வலுப்பெறும் இலங்கை - சவூதி உறவு

வலுப்பெறும் இலங்கை - சவூதி உறவு

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக பல்வேறு வகையிலான இனவாத செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பின்னர் இவை இனக் கலவரங்களாக மாறி முஸ்லிம்களின் சொத்துக்கள் மற்றும் வியாபார நிலையங்கள் அழிக்கப்படுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பல உலக நாடுகள் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளதுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் பல்வேறு அழுத்தங்களை வழங்கியுள்ளன. இதில் இஸ்லாமிய நாடுகளும் பாரிய பங்களிப்பினைச் செலுத்தியுள்ளன.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத சந்தர்ப்பங்களின் போது இஸ்லாமிய நாடுகள், உள்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை என தப்பெண்ணமொன்று இலங்கை முஸ்லிம்களிடமுள்ளன.

இது தவறான விடயமாகும். கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் பிரச்சினைகள் எதிர்நோக்கிய காலப் பகுதியில் முஸ்லிம் நாடுகள் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தன. இந்த செயற்பாட்டினை அவர்கள் ஒருபோதும் பகிரங்கமாக மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக காதோடு காது வைத்தாற் போல் இரகசியமாகவே அவர்கள் மேற்கொண்டனர். இதில் கொழும்பினைத் தளமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய நாட்டு இராஜதந்திரிகளின் பங்களிப்பினை இலங்கை முஸ்லிம்களினால் ஒருபோதும் மறக்க முடியாது.

இராஜதந்திரிகள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு சில வரையறைகள் உள்ளன. அது மாத்தரமல்லாமல் உள்நாட்டு விடயங்களிலும் அவர்களினால் தலையீட முடியாது. இது சர்வதேச நியதியாகும். இலங்கை முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது, கொழும்பினை தளமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய நாட்டு இராஜதந்திரிகள், உரிய தரப்பினரினரை உடனுக்குடன் அனுகி பிரச்சினை தொடர்பான உண்மைத் தன்மையினை பெற்றது மாத்திரமல்லாமல் அரசாங்த்திற்கு கூட்டாக அழுத்தம் பிரயோகித்தனர்.

அண்மைக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களின் போது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினை தனித் தனியாக சந்தித்து தங்களின் எதிர்ப்பினை வெளியிட்;டனர்.

இதற்கு மேலதிகமாக ஊடக அறிக்கையினையும் வெளியிட்டனர். அத்துடன் நிறுத்திவிடாமல் சவூதி அரேபியாவின் ஜித்தாவினை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் பல அறிக்கைகளை இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் குரல்கொடுத்து வருகின்ற நிலையில், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை சம்பவத்தினை அடுத்து இனவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்ட பிரதான நாடு சவூதி அரேபியாவாகும்.

குறிப்பாக அடிப்படைவாதிகள் சவூதி அரேபியாவிலிருந்தே உருவாக்கப்படுவதாகவும், அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு இறக்குமதி செயயப்படுவதாகவும், அதற்கு எதிராக போரட வேண்டும் எனவும் இனவாதிகள் குரல் எழுப்பினர்.

குறித்த நாட்டினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளை மறந்த  இனாவதிகள், தங்களின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சவூதிக்கு எதிரான பொய்ப் பிரசாரத்தினை முன்னெடுத்தனர். இதனால் இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான உறவில் சிறியதொரு தளம்பல் ஏற்படக்கூடிய வாய்ப்பொன்றும் ஏற்பட்டது.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிந்து இன்று வரை பல்வேறு செயற்திட்டங்களை இரண்டு நாடுகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இந்த வருடம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 45 வருடத்தினை பூர்த்தி செய்கின்றன. இந்த காலப் பகுதியில் சவூதி அரேபியாவினால் இலங்கை மக்களுக்கு இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு உதவித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை உதவி (ஸதகா) என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதனால் இதற்கான பிரதியுபகாரத்தினை அவர்கள் இறைவனிடமிருந்து எதிர்பார்ப்பதனால் இந்த உதவிகளினை விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள், இலங்கையில் மேற்கொள்ளும் சிறிய உதவித் திட்டங்களையும் பாரிய அளவில் விளம்பரப்படுத்துகின்றன.

