கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்றுநோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள்

 கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்றுநோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள்

யூ.எல். மப்றூக்

"கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை தான் இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லை" என்கிறார் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேர்ந்த 40 வயதுடைய நிஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அவரின் 37 வயதான மனைவியும் தடுப்பூசி பெறவில்லை. தன்னுடைய மனைவிக்கு ஒவ்வாமை (அலர்ஜிக்) உள்ளதால் அவருக்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என்கிற முடிவுக்கு தான் வந்ததாக நிஷார் கூறுகின்றார். ஆனாலும் தனக்கு எந்தவித ஒவ்வாமையும் உடலில் இல்லை என்று கூறும் அவர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதில்லை என்கிற முடிவில் இருக்கின்றார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டாவது 'டோஸ்' அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரிவில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

முதலாவது 'டோஸ்' வழங்கப்பட்ட போதே, மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டதாக - அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். அகிலன் கூறினார்.

சுமார் 80 வயதான மூதாட்டியொருவர் கொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசியை ஆர்வத்துடன் பெற்றுக் கொள்ள வந்தமையை டொக்டர் அகிலன் மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

ஆனாலும் ஆங்காங்கே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளும், போலிப் பிரசாரங்களும் பரவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றினை நம்பிக் கொண்டு - சிலர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளத் தயங்கி வருகின்றனர்.

கொரானாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதலாவது 'டோஸ்'ஸை ஏற்றிக் கொண்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அன்சார் (45 வயது), இரண்டாவது 'டோஸ்'ஸை ஏற்றிக் கொள்வதில்லை என்றார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில்லை என்கிற முடிவுடனேயே தான் இருந்ததாகவும், ஆனால், பொது இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி அட்டையை அரசாங்கம் கட்டாயப்படுத்தப் போகிறது என்பதற்காகவே - தடுப்பூசியின் முதலாவது டோஸை தான் ஏற்றிக் கொண்டதாகவும் அன்சார் கூறினார்.

தனது ஆரோக்கியத்தில் கொவிட் தடுப்பூசி ஏதாவது பெரிய ஆபத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தி விடும் என்று அன்சார் அச்சப்பட்டார். முதலாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்ட அன்று, தான் அதிகளவில் சோர்வை உணர்ந்ததாகவும், தனக்கு பகல் நேரத்தில் அதிகளவு தூக்கம் ஏற்பட்டதாகவும் கூறிய அவர், இது தடுப்பூசியின் விளைவுதான் என்றார்.

கொவிட் தடுப்பூசி குறித்து இவ்வாறான எதிர்மறை மனநிலையுடன் இருந்த அன்சார், சில தினங்களுக்கு முன்னர் இரண்டாவது 'டோஸ்'ஸை ஏற்றிக் கொண்டார். கொவிட் தடுப்பூசி தொடர்பில் தான் பெற்றுக் கொண்ட விழிப்புணர்வு இந்த மாற்றத்தை தனக்குள் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

 கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் காரியாலத்தின் நிருவாகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியின் முதலாவது டோஸ் நேற்று வியாழக்கிழமை (16) வரை, 30 வயதுக்கு மேற்பட்ட 206,140 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என, பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என். ரமேஷ் கூறுகின்றார்.

"60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலரிடம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஒரு பயம் உள்ளது. அவர்கள் தங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என்கின்றனர். அதற்காக தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அவர்களை வற்புறுத்த முடியாது” என்று டொக்டர் ரமேஷ் கூறினார்.

'சைனோபாம்' தடுப்பூசி தரம் குறைந்தது என - சிலர் நினைத்துக் கொண்டு, அதை விடவும் நல்லதொரு தடுப்பூசி வருமா என எதிர்பார்த்தவாறு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டு, தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களும் உள்ளனர் என்றும் டொக்டர் ரமேஷ் தெரிவித்தார்.

"தடுப்பூசி போட்டுக் கொண்டால் குறுகிய காலத்துக்குள் மரணித்து விடுவார்கள் என்பதும் ஒரு கட்டுக்கதையாக இருக்கிறது. 'தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது' என்பதை காரணம் காட்டியும் சிலர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்து வருகின்றனர்.

