இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் கோவை வரைவு

இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் கோவை வரைவு

பி.கே.பாலச்சந்திரன்

சர்வாதிகாரம் மற்றும் தொன்மையான மதவாதத்தை நோக்கிய தெளிவான திருப்பத்தில், இந்தோனேசிய பாராளுமன்றம் டிசம்பர் கடைசியில், அவதூறு சட்டத்தின் எல்லையை நீட்டிக்கின்ற, அரச நிறுவனங்களை விமர்சிப்பதைத் தடைசெய்கின்ற மற்றும் திருமணத்திற்கு புறம்பாக இணைந்து வாழ்தல் மற்றும் பாலியல் தொடர்புகளை குற்றமாக்குகின்ற ஒரு புதிய குற்றவியல் சட்டக்கோவையை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வஹாபி இஸ்லாத்தை நசுக்குவதற்கு முன்மொழியப்பட்ட கோவை, உள்நாட்டு அரசியல் அபிவிருத்திகள் மற்றும் தேர்தல் தேவைப்பாடுகளில் வேரூன்றியுள்ளது.

உள்நாட்டு அரசியல் மற்றும் சமூக அக்கறைகளில் இருந்து வெளியுறவுக் கொள்கையை முழுமையாக விலக்க முடியாது என்பதால், முன்மொழியப்பட்ட கோவை இந்தோனேசியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளிலும் செல்வாக்கு செலுத்தும்.

உண்மையில், ஜகார்த்தா ஏற்கனவே அதன் வெளியுறவுக் கொள்கையில் அதன் இஸ்லாமிய சார்பு நிலையை இணைத்துள்ளதுடன், உலகின் அதிகமான குடித்தொகை கொண்ட முஸ்லீம் நாடாக அதன் நிலையை மேம்படுத்துகிறது (இருந்தபோதிலும் இன்னமும் முறைப்படி "மதச்சார்பற்றது").

சர்ச்சைக்குரிய ஏற்பாடுகள்

முன்மொழியப்பட்ட குற்றவியல் சட்டக்கோவையில் உள்ள சர்ச்சைக்குரிய ஏற்பாடுகளில் பின்வருவன அடங்கும். இந்தோனேசியாவில் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு ஏற்கனவே ஓர் குற்றமாக உள்ளதுடன் தண்டனையாக சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது.

ஆனால் வரைவுக் கோவை இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிற மதங்களான புரட்டஸ்சாந்து, கத்தோலிக்கம், இந்து மதம், புத்த மதம் மற்றும் கன்பூசியனிசம் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் அவதூறுச் சட்டத்தின் எல்லையை விரிவுபடுத்துகிறது.

இதன் விளைவு இந்தோனேசியாவின் மதப்பிரிவு முழுவதும் ஏராளமான அவதூறு குற்றச்சாட்டுகளை அதிகரிப்பதனை சாத்தியமாக்குவதாக இருக்கும்.

புதிய சட்டக்கோவையின் கீழ், திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வாழும் ஒரு குற்றத்தைச் செய்தால் ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், தம்பதியரின் பெற்றோர், குழந்தைகள் அல்லது வாழ்க்கைத் துணையால் முறைப்பாடளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஏற்பாடு குறிப்பாக LGBTQ சமூகத்தின் உறுப்பினர்களை இலக்கு வைக்கும். இந்தோனேசியாவில் ஓரினச்சேர்க்கை ஏற்கனவே சட்டவிரோதமானதாகும்.

திருமணத்திற்கு புறம்பாக உடலுறவு கொள்வது குற்றச் செயலாகக் கருதப்படும். முன்மொழியப்பட்ட கோவை பெற்றோர்கள் அல்லது பிள்ளைகள் திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொண்டதாக சந்தேகிக்கப்பட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு அனுமதிக்கிறது.