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை கட்டியொழுப்புவதற்கான இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரான அப்துல் நாசர் அல் ஹாரீத் முன்னெடுத்திருந்தார். தூதுவருக்கு உதவியாக இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ள பிரபல தொழிலதிபரான அப்துல் காதர் மசூர் மௌலானவும் செயற்பட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டின் மே மாத இறுதியில் பகுதியலேயே இலங்கைக்கான தூதுவராக கடமைகளை பொறுப்பேற்ற இவர், கடந்த 15 மாத காலப் பகுதிக்குள் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

சவூதி அரேபிய மன்னர் சல்மானினால் இலங்கைக்கான தூதுவராக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் நேபாளத்திற்கான சவூதி அரேபிய தூதுவராக செயற்பட்டார். தெற்காசிய விவகாரங்கள் தொடர்பில் பூரண அறிவினைக் கொண்ட இவரின் நியமனத்திற்கு பின்னர் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் கதவு எப்போதும் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் தூதுவர் அப்துல் நாசர் அல் ஹாரீதின் முயற்சிக்கமைய கடந்த 50 நாட்களுக்குள் சவூதி அரேபியாவிலிருந்து இரு முக்கிய பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

அதாவது சவூதி அரேபியாவின் சூரா சபையின் (பாராளுமன்றம்) தலைவர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின் இந்த வாரமும் உலக முஸ்லிம் லீகின் செயலாளர் நாயகமும், சர்வதேச முஸ்லிம் அறிஞர் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா கடந்த ஜுலை மாத இறுதியிலும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

பல வருடங்களுக்கு பின்னர் சவூதி அரேபியாவின் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் இருவரினதும் இலங்கை விஜயம் நாட்டுக்கு பாரிய அனுகூலத்தினை ஏற்படுத்தியுள்ளன.

இதற்காக இலங்கைக்கான சவூதி தூதுவர் முன்னின்று செயற்பட்டார். இந்த இரு விஜயங்களின் ஊடாக இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே பல துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சவூதி அரேபிய சபாநாயகரின் விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஹஜ் கோட்டாவினை அதிரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அவர் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக சுமார் 136,000 இலங்கையர்கள் தற்போது சவூதி அரேபியாவில் வினைத்திறனான பணியாற்றுவதாக தெரிவித்து அவர்களது சேவையை ஜனாதிபதியிடம் பாராட்டிய சவூதி சபாநாயகர், மேலும் அதிகளவிலான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தமது அரசாங்கம் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் விடயத்தில்  இலங்கையைப் போன்றே சவூதி அரேபியாவினதும் குறிக்கோளாகும் எனவும் பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ வரையறுக்கப்பட்டது அல்ல என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலரினை தனது விஜயத்தின் போது உலக முஸ்லிம் லீகின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா வழங்கியிருந்தார்.

இது போன்ற உதவியித் தொகையினை இதுவரை எந்த நாடும் வழங்காத சந்தர்ப்பத்தில் உலக முஸ்லிம் லீகினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு மேலதிகமாக சவூதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் நீண்ட கால இலகு கடனுதவி திட்டத்தின் கீழ் நாட்டின் தேசிய நலன்கருதி மேற்கொள்ளப்படும் 10க்கு மேற்பட்ட செயற்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவிற்கு எதிராக இனவாதிகளினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் அந்நாட்டினால் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினை இதன் ஊடாக அறிய முடிகின்றது.

இந்த உறவினை மேலும் வலுப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவிற்கு  எதிராக போலிக் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இனவாதிகளை அரசாங்கம் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் ஊடாக சவூதி அரேபியாவுடன் நல்லெண்ணமொன்றினை கட்டியொழுப்பி இன்னும் அதிக உதவிகளை பெற முடியும். இதன் ஊடாக முஸ்லிம் சமூகம் மாத்திரம் நன்மையடைவதில்லை என்பதை தெளிவாக கூற வேண்டும். இதுவரை சவூதி அரேபிய அரசாங்கத்தின் உதவியின் ஊடாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுமே நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-றிப்தி அலி-