இலங்கையினுடைய ஆராய்வுக்கான இயலளவை திறத்தல்

இலங்கையினுடைய ஆராய்வுக்கான இயலளவை திறத்தல்

சிரஞ்சீவ தேசதுனி

இலங்கை தேசிய ஆராய்ச்சி சபை (NRC) அரச துறையில் செயற்படுகின்ற விஞ்ஞானிகளுக்கு அவசியமான நிதி ஆதரவை வழங்குகின்றது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, NRC யினுடைய வருடாந்த வரவு செலவுத்திட்டம் 80 மில்லியன் ரூபாயாக உள்ளது.

2013 இல் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, NRC, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் இணைந்து, கூட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சித் திட்டம் பல்வேறு அரசு சார்ந்த விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்களிடமிருந்து சுருக்க முன்மொழிவுகளைக் கோரியது.

இதற்குப் பின்னால் இருந்த ஊக்கியாக இலக்கு-சார்ந்த பல்துறை ஆராய்ச்சி மானியங்கள் காணப்பட்டது. இந்த மானியங்களின் நோக்காக பொருளாதார அபிவிருத்தி, சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழலியல் நிலைத்ததன்மை ஆகியவை காணப்பட்டதுடன், இவை ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்களைத் தீர்க்கின்றன.

இந்த முயற்சியின் முக்கிய நோக்காக ஓர் ஆராய்ச்சிக்கான மானிய நிகழ்ச்சித்திட்டத்தை நிறுவுவதாகும். இந்த நிகழ்ச்சித் திட்டமானது, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக அரச நிறுவனங்களுக்கு போட்டி மானியங்களை வழங்கும் தளமாக காணப்படுகின்றது.

காலப்போக்கில், இந்நிகழ்ச்சித்திட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, விஞ்ஞான சிறப்பை வலியுறுத்துவதுடன், தேசிய அபிவிருத்தி நோக்கங்களுடன் சீரமைக்கப்பட்டதுடன் சர்வதேச ஊடக வெளியீடுகள் மூலமாக கண்டறிவுகளை பரப்புகிறது.

அரச ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் தனியார் தொழிற்துறை கூட்டாண்மை (PPP) முன்முயற்சி மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அதனுடைய மையத்தில், இந்த முயற்சியானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்க முயல்கிறதுடன், இறுதியில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் தாக்கத்தை அதிகப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குகின்றது.

இந்தப் பின்னணியில், தேசிய ஆராய்ச்சி சபையானது, அரச நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தொழிற்துறை நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையே இணைப்புகளை வசதிப்படுத்தும் பங்கை ஆற்றி வருகிறது.

தொழில்துறைகளின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்து, அதன் மூலம் ஆராய்ச்சி அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதே இங்கு ஒன்றிணைந்த குறிக்கோளாகும்.

ஆய்வு புத்திக்கூர்மை, வசதிகள் மற்றும் சேவைகளைப் பகிர்தலை வசதிப்படுத்தும் அர்த்தமுள்ள பங்காண்மைகளை வளர்ப்பது இந்த நோக்குடன் ஒருங்கிணைந்ததாகும், இதன் மூலமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் தார்மீக மற்றும் நிதியியல் அம்சங்களை நெறிப்படுத்துகிறது.

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கை ஒரு மில்லியன் மக்களுக்கு 105.61143 ஆராய்ச்சியாளர்களென மிகக்குறைந்த எண்ணிக்கையையே கொண்டுள்ளதுடன், இதற்கு மாறாக ஒரு மில்லியன் மக்களுக்கு ஐக்கிய அமெரிக்காவில் 4747.84172 ஆராய்ச்சியாளர்களும் தென் கொரியாவில் 7980.39565 ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர்.

இந்த ஏற்றத்தாழ்வு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மொத்தச் செலவீனத்தில் (GERD) பிரதிபலிக்கிறது. 2018 இல், இலங்கையின் GERD 0.11949% ஆக இருந்த அதே நேரத்தில் தென் கொரியாவில் வலுவான 4.51633% ஆக காணப்பட்டது. 2020 இல், இலங்கையின் GERD 0.12% ஆக இருந்ததுடன், தென் கொரியாவில் அந்த எண்ணிக்கை 4.75971% ஆக மேம்பட்டது.