திருமணத்திற்கு முன்னரான உடலுறவு மற்றும் விபச்சாரத்திற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவை அனைத்திலும் உள்ள ஆபத்து என்னவென்றால், இது நவீன சமுதாயத்தின் முக்கிய அம்சமான வெவ்வேறு பாலினத்தவர்கள் இணைந்து பணியாற்றுவதை கட்டுப்படுத்தும். கலப்பு கல்விமுறை களங்கப்படுத்தப்படலாம்.

அடிப்படைவாதத்தின் எழுச்சி

இந்தோனேசியாவில் இஸ்லாமியவாதத்தின் எழுச்சி பற்றிய தனது ஆய்வறிக்கையில், புது டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் பாலதாஸ் கோஷல், சமீப காலங்களில் இந்தோனேசியாவில் இஸ்லாமியமயமாக்கலின் பயணத்தை விவரிக்கிறார்.

2021ஆம் ஆண்டில், மதச்சார்பற்ற துருக்கியின் ஸ்தாபக தந்தையான முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் பெயரை ஜகார்த்தாவில் உள்ள ஒரு வீதிக்கு அரசாங்கம் பெயரிட விரும்பியதை அவர் நினைவு கூர்ந்தார்.

துருக்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மீள்பெயரிடுதல் இடம்பெற்றதுடன், துருக்கி இந்தோனேசிய தலைவர் சுகர்னோவின் பெயரை மாற்றுவதற்கு ஏற்றுக்கொண்டது.

ஆனால் இந்தோனேசிய இஸ்லாமிய மதகுருமார் அட்டதுர்க் ஒரு மதங்களுக்கு எதிரானவர் என்று கூறி ஒப்பந்தத்தை எதிர்த்தனர். தெரு ஆர்ப்பாட்டங்கள் பெயர் மாற்றத்தை முறியடித்தன. 2017ஆம் ஆண்டில், அப்போதைய ஜகார்த்தாவின் ஆளுநரான, சீன கிறிஸ்தவரான பாசுகி "அஹோக்" த்ஜஹாஜா பூர்ணமாவுக்கு எதிராக வீதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அஹோக் குர்ஆனில் இருந்து ஒரு வசனத்தை குறிப்பிட்ட பிறகு "அவதூறு" என்று குற்றம் சாட்டப்பட்டார். அஹோக் ஒரு சீனர் மற்றும் கிறிஸ்தவர் என்பதால் மட்டுமே இது மேற்கொள்ளப்பட்டது என்ற பரவலான உணர்வு இருந்தது.

கடந்த தேர்தலில், விடோடோ ஓர் பலம்வாய்ந்த எதிர்த்தரப்பால் ஒரு சீன கிறிஸ்தவராக சித்தரிக்கப்பட்டார், அதேநேரம் உண்மையில் அவர் ஓர் இந்தோனேசிய முஸ்லீமாவார்.

“இந்தோனேசியாவின் அனைத்து மாகாணங்களிலும் ஷரியா சட்டம் பரவி வருகிறது. குடிமக்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சட்டங்களை இயற்றுவதுடன், அவற்றை முஸ்லிமல்லாதவர்களுக்கும் பயன்படுத்துகிறார்கள், ”என்று பேராசிரியர் கோஷல் சுட்டிக்காட்டுகிறார்.

தாராளவாதம், பன்மைத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை குறிப்பாக மதச்சார்பின்மையை தடைசெய்யும் மிக உயர்ந்த முஸ்லீம் மதகுரு சபையான மஜிலிஸ் உலமா இந்தோனேசியா (MUI) 2005 இல் ஓர் இஸ்லாமிய சட்ட விபரிப்பை (fatwa) வெளியிட்டது. முஹம்மதியா மற்றும் நஹ்த்லத்துல் உலமா (NU) போன்ற மிதவாத அமைப்புகளின் பிடி 2005 முதல் பலவீனமடைந்துள்ளதுடன் MUI இனுடைய நிலை உயர்ந்துள்ளது என்று பேராசிரியர் கோஷல் கூறுகிறார்.

