வரவுசெலவுத் திட்டம் 2023 இல் நான்கு குறைபாடுகள்

வரவுசெலவுத் திட்டம் 2023 இல் நான்கு குறைபாடுகள்

சுனில் அபயவர்தன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தனது வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய போது, "நாங்கள் எங்கே தவறு செய்தோம்?" என்று அவரிடம் உள்ள மிக முக்கியமான கேள்வியைக் கேட்டார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க 1989ஆம் ஆண்டு கைத்தொழில் அமைச்சராக இருந்த போதும் இதே கேள்வியைக் கேட்டார். அதற்கான பதில் ஓர் ஆதாரமாக  இருந்த போதிலும் இப்போது கூட அந்நிலைமையை சரிசெய்வதற்கு அதிகமாக எதுவும் செய்யப்படவில்லை.

பாடங்கள் எதுவும் கற்கப்படவில்லை, அதே தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்க 30 வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சினையை கற்கை செய்தும், அதற்கான காரணங்களை அவர் சரியாகக் கண்டறியவில்லை என்பதே எளிய உண்மையாகும்.

இந்த நோக்கத்திற்காக, எனது ஆக்கம் நாம் அடைந்துள்ள குழப்பத்திற்கு பங்களித்த, தொடர்ந்து வந்த அரசாங்கத்தால் அதிகளவில் புறக்கணிக்கப்பட்ட நான்கு செயன்முறைகளை ஆராய்கிறது: அரச தலையீடு, கைத்தொழில்மயமாக்கல், அபிவிருத்தி வங்கியியல் மற்றும் தேசிய திட்டமிடல் என்பனவே அவையாகும்.

நாட்டின் முக்கிய பிரச்சினை எதிர்மறையான சென்மதி நிலுவையாக இருந்தால், வரவுசெலவுத்திட்டம் ஓர் சாத்தியமான தீர்வை உருவாக்க வேண்டும். "ஏற்றுமதி சார்ந்த போட்டிப் பொருளாதாரம்" மீது வரவு செலவுத்திட்டத்தின் கவனம் செலுத்தப்பட்டபோதிலும், இதை எவ்வாறு அடைவது என்பது பற்றி மேலும் குறிப்பிடப்படவில்லை.

"போட்டித்தன்மை" எனும் வார்த்தைக்கு ஒரு கவர்ச்சி உள்ளதுடன், மேலும் இங்கு இது கைத்தொழிற்துறையில் அரசின் தலையீட்டை அகற்றும் சூழலில் பயன்படுத்தப்படுகிறது. இங்குதான் ஜனாதிபதி புதிய சிந்தனைக்கு அழைப்பு விடுத்தாலும் கடந்த கால சித்தாந்த சார்பு அதன் முகத்தை காட்டுகிறது.

நவீன தாராளவாத சிந்தனையாளர்கள் அரசின் தலையீட்டை எதிர்க்கிறார்கள். சந்தைகள் தோல்வியடைகின்றன என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் சந்தைகளின் மாயத்தை நம்புகிறார்கள்.

அரசின் தலையீடு தொடர்பாக நமது சொந்த அனுபவத்தை முன்னிலைப்படுத்துவது சுவாரஸ்யமாக இருக்கும். கடந்த நான்கு தசாப்தங்களாக உள்ளுர் தொழிற்துறையின் ஒரே வெற்றிகரமான உதாரணம் ஆடைத் துறை ஆகும்.

அதன் அபிவிருத்தியானது, சர்வதேச தரப்பில் Multi Fiber ஒப்பந்தம் மற்றும் உள்ளூர் தரப்பில் 200 ஆடைத் தொழிற்சாலை நிகழ்ச்சித் திட்டம் ஆகிய இரண்டு தரப்பினரின் தலையீட்டின் மூலம் உருவானது.

உள்ளூர் இறக்குமதிக்கு மாற்றீடான கைத்தொழில்கள் போட்டித்தன்மையடைய உதவாமல் தாராளமயமாக்கியமை அப்போது செய்யப்பட்ட ஒரு முக்கிய தவறாகும். ஜனாதிபதி அவதானித்தபடி, ஏழு ஆண்டுகளாக (1970-1977) மூலதனத்தின் பற்றாக்குறையில் இருந்த கைத்தொழில்களை வெளிநாட்டு இறக்குமதிகளுடன் போட்டியிடுமாறு ஒரே இரவில் கேட்கப்பட்டன.

உண்மையில், தலையீடு, அது பயன்பட வேண்டிய இடத்தில் பயன்படுத்தப்படுவது, பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். ஒருவர் விரும்பினால், உயர் செயற்திறன் கொண்ட ஆசியப் பொருளாதாரங்களிலிருந்து (HPAEs) பல உதாரணங்களைப் பெறலாம்.

