வடக்கில் தடுப்பூசிக்கு தயங்கும் இளையோரும் அலட்சியப்படுத்தும் முதியோரும்

வடக்கில் தடுப்பூசிக்கு தயங்கும் இளையோரும் அலட்சியப்படுத்தும் முதியோரும்

ஆர்.ராம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாண்டவம் கோரமடைந்தே செல்கின்றமை பகிரங்கமானது. இதனால் தான் முடக்கல் நிலைக்கு முரண்டுபிடித்த அரசாங்கம் கூட எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் முழுமையான முடக்கலை நீடிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளது.

கூடவே, உயிராபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடன் தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டினையும் வேகப்படுத்தியுள்ளது. தடுப்பூசியை வழங்குவது மட்டுமே கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்று அரசாங்கம் கருதுகின்றது.

அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பல உள்ளன. எவ்வாறாயினும், கடந்த வாரத்தில் மட்டும் நாட்டில் 13 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது சர்வதேச ரீதியில் முதன் நிலையாக உள்ளதென்று 'Our World in Data' என்ற இணைய தளத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

“தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 11.5 மில்லியன் பேர் 30வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 76 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது” என்று கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிடுகின்றார்.

அதேநேரம், “18 வயது முதல் 30 வயது வரையிலானவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 3.7 பேர் வரையிலானவர்கள் இந்த வயதெல்லைக்குள் தடுப்பூசி பெற வேண்டியவர்களாக உள்ளார்கள்.

அதற்குரிய விரைந்த பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 வயது முதல் 18 வயதான பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வயதெல்லைக்குள் நாடளாவிய ரீதியில் 3.5 மில்லியன் பேர் உள்ளனர்” என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.  

இலங்கையில் அஸ்ட்ராஷெனிக்கா, சினோபார்ம், ஸ்புட்னிக் வீ, பைசர், மொடோனா ஆகிய ஐந்து வகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றை வழங்குவதற்கான மக்கள் குழுவினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதில் குழப்பங்கள் நீடிக்கின்றன.

ஏனென்றால் இதில் வாக்கு வங்கி அரசியலும் செல்வாக்குச் செலுத்தாமலில்லை. குறிப்பாக, செயற்றிறனில் சிறந்த தடுப்பூசியாக இலங்கையர்கள் நம்பிக்கொண்டிருக்கும் பைசர், ஆபத்துக்கள் நிறைந்த கரையோர மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இது போன்று தான், அஸ்ட்ராஷெனிக்காவிற்கும் காரணம் கூறப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியே அதிகளவில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு, சீனாவின் பரந்தளவிலான விநியோகம் காரணமாகின்றது.

இதனால், பல தரப்பினர் பைசர், அஸ்ட்ராஷெனிக்கா, ஸ்புட்னிக் வீ மற்றும் மொடோர்னா தடுப்பூசி விநியோகிக்கும் இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏதோவொரு வகையில் அத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் போதும் என்ற மனோநிலையில் இயலுமான தந்திரோபாயங்களையெல்லாம் பொதுமக்கள் கையில் எடுத்துள்ளனர்.

தற்போதும் கூட முயற்சித்தும் வருகின்றர். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இந்நிலைமைகள் அதிகமாக இருக்கின்றன. வட மாகாணத்தின் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் சினோபார்மே வழங்கப்படுகின்றது. மன்னாருக்கு மட்டும், ஆபத்தான பிரதேசம் என்ற அடிப்படையில் பைசர் விநியோகிக்கப்பட்டது.

ஆனால், வடக்கின் இதர பகுதிகளிலிருந்து மன்னார் நோக்கி படையெடுத்தவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு பைசரைப் பெறுவதும் சாத்தியமாகியிருகின்றது. இவ்விதமான நிலைமைகள் பல இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றமையால் உருவான குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவே பைசரை செலுத்தும் பொறுப்பு இராணுவத்திடம் சென்றடைந்திருக்கின்றது.

“பைசர் மற்றும் அஸ்ட்ராசெனிக்கா ஆகிய தடுப்பூசிகள் முறையின்றி, செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது” என்று கூறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, “உரிய பதிவுகளின்றியே அவை வழங்கப்பட்டுள்ளன” என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் காலத்தில் இராணுவ வைத்தியசாலையில் மட்டுமே உரிய காரணங்களின் அடிப்படையில் பைசர் வழங்கப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.