இந்தோனேசியாவின் ஆறாவது ஜனாதிபதியான சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் கீழ் MUI அரச ஆதரவைக் கொண்டிருந்தது. ஜூலை 26, 2005 அன்று MUI இன் தேசிய காங்கிரஸில் யுதோயோனோ, MUI க்கு "இஸ்லாமிய நம்பிக்கை விடயங்களில் மத்திய வகிபாகத்தை" வழங்க விரும்புவதாக கூறினார்.

MUI மதச்சார்பின்மை தொடர்பான சட்ட விபரிப்பை வெளியிட்டதுடன், இது இஸ்லாமிய ஒழுக்கத்தை அமுலாக்கும் விழிப்புணர்வு குழுக்களை சட்டப்பூர்வமாக்கியது. 2005ஆம் ஆண்டில், MUI அஹ்மதியாக்களை "மதவிரோதிகள்" என்று அறிவித்ததுடன், அதன் பின்பற்றுபவர்களை துன்புறுத்துவதைத் தூண்டியது.

2006 ஆம் ஆண்டில், மத விவகார அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதை ஒழுங்குபடுத்துவது குறித்து ஒரு கூட்டு முடிவை வெளியிட வேண்டும் என்று MUI வெற்றிகரமாக கோரியது.

“இதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. அப்போதிருந்து, நாட்டின் அரசியல் அரங்கில் கடும்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்,” என்கிறார் பேராசிரியர் கோஷல்.

வெளியுறவுக் கொள்கையில் தாக்கம்

இந்தோனேஷியா இஸ்லாமியமயமாக்கும்போது, அதன் வெளிநாட்டு உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளும் மாற்றமடையும். மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பல சுற்றுலாப் பயணிகள் திருமணமாகாத தம்பதிகள் என்பதால், திருமணமாகாத தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கான கடுமையான சட்டம் சுற்றுலாவுக்கு இடையூறாக இருக்கும்.

இணைந்து வாழ்வதற்கும் திருமணத்திற்கு முன்னைய உடலுறவுக்கும் எதிரான தடை, பெருந்தொற்றுக்கு முன்பாக இந்தோனேசியாவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக கொண்ட சுற்றுலாத்துறையை மோசமாக பாதிக்கும்.

புது டில்லியை தளமாகக் கொண்ட சமாதானம் மற்றும் முரண்பாட்டு கற்கை நிறுவனத்தின் (IPCS) அசுதோஷ் நக்டா, Diplomat இதழில் எழுதிய தனது ஆக்கத்தில் சுட்டிக்காட்டியதைப் போல், முன்மொழியப்பட்ட கோவையும் வெளியுறவுக் கொள்கையை இஸ்லாமியமயமாக்கும். சர்ச்சைக்குரிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக புது டில்லியில் "டசின் கணக்கான உயிர்களைக் கொன்ற கலவரங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக" இந்திய தூதுவர் பிரதீப் ராவத்தை இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு அழைத்ததை நாக்தா நினைவு கூர்ந்தார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த ஆறு துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு CAA குடியுரிமை வழங்கியது. ஆனால் அது முஸ்லிம்களை விலக்கியது, ஏனெனில் இந்த நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாக உள்ளனர்.

இந்த "பாரபட்சமான" சட்டமூலத்திற்கு இந்திய முஸ்லிம்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் நீண்ட மற்றும் அமைதியான போராட்டம் இந்துக்கள் அவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதில் முடிந்தது. மேற்கத்திய மற்றும் முஸ்லீம் நாடுகளில் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2019 இல் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்திய மாநிலமான காஷ்மீர் அனுபவித்து வந்த விசேட அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து இந்தோனேசியா பகிரங்கமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் கவலைகளை எழுப்பியது.

