பேரீத்தம் பழ இறக்குமதிக்கான தடை நீக்கம்

பேரீத்தம் பழ இறக்குமதிக்கான தடை நீக்கம்

றிப்தி அலி

பேரீத்தம் பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த தடை நீக்கம் தொடர்பில் நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2270/18ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பேரீத்தம் பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், பேரீத்தம் பழ இறக்குமதிக்கான தடையினை நீக்குமாறு 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி, இஷாக் ரஹ்மான், எம்.எஸ்.தௌபீக், அலி சப்ரி ரஹீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், மர்ஜான் பழீல் மற்றும் எம். எம்.முஷர்ரப் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய பேரீத்தம் பழ இறக்குமதிக்கான தடை நீக்கப்பபட்டுள்ளது. புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு தேவையான பேரீத்தம் பழங்களை இறக்குமதி செய்யும் நோக்கிலேயே இந்த தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், பேரீச்சம் பழ, அப்பிள், ஒரேஞ் மற்றும் மாஜரின்  உள்ளிட்ட 9 வகையான பொருட்களின் இறக்குமதிக்காக நிதி அமைச்சின் கீழுள்ள வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட விசேட சுங்க வரி தொடர்ந்தும் அமுலிலுள்ளது.