ஆனால், இராணுவம் பைசரை விநியோகிக்க ஆரம்பித்த பின்னரும், குழறுபடிகள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அதுவொருபுறமிருக்கையில், வட மாகாணத்தில் கடந்த இரண்டாம் திகதி வெளியிடப்பட்ட தகவல்களின் பிரகாரம், 38 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், வடக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் அதிகரித்தே வருகின்றது. குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் மட்டும் கடந்த 2020 மார்ச்சிலிருந்து கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு வரையில் 13ஆயிரத்து 349பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வடக்கில் குறிப்பிட்டதொரு இளையவர்களும், முதியவர்களும் உள்ளடங்கலான குழுவினர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதிலிருந்து தவிர்ந்தே இருப்பதற்கு விரும்புகின்றார்கள்.

இவ்விதமாக இருப்பதற்கு அவர்கள் சில காரணங்களையும் முன்வைக்கின்றார்கள் என்று களத்தில் பணியாற்றி வரும் பெயர் குறிப்பிட விரும்பாத  பிராந்திய சுகாதார பிரதி பணிப்பாளர்களும், பொதுசுகாதார அதிகாரிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

•    இவ்வாறான மனோநிலையில் உள்ள இளையவர்களில்
•    பேச்சளவில் வெளிநாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் மற்றும் துணையை தெரிவு செய்துள்ளவர்கள்
•    எதிர்காலத்தில் வெளிநாட்டில் திருமணம் முடிப்பதற்கு காத்திருப்பவர்கள்
• உறவினர்கள் வெளிநாடுகளுக்கு அழைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள்
•    வெளிநாடே தமது எதிர்காலத்திற்கு வளமூட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள்,
• வெளிநாடுகளில் மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்கான முனைப்புக்களை கொண்டிருப்பவர்கள்

ஆகிய தரப்பினர் வடக்கில் விநியோகிக்கப்படும் சினோபார்ம் பெற்றுக்கொள்வதற்கு தயக்கம் காண்பிக்கின்றார்கள். சினோபார்மைப் பெற்றுக்கொண்டால் தாங்களின் வெளிநாட்டுக்கனவு நனவாகாது என்றே கருதுகின்றார்கள்.

அதேநேரம், முதியவர்களில், "கொடூரமான போருக்குள் கூட வாழ்ந்துவிட்டோம் எஞ்சிய காலத்தினை கழிப்பதற்காக நாம் ஏன் ஊசியைப் போட வேண்டும்" என்று வாதங்கள் செய்து அர்த்தம் கற்பிக்கும் தரப்பினர் எந்தவொரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லாதவர்களாக உள்ளனர்.

இவற்றைவிட, இயல்பாகவே சீனா தொடர்பாக கொண்டிருக்கின்ற நேர்மறையான மனோநிலையும் குறித்த இளைய, முதியவர்களை சினோபார்மைப் பெற்றுக்கொள்வதற்கு தயக்கம் காண்பிக்கும் நிலைமையை தோற்றுவித்துள்ளது.

சினோபார்மைப் பொறுத்தவரையில், உலக சுகாதார ஸ்தாபனம் அவசரநிலைமைகளுக்காக பயன்படுத்துவதற்கே அனுமதி அளித்துள்ளது. இதனால், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஒரு நபரை கூட தடுப்பூசி செலுத்தப்பட்டவராக கொள்ளவில்லை.

அதற்காக, சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றவர்களை தனது நாட்டுக்குள் பிரவேசிக்க விடாது திரும்பி அனுப்புவிடுகின்றன என்பது இட்டுக்கட்டப்பட்ட கதையாகும். அது தவறானதொரு புரிதலுமாகும்.

மேற்படி நாடுகளின் தூதரகங்களுடனான உரையாடல்களின் அடிப்படையில் குறித்த நாடுகள் அங்கீகரித்த தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி பிரவேசிக்க முடியும். ஆனால் சினோபார்ம் உள்ளிட்ட தடுப்பூசியைப் பெற்றவர்கள் உட்பிரவேசிப்பதற்கான வரையறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகின்றது என்றே கூறப்படுகின்றது.

