ஊடகவியலாளருக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பேஸ்புக் மூலம் விடுத்த மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்கள் அவதானம்

ஊடகவியலாளருக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பேஸ்புக் மூலம் விடுத்த மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்கள் அவதானம்

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தனவிற்கு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பேஸ்புக் மூலம் விடுத்த மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்கள் அவதானம் செலுத்தியுள்ளன.

இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு இன்று (02) வெள்ளிக்கிழமை கடிதமொன்றை எழுதியுள்ளன.

ஊடக சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர  ஊடக அமைப்பு, இலங்கை தொழிற்சார் ஊடகவியலாளர்களின் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியன இணைந்து இந்த கடிதத்தினை எழுதியுள்ளன.

இதன் பிரதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கடிதத்தின் முழுமை:

2021.07.02

சந்தன விக்ரமரத்ன,
பொலிஸ் மா அதிபர், பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முகப்புத்தகம் ஊடாக, ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அளித்துள்ள அச்சுறுத்தும் பதில்கள் தொடர்பாக:

பொலிஸ் மா அதிபர் அவர்களே,

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்த செய்தியொன்று தொடர்பில், கருத்து பதிவிட்டு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (1), அவ்வூடகவியலாளருக்கு விடுத்துள்ள மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்களின் கூட்டு மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது.

குறித்த செய்தி அடங்கிய முகப்புத்தக  பதிவு

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன பொய்யான செய்தியினை வெளியிட்டதாகவும், அதற்கு இயற்கை தண்டனையளிக்கும் எனவும் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரபாகரன் மற்றும் ஏனைய குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது என்பதை அவதானிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த ஊடகவியலாளர் இதன்போது தான் எழுதிய பொய்யான செய்தி எது என வினவியுள்ள நிலையில், அதற்கு உறுதியான பதிலொன்று தேசபந்து தென்னகோனால் அளிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு இடத்தில் மட்டும்  உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல்கள் தொடர்பிலான செய்தியொன்று தொடர்பில் அவரால் குறிப்பிடப்பட்டிருந்தது.

தரிந்து ஜயவர்தனவை பிரதம ஆசிரியராக கொண்ட www.medialk.com  செய்தி இணையத்தளம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ள முறை

கடந்த 2021 ஜூன் 29ஆம் திகதி  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுப்பிய கேள்வியொன்றுக்கு ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த பதிலே குறித்த செய்தியின் மூலமாகும்.

அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் அவதானிக்கும் போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் 'Borumai kiyanne soba dhahama jayagani - Aniwarwen see prbakaran and other Criminals' எனும் கருத்துப் பதிவு பதிலில் கடுமையானதொரு எச்சரிக்கை உள்ளடங்கியிருப்பதாக ஊடக அமைப்புக்களின் கூட்டு எனும்  வகையில் நாம் நம்புகின்றோம்.

பொய்யான செய்தியை பிரசுரித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு தற்போதும்  தடுப்பில் உள்ள பெரும்பாலானோருக்கு எதிராக முறையாக நீதிமன்றங்களில்  குற்றச்சாட்டுக்கள் கூட முன்வைக்கப்பட்டிராத  பின்னணியில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அளித்துள்ள பதில் கருத்துக்கள் தொடர்பில்  மிக்க அவதானம் செலுத்துமாறு கோருகிறோம். 

அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணை ஒன்றினை  முன்னெடுத்து, ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும்  கோருகின்றோம்.

 நன்றி.

 இப்படிக்கு,
 விசுவாசமுள்ள,

 ஊடக  அமைப்புக்களின் கூட்டு சார்பில்

தர்மசிறி லங்காபேலி,
செயலாளர்,
 ஊடக சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம்

சீதா ரஞ்சனி,
ஏற்பாட்டாளர்,
சுதந்திர  ஊடக அமைப்பு

துமிந்த சம்பத்,
 தலைவர்,
 இலங்கை தொழிற்சார் ஊடகவியலாளர்களின் சங்கம்

என்.எம்.அமீன்,
தலைவர்,
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்

கணபதிப்பிள்ளை சர்வாணந்தா,
செயலாளர்,
 தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம்


இந்துனில் உஸ்கொட ஆரச்சி
செயலாளர்,
இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம்.

பிரதி :
1) தலைவர் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு