சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தின் உண்மை என்ன?

சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தின் உண்மை என்ன?

-அஹ்ஸன் அப்தர்-

"சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பற்றது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு மக்கள் மரணிக்கிறார்கள். இதன் காரணமாக கொவிட் - 19 இற்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசியினை ஒருபோதும் பெற்றுக்கொள்ளமாட்டேன்" என குருணாகல், மாவத்தகம பிரதேசத்தினைச் சேர்ந்த 23 வயதான ஏ.எச். ஸியாம் அஹமட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் தற்போது 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சினோபார்ம் தடுப்பூசி ஏற்ற மறுப்பு தெரிவிக்கும் கூலித் தொழிலாளியான ஸியாம், "அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைஸர் மற்றும் மொடர்னோ ஆகிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளத் தயார்" என்கிறார்.

ஒரு நாளைக்கு சராசரியாக நான்கு மணித்தியாலம் பேஸ்புக் பயன்படுத்தும் இவர், அதிகமாக மீம்களை ரசித்துப் பார்க்கும் ஒருவராக இருக்கிறார். சினோபார்ம் தொடர்பான எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ளாமல் சமூக ஊடகங்களில் வருகின்ற சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரங்களை மாத்திரம் நம்பி இவர் சினோபார்ம் தடுப்பூசியேற்றலை தவிர்த்து வருகின்றார்.

எனினும், "மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பேணல் மற்றும் அடிக்கடி தொற்றுநீக்கி கொண்டு கைகளை கழுவுதல் போன்ற விடயங்களின் மாத்திரம் மேற்கொள்வதன் மூலம்  கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முடியும்" என சியாம் கூறுகின்றார்.

மேற்படி சியாம் போன்ற 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் கொவிட் 19இற்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியினை ஏற்றாமல் தவிர்த்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. அது தொடர்பில் ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

எவ்வாறாயினும் "இலங்கையில் பயன்படுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் அனைத்தும் சர்வதேச தரம் வாய்ந்தவை என்றும் அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை" என  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

"தடுப்பூசிகள் தொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட சமூகத் தலைவர்கள் சிலர் மத்தியிலும் பல்வேறு முரண்பாடான கருத்துக்களை அவதானிக்க முடிகிறது. அத்துடன் சமூக வலைதளங்கள் ஊடாகவும் இந்த தடுப்பூசிகள் தொடர்பில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருவதையும் நாம் அறிகின்றோம்" என அவர் தெரிவித்தார்.

வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் கூறுவது போன்று சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் தடுப்பூசிகளுக்கு எதிராக நகைப்பு அல்லது நையாண்டி நோக்கில் பல்வேறு பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிராக பல பிரசாரங்கள் சமூக ஊடகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மீம்கள் மற்றும் பதிவுகளின் ஊடாக தடுப்பூசிகளை எதிர்க்கும் நிலைமைதான் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

"மக்களை பிழையாக வழிநடத்தக்கூடிய மீம்கள் மற்றும் சமூக ஊடகப்பதிவுகள் என்பன கொவிட்-19 தடுப்பூசிகளை பொதுமக்கள் புறக்கணிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக காணப்படுகின்றது" என சிரேஷ்ட ஊடகவியலாளர் அருண் அரோக்கியநாதன் தெரிவித்தார்.

மீம்கள் மற்றும் சமூக ஊடகப்பதிவுகள் என்பன இளைஞர்களின் முடிவெடுக்கும் விவாகாரங்களில் இன்று வெகுவாக தாக்கம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

"தற்காலத்தில் மீம்கள் மனிதர்களின் ஆர்வத்தைத் தூண்டும் சக்தி வாய்ந்த தொடர்பாடல் முறைகளில் ஒன்றாக இருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே கொவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய கேளிக்கையான மீம்கள் அது தொடர்பான பிழையான எண்ணங்களை தோற்றுவிக்கும் ஒன்றாக மாறியுள்ளது" என அருண் குறிப்பிட்டார்.

இதனால் குறித்த மீம்களை எதிர்த்து உண்மையை வெளிப்படுத்த அவர்களது முறைமையில் மீம்களை தயாரித்து தடுப்பூசிகளுக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொள்வது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக "தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளும் நபர்கள் ஆண்மைக் குறைவு அல்லது மலட்டுத் தன்மையை சந்திக்க நேரிடும்" என்று  சமூக ஊடங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பாலியல் தொற்று நோயியல் வைத்தியர் தில்ஷான் நிஸாம் கருத்துத் தெரிவிக்கையில்,

"கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வோருக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என்றும் ஆண்மைத் தன்மை குறைந்துவிடும் என்று கூறப்படுவது ஆதாரமற்ற விடயமாகும். அத்துடன் இதுவொரு பொய்யான தகவலாகும்.

தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட எவருக்கும் பிள்ளை பெறும் ஆற்றலிலோ ஆண்மைத் தன்மையிலோ எந்தவிதப் பாதிப்பும் இதுவரைக்கும் ஏற்படவில்லை. அத்துடன் பிள்ளைபெறும் பாக்கியத்தையும் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் தமக்கு மாத்திரம் உரிமை கோருவது நியாயமற்ற விடயமாகும்" என்றார்.

இதேவேளை, கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பாக பரப்பப்படும் போலியான விடயங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில் அவர்கள் அதற்கு சட்ட ரீதியாக பொறுப்பு கூற வேண்டியவர்களாக ஆகுவார்களென சட்டதரணி அஷோக் பரன் தெரிவித்தார்.

இணையத்தளங்களில் வருகின்ற செய்திகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் அவர் குறித்த போலிச்செய்திகளினை பரப்புகின்றவர்கள் சட்டத்தின் இரும்புக் கரங்களில் சிக்கினால் கட்டாயமாக தண்டிக்கப்டுவார்கள் என எச்சரிக்கை விடுக்கின்றார்.

இதேவேளை, "சினோபோர்ம் தடுப்பூசி சீனாவின் தயாரிப்பு என்றும் குறித்த தடுப்பூசி வியாபார நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாதகமான தடுப்பூசி" என்று ஸியாம் தொடர்ச்சியாக கூறி அந்த தடுப்பூசியினை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், சீனாவின் தேசிய உயிரியல் தொழில்நுட்பக் குழுவின் மேற்பார்வையின் கீழ் உயிரியல் தயாரிப்புகளுக்கான பீஜிங் கற்கை நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் இந்த சினோபாரம் தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் ஏழாம் திகதி உலக சுகாதார தாபனத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சினோபார்ம் தடுப்பூசியில் முற்றிலும் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸே காணப்படுகின்றது என்றும் அது எந்த வகையிலும் உடலில் செயற்படவோ பெருக்கமடையவோ நோயை உண்டாக்கவோ முடியாது என இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் 'மணமகன் தேவை' எனும் தலைப்பில் சினோபார்ம் தவிர்ந்த ஏனைய தடுப்புசிகளைப் போட்டுக்கொண்ட மனமகன் தேவை எனும் போலி விளம்பரமொன்றை அண்மையில் சமூக ஊடங்களில் காணக் கிடைத்தது.

இதுவொரு பொய்யான விளம்பரம் எனத் தெரிந்துகொண்டு சில இணையத்தளங்கள் அதனை பதிவிட்டதையும் அதவானிக்க முடிந்தது. போலிச்செய்திகள் பொதுமக்களை எந்தளவு பொதுமக்களை பிழையாக வழிநடத்தியிருக்கின்றன என்பதற்கு குறித்த விளம்பரம் மிகப்பெரியதொரு சான்றாகும்.

"தடுப்பூசிகளுக்கு எதிரான அவ்வாறான பதிவுகளைக் காணும்போது அவை தொடர்பான வீணான சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்" என உளவள துணை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

"அத்துடன் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் ஒரு பரிசோதனைக்காக சினோபார்ம் தடுப்புசிகள் வழங்கப்படுவதாகக் கூட மக்கள் நம்புகிறார்கள். இது போன்ற காரணங்களினால் ஏற்படும் பயம் அல்லது பதற்றம் போன்ற காரணங்களினால் கொவிட்-19 தடுப்பூசிகளை புறக்கணிக்கும் நிலைமை உருவாகின்றது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இதுவரையேற்றப்பட்ட தடுப்பூசிகளில் 11,70,060 சினோபார்மாகும் தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 9,439,573 சினோபார்மாகும் தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் ஏற்றப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசி காரணமாக  பெரிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக எந்தவிதமான முறைப்பாடும் இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது.

தொற்று நோயியல் தடுப்புப் பிரிவின் அறிக்கைகளின்படி இலங்கையில் இதுவரை கொவிட் 19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களில் 76.7 வீதமானவர்கள் கொவிட் - 19 எதிராக எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் ஆவர்.

இதேவேளை, சினோபார்ம் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சினோபார்ம் தடுப்பூசி டெல்டா வகைக்கு எதிராக மிகவும் திறமையாக செயற்படும் தடுப்பூசி என்று கண்டறிந்துள்ளார்கள்.

இந்தத் தடுப்பூசி டெல்டா வைரஸினை எதிர்த்து பிறபொருளெதிரிகளை சுரப்பதில் மிகவும் திறமையுடன் செயற்படுவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆய்வின் அடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் பெற்ற 95 சதவீதமானவர்களின் உடலில் கொவிட்-19 தொற்றினை சமாளிக்கத் தேவையான பிறபொருளெதிரிகள் உருவாகியுள்ளன.

"இந்த அறிக்கையின் முடிவு என்னவென்றால் டெல்டா மற்றும் பிற வகைகளுக்கு வரும்போது சினோபார்ம் தடுப்பூசி இயற்கையாகவே பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒத்த பிறபொருளெதிரிகளை தூண்டுகிறது, இது மிகவும் சிறந்தது" என பேராசிரியர் நீலிகா தெரிவித்துள்ளார். "

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தடுப்பூசிகள் தொடர்பாக  நம்பிக்கையை உருவாக்குவதற்கு இதுபோன்ற ஆய்வு செய்யப்பட்ட உண்மைத் தரவுகள் மிகவும் முக்கியமானது என பேராசியர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

"உங்களுக்கு கிடைக்கின்ற முதல் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி ஆகும். இதனால் கிடைக்கும் தடுப்பூசியை இன்றே ஏற்றிக்கொள்ளுங்கள்" என பேராசியர் நீலிகா கோரிக்கை விடுத்தார்.