பெரும்பாலானவர்கள் தலையீடு என்பது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை (SOE) நிறுவுவதாக தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் இது தலையீட்டிற்கான காரணம் அல்ல. தலையீடு என்பது சந்தை சக்திகள் இல்லாத போதெல்லாம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக தேவையான சூழலை உருவாக்குவதை உள்ளடக்குகிறது.

தனியார் துறை பங்கு வகிக்கவில்லை என்றால் அல்லது அவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மட்டுமே SOE கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் கவலையளிக்கும் வகையில், தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கைத்தொழிற்துறை அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை.

பாதுகாப்புச் செலவீனங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் கல்விச் செலவீனங்கள் குறைப்புக்களை சந்தித்துள்ளது. புதிய கைத்தொழிற்துறை வலயங்கள் முன்மொழியப்பட்டுள்ள அதே நேரத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சில மூடப்பட்டுள்ளன.

இது மற்றொரு பிரச்சினையுடன் தொடர்புடையது. உள்ளூர் கடன்களுக்கான வட்டி செலுத்துகை பொது முதலீடுகளை விட இரு மடங்கு அதிகமாகும். ஆயினும்கூட, வரவு செலவுத் திட்டம் பொது நிதிக்கான அணுகுமுறையில் மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது.

அந்த வகையில், வரவு செலவுத் திட்டத்தில் உள்ள மற்றொரு முக்கிய குறைபாடு என்னவென்றால், அது அபிவிருத்திக்கான நிதியை சந்தை சக்திகளுக்கு விட்டுவிடுகிறது.

கனடா போன்ற நாடுகள் இத்தகைய உத்திகளைப் பயன்படுத்திய போதிலும், அபிவிருத்தி செயன்முறைக்கான அபிவிருத்தி வங்கியியலின் பொருத்தப்பாடு ஓரங்கட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

அபிவிருத்தி வங்கியியலுடனான திறந்த சந்தைகளில் வாதிடப்படுகின்ற பிரச்சினை, தலையீடாகக் கருதப்படுவதுடன் நேரடியாக "வாஷிங்டன் தீர்மானத்திற்கு" முரணான சலுகை வட்டி விகிதங்களாகும்.

இருப்பினும், ஒருவர் சித்தாந்தத்தை கைவிட்டு எளிய பொது அறிவைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும். மற்றொரு இடைவெளி, அநேகமாக இன்னும் மிகவும் கவலைக்குரியதாகவுள்ள அபிவிருத்தித் திட்டத்தின் பற்றாக்குறையாகும்.

எல்லாவற்றையும் சந்தைக்கு விட்டுவிட வேண்டும் என்று கருதுகின்ற நவீனதாராளவாதிகளுக்கு திட்டமிடல் என்பது வெறுப்பூட்டும் செயலாக இருந்ததையும் இருக்கின்றதையும் நாம் அறிவோம். சந்தை தோல்வியின் விளைவுகளை நாங்கள் நேரடியாகக் கண்டோம்.

ஒரு அபிவிருத்தித் திட்டம் இருக்கும் போது, பொருளாதார இலக்குகள் எங்கு எட்டப்படுகின்றன, எங்கு அடையவில்லை என்பதைக் கவனிக்க முடிவதுடன், இது தேவைப்படும் இடங்களில் சரிப்படுத்தும் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.

சிங்கப்பூர் உட்பட அனைத்து உயர் செயற்திறன் கொண்ட ஆசிய பொருளாதாரங்களும் (HPAEs), அதன் அபிவிருத்தியின் ஆரம்ப கட்டத்தில் ஒரு திட்டத்தின் அடிப்படையில் விருத்திசெய்யப்பட்டது.

ஒரு அபிவிருத்தித் திட்டத்தால் ஒரு தேசிய திட்டத்தின் அடிப்படையை உருவாக்க முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அதில் முன்மொழியப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற வகையில் அதை உருவாக்க முடியும்.

அத்தகைய திட்டம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும், ஆகவே அது உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரை மட்டுமல்லாது, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் உள்ளடக்கும்.

இது நாடு எங்கு செல்கிறது என்பதற்கான முழுமையான பார்வையை வழங்குவதோடு, தற்போது நாம் காணும் குறிப்பிட்ட மாற்றங்களின் கலாச்சாரத்திற்கு மாறாக, அனைவருக்கும் விடயங்களை இலகுவாக்குகின்றது.

