'பழைய முறையிலேனும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்'

'பழைய முறையிலேனும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்'

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேவையான புதிய தேர்தல் திருத்தச் சட்டங்களை கொண்டுவர முடியவில்லை என்றால், பழைய தேர்தல் முறையிலாவது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென  தேர்தல்
சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த விசேட குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்
போதே அதன் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 160 பேர் இந்தக் குழுவில் தங்களது யோசனைகளை முன்வைத்தனர். தேர்தல் காலங்களில் ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்கிற யோசனைகளை தேர்தல் ஆணைக்குழு பாராளுமன்றத்துக்கு முன்வைத்துள்ளது.

இதனை பின்பற்ற வேண்டும் எனவும் யோசனை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 70 அரசியல் கட்சிகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன எனினும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகிறன.

பிரதேச சபை உள்ளிட்ட வேறு நிறுவனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற அடிப்படையில் அவற்றை தனித்தனியாக பிரிக்க வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பில் ஊடகங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், வேட்பாளர்கள் ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று தங்களது தேர்தலுக்கு அதிகளவில் செலவழித்து வருகின்றனர்.

செலவுகளை அறிக்கை இடுவதற்கான சட்டங்கள் சரியாக செயல்படுவதில்லை. எனவே இது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.