இந்தோனேசிய இஸ்லாமிய அமைப்பான முஹம்மதியா, இந்த பிரச்சினையை ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கு கொண்டு செல்லுமாறு இந்தோனேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியது.

இஸ்லாமிய குழுக்களின் அழுத்தத்தின் காரணமாக, பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் முஸ்லிம் ரோஹிங்கியாக்கள் துன்புறுத்தப்படுவது குறித்த தனது நிலைப்பாட்டை விடோடோ அரசாங்கம் மாற்றிக்கொண்டது.

ஆரம்பத்தில், விடோடோ யாங்கூனில் உள்ள இராணுவ ஆட்சிக்குழுவுடன் தனது நட்புறவுகளை துன்புறுத்திய ரோங்கியாக்களுக்கு வழங்கிய மனிதாபிமான உதவியால் சமநிலைப்படுத்தினார்.

ஆனால் ஆகஸ்ட் 2017 இல் மியான்மார் இராணுவம் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக அதன் கொடூரமான "அழிவு நடவடிக்கைகளை" ஆரம்பித்த போது இது மாற்றமடைந்தது.

இந்தோனேசியாவில் "அக்சி பேலா இஸ்லாம்" (Save Islam) இயக்கம் மியான்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்தது. ஒரு இஸ்லாமியக் கூட்டணியான "212 இயக்கம்", "ரோஹிங்கியாக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்" என்ற பதாகையின் கீழ் செயற்பட்டது.

ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்பே விடோடோ தனது மியான்மர் கொள்கையை மாற்றிக் கொண்டார். இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் மியான்மர் இராணுவத்தை கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், சீனாவில் முஸ்லீம் உய்குர்களின் துன்புறுத்தல் குறித்த வினாவில், விடோடோ முடக்கப்பட்டுள்ளார் என நாக்டா சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், உய்குர்களை பெய்ஜிங் நடாத்துவதை "பிரிவினைவாதத்திற்கான நியாயமான பதிலளிப்பு" என்று கருதுவதால், அது "சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடாது" என்று அவரது அரசாங்கம் கூறியது.

"சீன-விரோத அடித்தளத்துடன் கூடிய விடோடோ எதிர்ப்பு இஸ்லாமியர்கள் சில ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தனர், ஆனால் அவை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை.

அரசாங்கம், அதனது பங்கில், சீனத் தூதரை வரவழைத்து, இந்தியாவின் விடயத்தில் மேற்கொண்டது போலவே தனது கவலைகளை தெரிவித்தது, ஆனால் அதற்கு மேல் செயற்படவில்லை,” என்று நாக்தா குறிப்பிடுகிறார்.

"உய்குர்களின் நிலைமைக்கு இந்தோனேசிய அரசாங்கம் வெளிப்படுத்திய மட்டுப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு, பெய்ஜிங் சின்ஜியாங்கிற்கு நஹ்த்லத்துல் உல்மா (NU) மற்றும் முஹம்மதியா போன்ற பிரதான இஸ்லாமிய அமைப்புக்களின் மரியாதைக்குரிய தலைவர்களுக்கான வருகையை ஏற்பாடு செய்த பின்னர் சீனா மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட விடயத்துடன் அதிகமான தொடர்பினை கொண்டுள்ளது".

சீனா தனது உய்குர்களை நடாத்துவது குறித்து அமைதி காத்ததற்காக இந்த அமைப்புகளுக்கு பெய்ஜிங்கில் இருந்து நன்கொடைகள், நிதி உதவி மற்றும் பிற வகையான உதவிகள் கிடைத்தன. ஆனால் இந்த அமைப்புகள் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளன என்று நாக்டா மேலும் கூறுகின்றார்.

பி.கே.பாலச்சந்திரன் கொழும்பில் இருந்து பல வருடங்களாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதும் ஒரு சுயாதீன ஊடகவியலாளராவார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எகனாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து செய்திகளை வழங்குகிறார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்திர பத்தி ஒன்றை எழுதுகின்றார்.
.