எப்படியிருந்தாலும், ஒன்று தெளிவாக உள்ளது: அபிவிருத்திக்கு நிதியளிப்பதற்கு திருப்திகரமான முறைமை இல்லையென்றால், தேவையான அளவில் புதிய கைத்தொழிற்துறை எதுவும் இருக்காதென்பதுடன், தற்போதுள்ள கைத்தொழிற்துறைகளும் தற்போதுள்ள நிலைக்கு அப்பால் விரிவடையாமல் இருப்பதற்கு அல்லது கீழே வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்புள்ளது.

வரவு செலவுத் திட்டங்கள் அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதையும், அதற்கு இந்த வரவு செலவுத் திட்டமும் வேறுபட்டதல்ல என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இப்போது நாட்டில் உள்ள சூழ்நிலையின் காரணமாக, அந்த அனுமானங்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் IMF நிதியுதவியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் IMF ஒப்பந்தத்திற்குப் பிறகு மேலதிக இருதரப்பு நிதியுதவிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் வரவுசெலவுத் திட்ட விபரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கையுடன் வெளிப்படும்.

ஸ்ரீலங்கா டெலிகொம் போன்ற சொத்துக்களின் விற்பனையானது வெளிநாட்டு இருப்புக்களை மேம்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது: இது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். நடக்காமல் போனால், எதிர்பார்க்கும் வருமானத்தில் பற்றாக்குறை ஏற்படும்.

இப்போது நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய காரணி நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது: கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பித்தவுடன் என்ன நடக்கும்? கடனை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முடியும் என்றாலும், இந்த பொறுப்புகளைச் சந்திக்க நாம் தயாராக வேண்டிய சலுகைக் காலம் அதுவாகும்.

மிகத் தொலைவில் இல்லாத எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு சரியான முயற்சியை மேற்கொள்கிறோமா? பல ஆண்டுகளாக இலங்கை மத்திய வங்கி தனது வகிபாகத்தை சரியாகச் ஆற்றவில்லை என்பதுடன் அடுத்தடுத்த ஆட்சிகள் அழிவுகரமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தான் ஒரு பார்வையாளனாக இருப்பதில் திருப்தி அடைந்துள்ளமை வருத்தமளிக்கின்றது.

உண்மையில், சில சமயங்களில் மத்திய வங்கி அத்தகைய கொள்கைகளை பின்பற்ற ஊக்குவித்துள்ளது. ஒப்பீட்டளவிலான வரவு-செலவுத் திட்டத்துடன் நாம் புரிந்து கொள்ள வேண்டிய வெளிப்படையான உண்மை என்னவென்றால், உலகில் எந்த நாடும் திறந்த சந்தைகளால் மட்டும் அபிவிருத்தியடையவில்லை.

இன்றைய அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்கள் கூட தங்கள் அபிவிருத்தியின் ஆரம்ப கட்டங்களில் பெரும் தலையீட்டைக் கொண்டிருந்தன. பேராசிரியர் ஹா-ஜூன் சாங் தனது  "Kicking Away the Ladder" என்ற புத்தகத்தில் வாதிடுவது போல, இந்த நாடுகள் தங்களை மற்றவர்கள் பின்பற்றுவதை விரும்புவதில்லை.

HPAEகளை அவர்களின் அபிவிருத்தியில் வழிநடத்திய தத்துவவியல் பொது அறிவைத் தவிர வேறெந்த குறிப்பான சித்தாந்தமும் அல்ல.  இலங்கை அந்த பொதுவான அறிவை அதிகமா கொண்டிருந்தால், மற்றும் அது கொண்டிருக்கின்ற குறைவான பொதுவான அறிவைப் பயன்படுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த நோக்கத்திற்காக, 1950 இல் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா மத்திய வங்கியைத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் அவதானித்த விடயமான நாடு முன்னேற வேண்டுமானால், அது அபிவிருத்திக்கான "மற்றைய சாத்தியக் கூறுகளை" பார்க்க வேண்டும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீள்பார்வை செய்ய வேண்டும்.

சுனில் அபயவர்த்தன இலங்கையின் பல முக்கிய திட்டங்களை நிறைவு செய்த மிகப்பெரிய கனரக கட்டுமான நிறுவனமான CDE இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்தார்.

இன்று, அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் பேரினப்பொருளாதார மாணவராவார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான இவர், தற்போது தனது கலாநிதிக் கற்கையில் (Ph.D.) ஈடுபட்டுள்ளார். அவரை sunil.ab@hotmail.com இல் தொடர்பு கொள்ளலாம்.

Factum என்பது ஆசியாவை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.