பொலிஸ் முறைப்பாடு: காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளர்களின் கழிவுகள் அகற்றல்

பொலிஸ் முறைப்பாடு: காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளர்களின் கழிவுகள் அகற்றல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் கழிவுகளை ஐந்து தினங்களாகியும் அகற்ற வில்லை எனவும் இதனை உடனடியாக அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (25) முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் குறிப்பிட்டார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொவிட் 19 கொரோனா நோயாளார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டதையடுத்து அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட நோயாளர்கள் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐந்து தினங்களாகியும் கொரோனா நோயாளர்களின் கழிவுகளை அகற்ற வில்லை என தெரிவித்தும் இதனை உடனடியாக அகற்றுமாறு கோரியும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாட்டையடுத்து சனிக்கிழமை (25) பிற்பகல் மேற்படி கழிவுகளை சுகாதார துறையினார் வாகனத்தில் காத்தான்குடிக்கு வெளியே ஏற்றிச் சென்றதாகவும் கழிவுகள் வைத்தியசாலையிலிருந்து அகற்றப்பட்டதாகவும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் மேலும் குறிப்பிட்டார்.