புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸினால் அஜித்த ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், சமன்பிரிய ஹேரத் இதனை வழிமொழிந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேயரத்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், எதிர்க்கட்சியின்முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல இதனை வழிமொழிந்தார்.

பெரும் அளவிலான பணத்தைச் செலவுசெய்து வாக்கெடுப்பை நடத்தாது, யாராவது ஒருவருடைய பெயரை மாத்திரம் முன்மொழியுமாறு தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பத்து கட்சிகளின் சார்பில் விமல் வீரவன்ச, சுயாதீனக் குழுவின் சார்பில் மைத்திரிபால சிறிசேன, சமிந்த விஜேயசிறி, நளின் பண்டார, சந்திம வீரக்கொடி, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

முன்மொழியப்பட்ட இரண்டு பெயர்களில் ஒரு பெயரை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இல்லாவிட்டால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கமைய, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இதில் அஜித் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 109 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்னவுக்கு ஆதரவாக 78 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதில் 23 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக அமைந்ததுடன், 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது சமுகமளித்திருக்கவில்லையெனக் குறிப்பிடப்பட்டது.

இதற்கமைய 31 மேலதிக வாக்குகளால் புதிய பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பதவியிலிருந்து விலகியிருந்ததுடன், குறித்த பதவிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் மேலதிக வாக்குகளால் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

இருந்தபோதும் கடந்த 06ஆம் திகதி மீண்டும் அவர் அப்பதவியை இராஜினாமாச் செய்தார்.