போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நான்கு மறுவாழ்வு நிலையங்கள் விரைவில் திறப்பு

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நான்கு மறுவாழ்வு நிலையங்கள் விரைவில் திறப்பு

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு புதிதாக நான்கு இடங்களில் குடியிருப்பு மறுவாழ்வு நிலையங்களை நடத்தப்படவுள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்கு மேலதிகமாகவே அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஒத்துழைப்புடன் இந்த நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, நிட்டம்புவ பிரதேசத்தில் 1,000 பேருக்கும், பல்லன்சேனவில் 600 பேருக்கும், வீரவிலவில் 2,000 பேருக்கும், எம்பிலிப்பிட்டிய இளஞைர் சேவை நிலையத்தில் 600 பேருக்கும் குடியிருப்பு மறுவாழ்வு நிலையங்களை நடத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

"இதற்கான கட்டடங்கள் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ளன. நீதி அமைச்சர் அலியின் ஒத்துழைப்புடன் திறந்த சிறைச்சாலைகள் என்ற கருத்திட்டத்துடன் கூடிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக" அவர் மேலும் கூறினார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (01) செவ்வாய்க்கிழமை பராளுமன்றத்தில் நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் போதைப்பொருள் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ இந்த கூட்டத்தில் தெரிவித்தனர். அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு உரிய புனர்வாழ்வுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும்இ இதனால் சந்தையில் போதைப்பொருளின் விலை அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.