தொற்று ஏற்படுவதைத் தடுப்பூசி சிலவேளைகளில் தடுகாது என்றாலும், கொவிட்டினால் மரணம் ஏற்படுவதை உயர்ந்த பட்சம் தடுப்பூசி தடுக்கும்” என அவர் விளக்கினார்.

மறுப்பதற்கான காரணங்கள்

எது எப்படியிருப்பினும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள மறுப்பவர்களும் தயங்குகின்றவர்களும் அதற்காக பல்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டேயிருக்கின்றனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை பெந்தகொஸ்தே தேவாலயத்தின் பொறுப்பாளராகவுள்ள அருட் சகோதரர் எஸ். இளங்கோ, "தனது மத நம்பிக்கையின் அடிப்படையில் - கொவிட் தடுப்பூசியை தான் ஏற்றிக் கொள்ளப்போவதில்லை" என்கிறார்.

பெந்தகொஸ்தே என்பது கிறிஸ்தவ மதப் பிரிவுகளில் ஒன்றாகும். கடந்த 21 வருடங்களாக எந்தவொரு நோய்க்கும் தான் மருந்துகளை எடுத்துக் கொண்டதில்லை என்று கூறும் அருட் சகோதரர் இளங்கோ; "நோயைத் தருபவரும் ஆண்டவர், அதற்கு நிவாரணம் வழங்குபவரும் அவரேதான்” என்கிறார்.

"வேலைப்பழு ஏற்படும் போதும், மனிதர்களின் வாழ்க்கைக்குள் பாவம் வரும் போதும், இறை நம்பிக்கையை ஆண்டவர் சோதித்துப் பார்க்க விரும்பும் போதும் மனிதனுக்கு நோய்கள் ஏற்படுகின்றன” என்று கூறும் அவர், தனக்கு நோய் ஏற்பட்ட அனைத்து தருணங்களிலும் ஆண்டவரை பிரார்த்தித்து நிவாரணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறுகின்றார்.

'கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை' என்கிற முடிவில் அருட் சகோதரர் இளங்கோ உள்ளபோதும், திருக்கோவில் பிரதேசத்தில் வசிக்கும் பெந்தகொஸ்தே பிரிவினரில் பெரும்பாலானோர், கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில், கிறிஸ்தவ மதப் பிரிவுளில் ஒன்றான இலங்கை மெதடிஸ்த சபையின் கருத்து வேறு விதமாக உள்ளது.

"கிறிஸ்தவ மத நம்பிக்கையின் படி, நோய்கள் வரும்போது அதற்காக மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை" என்கிறார் - இலங்கை மெதடிஸ்த சபையின் திருக்கோவில் தேவாலயத்துக்குப் பொறுப்பான முகாமைக் குரு அருட்தந்தை பி(B). மனோரஞ்சன். அந்த வகையில் கொவிட் தடுப்பூசியை கிறிஸ்தவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

"உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி" என்று - ஏசு கிறிஸ்து சொன்னமைக்கு அமைவாக, கொவிட் நோயிலிருந்து நாம் பாதுகாப்புப் பெறுவதோடு, நமது அயலவருக்கும் தொற்றாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறும் அவர், கொவிட் தடுப்பூசியை அனைவரும் ஏற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றார்.

கொவிட் தடுப்பூசி: எளிய விளக்கம்

கொவிட் தடுப்பூசி பற்றிய சரியான புரிதலின்மையும் கூட, அதனை சிலர் நிராகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

எனவே, கொவிட் தடுப்பூசி பற்றியும் அதன் உள்ளடக்கம் குறித்தும், சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கமளிக்குமாறு, பேராதனை பல்கலைக்கழக வைத்தியபீடத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மற்றும் வைராலஜிஸ்ட் பசீஹா நூர்டீனிடம் கேட்டபோது, அவர் விரிவாகப் பதிலளித்தார்.