அதாவது,  சினோபார்ம் உள்ளிட்ட அந்நாடுகளின் அங்கீகாரமற்ற தடுப்பூசியை பெற்றவர்கள் அந்தந்த நாடுகளில் அமுலில் உள்ள கொரோனா வரையறைகளுக்கு அமைவாக உள்பிரவேசிக்கும் போதான தனிமைப்படுத்தல் உள்ளிட்ட இதர வரையறைகளை கடைப்பிக்க வேண்டியுள்ளது என்பதே யதார்த்தமாகவுள்ளது.

இவ்விடயம் பற்றிக் கூறும், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ

“சினோபார்ம் பற்றிய தவறான புரிதல்கள் அதிகமுள்ளன. எந்தவொரு நாடும் சினோபார்மைப் பெற்றுக்கொண்டவர்களை மீள அனுப்புவது கிடையாது. அந்தந்த நாடுகள் கொரோனா நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக வரையறைகளை அறிவித்துள்ளன. அவற்றைப் பின்பற்றுகின்றபோது அந்நாடுகளுக்குள் பிரவேசிக்க முடியும்” என்கிறார்.

“மேலும், சினோபார்ம் உள்ளிட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மேற்குறித்தவாறான நாடுகளுக்குள் பிரவேசித்தவுடன் அந்நாடுகள் அங்கீகரித்த தடுப்பூசிகள் உடனடியாக செலுத்தப்படும் என்றும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

அந்நாடுகளில் காணப்படுகின்ற பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ துறையினரின் ஆலோசனைக்கு அமைவாகவே அடுத்த கட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சினோபார்ம் உள்ளிட்ட தடுப்பூசியை செலுத்தியவருக்கு உடனடியாக பிறிதொரு தடுப்பூசியை செலுத்துவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் பற்றி அந்நாடுகளின் சுகாதாரத்துறையும் அறியாமல் இல்லை” என்றும் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ குறிப்பிடுகின்றார்.

ஆகவே இலங்கையில் சினோர்பார்பைப் பெற்றுவிட்டு வெளிநாடு சென்றால் அங்கு பிறிதொரு தடுப்பூசி வழங்கப்படும்போது பக்கவிளைவுகள், அல்லது முரணான நிலைமைகள் ஏற்பட்டு விடும் என்றும் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்பது உறுதியாகின்றது.

இவ்வாறிருக்க,  “கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு” ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்துகின்றார்.

“டெல்டா திரிபு மிக வேகமாக பரவி வரும் நிலையில் தாம் விரும்பும் தடுப்பூசி கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்காது அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் அனைத்து பொதுமக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

“எதிர்காலம் பற்றிய திட்டமிடல்களுக்கு அப்பால், சமகால உயிராபத்துக்களைத் தடுப்பதற்காக தடுப்பூசியைப் பெறுவது நன்மையான விடயமாகவே கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறுகின்றார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கமும் “கொரோனா ஆபத்துக்களில் இருந்து முதலில் உயிர்களை காத்துக்கொள்ள வேண்டும். முதியவர்களாக இருந்தாலும் சரி, இளையவர்களாக இருந்தாலும் சரி உயிராபத்துக்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கு ஏதாவதொரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று சுட்டிக் கூறுகின்றார்.

“கொரோனா மரணங்கள் பத்தாயிரத்தினை அண்மித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், 99சதவீதமான உயிரிழப்புக்கள் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கே நிகழ்ந்துள்ளது.

அத்துடன் அவ்வாறானவர்களே தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப்பிரிவுகளிலும் உள்ளனர்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டுகின்றார்.

18 முதல் 30 வரையான வயதெல்லைக்குள் உள்ளவர்களே அடுத்த கட்டமாக தடுப்பூசிக்கு விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இவ்வயதெல்லையினருக்காக தடுப்பூசி விநியோகம் ஆரம்பமாகிவிட்டது.

வடக்கில் விரைவில் விநியோகப் பணி ஆரம்பமாகவுள்ளது. எனவே வடக்கில் இவ்வயதெல்லைக்குள் உள்ள 2 இலட்சத்து 55ஆயிரத்து 184 இளைவர்களும்இதுபற்றிய புரிதலைக் கொண்டு உயிர்காப்புக்கான உடனடி தெரிவு குறித்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. 

நன்றி - ஞாயிறு வீரகேசரி 05.09.2021