அம்பாறை, திருமலை மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக அதாஉல்லா நியமனம்

அம்பாறை, திருமலை மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக அதாஉல்லா நியமனம்

அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அபிருத்திக் குழுவின் இணைத் தலைராக கடந்த 2015ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா செயற்பட்டார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இவர் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கும் இவருக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் ஏற்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா தற்போது அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தும் தற்போது முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.