சந்தேகத்திற்கு இடமின்றி இந்த குழப்பமான ஏற்றத்தாழ்வுகளை கவனத்தில் கொண்டு, இலங்கை தேசிய ஆராய்ச்சி சபை 2018 இல் 174.62 மில்லியன் ரூபாவை ஆராய்ச்சி செயற்திட்டங்களுக்காக ஒதுக்கியது. நான்கு குழுக்களின் கீழ் செயற்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

குழு 1
மருத்துவ விஞ்ஞானம் / உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழு 2
விவசாயம் / பெருந்தோட்டங்கள் / கால்நடை மற்றும் மீன்பிடி

குழு 3
பொறியியல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் / பௌதீக விஞ்ஞானம் மற்றும் இலத்திரனியல்

குழு 4
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் / புவியியல் விஞ்ஞானம் / இரசாயன விஞ்ஞானம் மற்றும் ஏனையவை

இந்த ஒதுக்கீடு முக்கியமான துறைகளினூடாக முன்னேற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இன்னமும் 2013 ஆம் ஆண்டு வரை, இலங்கை தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.11% மட்டுமே இதற்காக ஒதுக்கியுள்ளது. இந்த எண்ணிக்கை உலக சராசரியான 2.23%க்கு மாறானதாக உள்ளது. இது இலங்கையின் தற்போதைய ஆராய்ச்சி முதலீட்டிற்கும் உலகளாவிய அளவுகோலுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க இடைவெளியை சுட்டிக் காட்டுகிறது.

இந்த வேறுபாடு எண்களுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஒரு நாட்டின் ஆராய்ச்சி முயற்சிகள் அதன் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் பிணைக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட GDPயின் அதிக சதவீதம், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கும், விஞ்ஞான ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கும், உலக அறிவுப் பொருளாதாரத்தில் ஒரு பங்கேற்பாளராக நாட்டை நிலைநிறுத்துவதற்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

இலங்கைக்கும் தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இடையிலான புள்ளிவிவரங்களில் உள்ள முரண்பாடுகள் மிகவும் கவலைக்குரியவை. உண்மையில் இது இலங்கை ஆராய்ச்சியாளர்கள் நாட்டிற்குள் ஆராய்ச்சி துறையில் ஈடுபடுவதற்கு ஒரு சாத்தியமான தடையாக உள்ளது.

வலுவான கல்வி முறைமையொன்றைப் பெருமையாகக் கூறினாலும், எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி முயற்சிகளுக்கு வளங்களை ஒதுக்குவதில் இலங்கை பின்தங்கியுள்ளது என்பதைக் குறிப்பிடுவது மனவருத்தத்தை அளிக்கிறது.

இலங்கையும் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியுள்ள பாராட்டுக்குரிய கல்விக் கட்டமைப்பை கொண்டுள்ளது. இது ஒரு முக்கியமான யதார்த்தத்தை சுட்டிக் காட்டுகின்றது: போதிய நிதியுதவியும் அரசாங்க ஆதரவும் உள்ள போது, இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடிவதுடன், அறிவுத் தொகுப்பிற்கு கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்.

வரையறுக்கப்பட்ட வளங்களின் ஒதுக்கீடு ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க முடியும். நிதியளிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வு, தேவையான கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அணுகல் தொடர்பான வினாக்களை எழுப்புகின்றது. செயற்திட்டங்களைத் தொடர்வதற்கான ஆராய்ச்சியாளர்களின் திறன் மற்றும் முன்னோடியான கண்டறிவுகள் நிதியியல் மட்டுப்பாடுகளால் தடுக்கப்படலாம்.

இருந்தபோதிலும், நம்பிக்கையின் பிரகாசம் காணப்படுகின்றது. இலங்கை ஆய்வாளர்கள் சர்வதேச அரங்கில் பலவற்றை சாதித்துள்ளதுடன், இது தேசத்தின் மறைந்திருக்கும் ஆற்றலுக்கு சான்றாகும். கணிசமான முதலீடுகளை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு வழங்குவதன் மூலமாக, இலங்கையால் படைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மையின் அதிர்வலைகளைத் திறக்க முடியும்.

இங்கு ஆராய்ச்சிக்கு உகந்த சூழலுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஓர் ஊக்கியாக செயற்படலாம் என்பதுடன், இது தேசிய சவால்களை மட்டும் எதிர்கொள்ளாமல் உலகளாவிய அறிவாற்றலுக்கு பங்களிக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது.

இலங்கையின் கல்வி கட்டமைப்பு கருத்தில் கொள்ள வேண்டிய ஓர் கரிசனமாகும். இது கோட்பாட்டு கற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், பெரும்பாலும் கோட்பாட்டு கருத்துக்களுக்கான செயன்முறை மற்றும் புத்தாக்கமான அணுகுமுறைகளை மறைக்கிறது.

இந்த அணுகுமுறையானது, ஆராய்ச்சியாளர்களை அவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் வாழ்வு முழுவதிலும், அவர்களின் உருவாக்க ஆண்டுகளில் இருந்து வளர்ச்சியடைவதற்கு உகந்த கலாச்சாரத்தின் விருத்தியைத் தடுக்கிறது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள மாதிரியானது மனப்பாடம் செய்தல் மற்றும் பரீட்சை அடிப்படையிலான மதிப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க முனைகின்றது. இந்த அணுகுமுறை, கல்வித் திறனை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டிருந்தாலும், விமர்சன சிந்தனை மற்றும் சுயாதீன ஆராய்ச்சி திறன்களை வளர்ப்பதை ஊக்கப்படுத்தாமல் போகலாம்.