"நோயை ஏற்படுத்தும் கிருமியை உயிரற்ற நிலையில், அல்லது அந்தக் கிருமியின் ஒரு பகுதியை அல்லது கிருமியின் மாதிரியை எடுத்து உடம்பினுள் செலுத்துவதே தடுப்பூசியாகும்” என்கிறார் பேராசிரியர் பசீஹா நூர்டீன்.

"அவ்வாறான தடுப்பூசியை செலுத்தும் போது - அதனைப் பெற்றுக் கொண்டவரின் உடலினுள், குறித்த கிருமிக்கான எதிர்ப்பு சக்தி (பிறபொருள் எதிரி) உருவாகும். அது - அந்த வகைக் கிருமியிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்" என்று அவர் விளக்கமளித்தார்.

"உதாரணமாக கொவிட் வைரஸை எடுத்துக் கொண்டால், அந்த தொற்று எங்களுக்கு ஏற்படாமல், அல்லது அந்தத் தொற்று ஏற்பட்டாலும் அது தீவிரமடையாமல், மரணத்தை ஏற்படுத்தாமல் எதிர்த்து நிற்கக்கூடியதொரு சக்தியை - உடலில் கொரோனா தடுப்பூசி ஏற்படுத்துகின்றது” என்று அவர் மேலும் விவரித்தார்.

"தடுப்பூசி (Vaccine) என்பது புதியதொன்றல்ல என்றும், உலகில் ஏராளமான தடுப்பூசிகள் உள்ளன" எனவும் அவர் கூறினார்.

உடலில் ஒவ்வாமை (அலர்ஜிக்) உள்ளவர்களில் சிலர் - கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளத் தயங்குகின்றமை குறித்து பேராசிரியர் பசீஹாவிடம் பேசியபோது, "அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.

"ஒவ்வாமையத் தூண்டும் எந்தவிதப் பதார்த்தங்களும் கொவிட் தடுப்பூசிகளில் இல்லை. எந்தவொரு தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் போதும் சிலருக்கு தலைவலி, காய்ச்சல் போன்றவை ஏற்படுவதுண்டு.

மேலும் மருத்துவ குழுவொன்றின் கண்காணிப்பின் கீழ்தான் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகிறது. அவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் 15 நிமிடங்கள் அங்கு தரிக்க வைத்தே அனுப்பப்படுகின்றனர்.

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு உடனடியாக ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு தாமதிக்க வைத்து அனுப்பப்படுகின்றனர்.  எனவே, ஒவ்வாமை (அலர்ஜிக்) உள்ளது என்பதற்காக - யாரும் கொவிட் தடுப்பூசியை புறக்கணிக்க வேண்டாம்" என்றும் பேராசிரியர் பசீஹா கேட்டுக் கொண்டார்.   

கொரோனா தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளும் தவறான பிரசாரங்களும் ஆங்காங்கே உள்ளபோதும், கல்முனைப் பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்டத்தில் வந்தமையினால், தடுப்பூசி பற்றிய தெளிவை பெற்றுக் கொள்வதற்கான காலம் அதிகானோருக்குக் கிடைத்துள்ளது என்கிறார் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என். ரமேஷ்.

அதனால் தாங்கள் எதிர்பார்த்த தொகையினரில் 90 வீதமானோர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"ஆனாலும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் - தடுப்பூசியை பெறுவதில் ஆர்வமற்றவர்களுக்கு அதனை வழங்குவது ஒரு சவாலாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.

"இருந்த போதும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 80 தொடக்கம் 85 சதவீதமானோர் தடுப்பூசியைப் பெற்று விட்டனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

"தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னர் அல்லது செலுத்திக் கொண்ட பின்னர் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டிய செயற்பாடுகள் ஏதாவது உள்ளனவா" என அவரிடம் கேட்டபோது; "அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தார்.

"கொவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ள நிலையில் தடுப்பூசி வழங்குவதில்லை. அவர் குணமடைந்து ஒரு மாதத்தின் பின்னர்தான் தடுப்பூசி வழங்க முடியும். அதேபோன்று காய்ச்சலுடன் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவும் கூடாது" என்றும் அவர் விளக்கமளித்தார்.