ஆண் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோம் செய்யப்படுவதை கண்டுகொள்ளாத சமூகமா நாம்?

ஆண் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோம் செய்யப்படுவதை கண்டுகொள்ளாத சமூகமா நாம்?

அஹ்ஸன் அப்தர்  

பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பது இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் அனைவரும் தற்போது எதிர்கொள்ளும் பாரியதொரு சமூகப்பிரச்சினை ஆகும். அதேநேரம் குறித்த பிரச்சினைக்கு பாலினமும் ஒரு விதிவிலக்கு அல்ல என்று உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் இதுவென்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பெண்கள் மற்றும் சிறுமிகளைப் போலவே ஆண்களும் எங்கள் சமூகத்தில் துஷ்பிரயோங்களுக்கு உள்ளாகின்றார்கள். ஆனால் சமூகத்தில் ஆண்கள் பற்றியும் ஆண்மை பற்றியும் உள்ள அணுகுமுறைகள் மற்றும் ஸ்டீரியோடைப் சிந்தனைகளின் காரணமாக அது தொடர்பான வாத பிரதிவாதங்கள் ஒரு குருகிய வட்டத்திற்குள் ஒடுங்கிப் போயிருக்கின்றன.

பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்கின்ற ஆண் சிறுவர்களே இதனால் அதிகமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றார்கள். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் ஆண் சிறுவர்கள் சகலரும்  சிறுமிகள் எதிர்கொள்ளும் அதே விளைவுகளை அனுபவிக்கிறார்கள்.

மேலும் தங்களது உடல் நிலை மற்றும் பாலியல் அனுபவங்களுக்கு ஏற்ப தனித்துவமான பிற சவால்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இலங்கையில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

தேசிய பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி கடந்த வருடம் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 1,134 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள். கொழும்பை அடுத்து கம்பஹா மாவட்டமும் அதனை அடுத்து குருணாகல் மாவட்டமும் சிறுவர் துஷ்பிரகேயாங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ள மாவட்டங்களாக கணிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் சிறுமிகளை விட ஆண் சிறுவர்களே அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதாகவும் இது கண்டுகொள்ளப்படாத ஒன்றாக இருப்பதாகவும் விரிவுரையாளர் அஸ்வினி பெர்னான்டோ தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் "சிறுமிகளைப் போல ஆண் சிறுவர்களில் கன்னித்தன்மை இல்லாமை கரப்பமடையாமை மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கள் சிதைவடையாமை போன்ற காரணங்களால் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலும் கண்டுகொள்ளப்படாதவர்களாக இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

துஷ்பிரயோகங்களை அனுபவித்த ஆண் சிறுவர்கள் அதிகம் குழப்பம் அடைகிறார்கள். அவ்வாறான சிறுவர்கள் குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதுடன் தவறான பாலியல் நம்பிக்கைகளையும் தம்மிடையே வளர்த்துக்கொள்கிறார்கள்.

விறைப்பு அல்லது விந்து வெளியேற்றத்தை அனுபவித்த பல சிறுவர்கள் குழப்பமடைந்து இதன் பொருள் என்னவென்று தெரியாமல் உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.

குறித்த சிறுவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உள வள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்க வேண்டியது கட்டாமாக இருக்கின்றபோதிலும் இவ்வாறு துஷ்பிரயோகங்களை அனுபவித்தவர்களை பாடசாலை மட்டத்தில் இருந்து இனங்காண அல்லது இது தொடர்பாக விழிப்புட்டுவதற்கு எந்தவிதமான பொறிமுறையும் இலங்கையில் இல்லை என்பது ஏமாற்றத்திற்குறிய விடயமாகும்.

இலங்கையில் 1945ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வி முறையில் பாலியல் கல்வியை போதிப்பதற்கான பொறிமுறைகள் கிடையாது. இவ்வாறனதொரு நிலைமையில் ஆண் சிறுவர்களின் பாலியல் நடத்தைகள் மற்றும் நம்பிக்கைகளில் விகாரம் இருப்பதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.

பெற்றோர்களும் இது தொடர்பாக விழிப்புடன் இல்லாத நிலையில் அநேகமான ஆண் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் நிலைமை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் பாதிக்கப்படும் இந்த சிறுவர்கள் பெரியவர்களாகி மீண்டும் அதே செயலைச் செய்யத்தூண்டப்படுகிறார்கள். சுழற்சி முறையில் நடக்கும் இந்தச் செயற்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு ஒரு நாளும் முடிவு கட்ட முடியாத நிலைமையைத் தோற்றுவிக்கின்றது.

பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக குறித்த பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இடம்பெறுகின்ற ஆள்சார் அழுத்தத்திற்கு அப்பால் சமூகத்தினால் வழங்கப்படும் வீணான அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு புறம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் பாதகமான மற்றும் வேதனைமிக்க விளைவுகள் சாதாரணமானதல்ல. பிள்ளை மீது ஏற்படுகின்ற காயம், வளர்ச்சி மட்டுப்படுத்தப்படல், கற்றல் கோளாறுகள், நடத்தை முறை, சிகிச்சைசார் சிக்கல்கள், அடிமையாதல், தற்கொலை மனநிலை என்பன வாழ்நாள் முழுவதும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனைப் பாதிக்கும் விடயமாக இருக்கலாம்.

மறுபுறம் சமூக, கலாசார நிலைத்திருத்தலில் ஏற்படுத்தும் பாதிப்பைப் போன்று இந்த நிலைமையை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் மனித செலவீனமும் பொருளாதார செலவீனமும் சாதாரணமானதல்ல.

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக கடந்த வருடாந்தம் சராசரியாக 1.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகினறது. இது மறைமுகமாக சிறுவர் துஷ்பிரயோகத்தினால் ஏற்பட்ட செலவினமாகும். சிறுவர் துஷ்பிரயோகம் காரணமாக புற்று நோய், சுவாசப்பை நோய், குடல் நோய், இருதய நோய், ஈரல் நோய், இனப்பெருக்க சுகாதார அபாயம் என்பன அதிகமாகும்.

உடல் அல்லது பாலியல் அல்லது கடும் பாரபட்சத்திற்கு ஆளானோரில் ¼ முதல் 1-3 வரையானோர் இந்த துஷ்பிரயோகத்திற்கு தமது பிள்ளைகளையும் ஆளாக்குகின்றனர். பெரியோரின் தற்கொலை முயற்சிகளில் 9.2% சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களினால் இடம்பெறுகின்றன.

துஷ்பிரயோக அனுபவம் கொண்ட ஒருவரை துஷ்பிரயோக அனுபவம் இல்லாத ஒருவருடன் ஒப்பிடும் போது புகைப்பிடிக்கும் அச்சுறுத்தல் 103% ஆகும். உடல் பருமனாகும் அச்சுறுத்தல் 95% ஆகும். மது பயன்படுத்தும் அச்சுறுத்தல் 192% ஆகும். தற்கொலை செய்து கொள்ளும் அச்சுறுத்தல் 43% ஆகும். (மூலம் – தேசிய பாதுகாப்புச் சபை)

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்காக 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த அடிப்படையில் வளர்ந்த சிறுவனிடம் பெரியவருக்கு சமனான அதிகாரம், சமமான அறிவு, சமமான உதவிக் கட்டமைப்பு இல்லாமையினால் அவர்கள் பாலியல் உறவுக்கு விருப்பத்தைத் தெரிவிக்க முடியாது.

ஏதேனுமொரு வகையில் அவ்வாறானதொரு பிள்ளை விருப்பத்தைத் தெரிவிக்கின்ற போதும் அதனை செல்லுபடியான விருப்பமாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் இலங்கையில் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது 16 ஆகும்.

சிறுவர்களுக்கு இடம்பெறுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்களில் 90 வீதமானவை இடம்பெறுவது பிள்ளை மிகவும் அறிமுகமான அல்லது பிள்ளையுடன் ஏதேனுமொரு தொடர்பைக் கொண்டுள்ள ஆள் மூலமாகும். பிள்ளை எந்த ஒரு வகையிலும் அறியாத ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் 10% ஆகும்.

மேலும் பல்வேறு துஷ்பிரயோகங்கள் பிள்ளையின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதில் உள்ள மிகவும் மோசமான சவால் இதுவாகும்.

மேற்சொன்ன விடயங்களைத் தாண்டி ஆண் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை இணையவெளியில் ஒரு நகைச்சுவையாக சித்திரிக்கும் மன நோய் பல்வேறு சமூக ஊடக பயனாளர்களுக்கு இருக்கிறது.

ஆசிரியை ஒருவரால் சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்திக்கு பலர் சிரித்தும் சிறுவனை அதிஷ்டஷாலி என்று சொல்லியும் பின்னூட்டம் எழுதியிருந்தார்கள்.

சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட செய்திகளை கண்டால் வழக்கமாக நடக்கின்ற ஒன்றுதானே என்று பலரும் அதை சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். ஆண் சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அதை நேரடியாக ஊக்குவிக்கும் வார்த்தைகளை எந்தவித தயக்கமும் இன்றி வெளியிடுகின்றார்கள்.

இவ்வாறான அனர்த்தங்கள் தமது பிள்ளைகளுக்கு நடக்காதவரை இதை ஊக்குவிக்கும் வார்த்தைளை இவர்கள் பாவித்துக் கொண்டேதான் இருப்பார்கள். இவ்வறானவர்களுக்கு உள வள துணையாளரின் ஆலோசனை அவசியமான ஒன்றாகவே இருக்கின்றது.

இனிமேலாவது; பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து பேசும்போது ஆண் சிறுவர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஊடகங்கள் அனைத்தும் முடிந்த வரையில் மக்கள் புரித்துகொள்ளும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும். பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து ஆண் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.