவர்களது ஆதரவாளர்கள் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இது போன்றே கல்முனை உப பிரதேச செயலகத்தினை  தரமுயர்த்தும் நடவடிக்கையினை கையில் எடுத்துக் கொண்டு இரண்டு சமூகங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் இரு இனங்களிடையேயும் குழப்பத்தினை தோற்றுவிக்கின்றனர்.

இதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தருகின்றோம் எனக் கூறிக்கொண்டு வந்த பௌத்த தேரர்களினால் இன்று வரை எந்தவித தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. எனினும் இதனை கலந்துரையாடல்களின் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும் அங்குள்ள அரசியல்வாதிகள் இதற்கு இணக்கம் தெரிவிப்பதில்லை. உதாரணமாக, அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சிபாரிசில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முற்றாக முஸ்லிம் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பன்மைத்து நாட்டில் ஒற்றுமையாக வாழும் அனைத்து இன மக்களையும் அரசியல்வாதிகளே திட்டமிட்டு பிளவுபடுத்துகின்றனர் என்பதே மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்களின் ஊடாக நிரூபிக்க முடிகின்றது.

"இதனால், இன ரீதியாக கட்சிகளை நாட்டில் தடை செய்ய வேண்டும்" என 'கபே' தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

அனைத்து சமூகத்திலும் இந்த கட்சிகள் காணப்படுகின்றன. இந்த கட்சிகள் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கும் இனவாத பிரச்சாரங்கள் தேர்லின் பின்னர் வீரியமடைந்து பல்வேறு வகையில் ஒற்றுமையாக வாழும் மக்களிடையே குழப்பத்தினை தோற்றுவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

"இது தொடர்பில் தேர்தல் காணிப்பு அமைப்புக்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சிபாரிசுகளை வழங்கியுள்ளன. குறித்த கட்சிகளை தடை செய்வதன் ஊடாக அல்லது பெயர்களை மாற்றுவதன் ஊடாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.