UNPஇன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிறார் கரு?

UNPஇன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிறார் கரு?

எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரிய களமிறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான அறிவிப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர்  ரணில் விக்ரமசிங்க, இந்த வார இறுதியில் மேற்கொள்வார் என குறித்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இந்த அறிவிப்பினை அடுத்து சபாநாயகர் பதவியிலிருந்து கரு ஜயசூரிய இராஜினாமாச் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க மற்றும் அக்கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எண்ணத்தினை கட்சி முக்கியஸ்தர்களிடம் வெளியிட்டுள்ளதுடன் சஜித் பிரேமதாஸ அதற்கான பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளார்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவொன்று ஏற்படக்கூடிய சூழலொன்றும் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் முகமாகவே சபாநாயகர் கரு ஜயசூரியவினை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மாத்தளை தம்மாகுசல அனுநாயக்க தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்திய போது சபாநாயகர் கரு ஜயசூரியவினை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறான நிலையில், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பிபொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, 'கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும்' என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்யின் வாக்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றிப் பெற முடியாது. அதனால் பரந்த ஒரு பலமிக்க அணியாக  தோற்றம் பெற வேண்டும். அதற்காகவே சிறந்த வேலைத்திட்டங்கள் தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் பிரதமர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றிப் பெறும் கொள்கைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். அனைத்து காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் அவருக்கு தமது ஆதரவை வழங்கத் தயார் என ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கடந்த சனிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாசவை கொழும்பு – 07 இலுள்ள அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்துகொண்டதுடன் பிரதித் தலைவர் சஜித்துடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாலித ரங்கே பண்டார, கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறங்குவதற்கு அக்கட்சியுடன் நெருக்கிச் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலத்த எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

இவ்வாறா நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான மங்க சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர்  கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததனர்.

இதன்போதே சஜிதின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன் குறித்த தேர்தலில் யாரையும் ஆதரிப்பதாக நேரடியாக தற்போது அறிவிக்க முடியாது என்று தமிழ் கூட்டமைப்பு அவர்களிடத்தில் கூறியுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான குறித்த சந்திப்பிற்கு அமைச்சர் சஜித் பிரமேதாச வேண்டுகோள் விடுக்கப்படவில்லை என்பதுடன் குறித்த கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் சஜீத் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

-றிப்தி அலி-