இத்தகைய அமைப்பின் கடினத்தன்மை, மாணவர்கள் தங்களின் கருத்துக்களை ஆராய்வதற்கும், சுயமாக தூண்டப்பட்டு விசாரணைகளில் ஈடுபடுவதற்கும், ஒரு ஆராய்ச்சியாளராக மாறுவதற்கான மையத்தில் உள்ள ஆர்வ உணர்வை வளர்ப்பதற்கும் குறைவான நேரத்தையும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இலங்கை முழுவதிலும் உள்ள பாடசாலைகள் பரீட்சையை மையமாகக் கொண்ட கட்டமைப்பினால் கட்டுப்படுத்தப்படுவதுடன், இது மாணவர்களின் தனிப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் ஈடுபடும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஏற்றத்தாழ்வு ஆராய்வதற்கான ஆர்வத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், பிரச்சினைகளை தீர்க்கும் திறன்கள், படைப்பாற்றல் மற்றும் சிக்கலான தரவை பகுப்பாய்வு செய்து விளக்குவதற்கான திறன் ஆகியவற்றின் விருத்தியையும் தடுக்கிறது. இந்தத் திறன்கள் ஆராய்ச்சிப் பாதையில் இறங்கி பல்வேறு துறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க விரும்புவோருக்கு முக்கியமானவையாகும்.

பரீட்சை சார்ந்த கல்வி முறைமைக்கும் குறைவான ஆராய்ச்சி செறிவிற்கும் இடையே தொடர்பு உள்ளது. தனிப்பட்ட ஆராய்ச்சியானது, பரிசோதனை, கண்டறிதல், வினாக்களை கேட்கும் சுதந்திரம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சூழ்நிலையைக் கோருகின்றது.

உண்மையில், செயன்முறைப் பிரயோகம் மற்றும் சுயாதீன விசாரணை இல்லாமை மாணவர்களை ஆர்வம் மிக்க, வளமான ஆராய்ச்சியாளர்களாக மாற்றுவதைத் தடுக்கலாம்.

கல்வி மாதிரியை மீள்பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும். செயன்முறை பிரயோகம், விமர்சன பகுப்பாய்வு மற்றும் தனிப்பட்ட ஆராய்ச்சி ஆகியவற்றுடன் கோட்பாட்டு ரீதியான புரிதலை உள்ளீர்க்கும் அணுகுமுறையை நோக்கிய மாற்றம் நிலைமாற்றத்தை நிரூபிக்கும். ஆர்வத்தையும், புத்தாக்கத்தையும், பிரச்சனைகளைத் தீர்ப்பதையும் கொண்டாடும் சூழ்நிலையை வளர்ப்பதன் மூலமாக பாடசாலைகள் புதிய தலைமுறை சிந்தனையாளர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை விருத்தி செய்ய முடியும்.

சாராம்சமாக, பாதையை மாற்றுவது கல்விச் சூழலின் முழுமையான மாற்றத்திற்கு வழி வகுப்பதுடன், இது கோட்பாட்டு அறிவை அனுபவத்துடன் ஒத்திசைக்கிறது, மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்க உதவுகிறது, மேலும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களின் செழிப்பான கலாச்சாரத்திற்கு வழி வகுக்கின்றது. இது ஆராய்ச்சி செறிவை அதிகரிப்பது மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் இலங்கையின் நிலையை உயர்த்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியான புத்தாக்கங்கள் மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தால் குறிக்கப்பட்ட உலகில், இலங்கை தனது ஆராய்ச்சி விடயப்பரப்பை விருத்தி செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது. இலங்கை நிதி ஆதர அதிகரிப்பதன் மூலமும், அறிவுசார் ஆராய்ச்சிகளை வளர்க்கும் சூழலியல் அமைப்பை உருவாக்குவதன் மூலமும், பல்வேறு களங்களில் தனது திறமைகளை முன்னேற்ற முடியும்.

இலங்கை ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச ரீதியிலான வெற்றிக் கதைகள், சரியான வளங்கள் மற்றும் அரசாங்க ஆதரவுடன், நாடு உலகளாவிய ஆராய்ச்சி அரங்கில் ஒரு வலிமைமிக்க சக்தியாக பரிணமிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

சிரஞ்சீவ தேசதுனி தென் கொரியாவின் ஹன்னம் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பவியல் இளங்கலைப் பட்டதாரியாவார். அவரை gdchiranjeewa123@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.