கல்முனை மாநகருக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,600 மில்லியன் ரூபா செயற்திட்டம் இடைநிறுத்தம்

கல்முனை மாநகருக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின்  2,600 மில்லியன் ரூபா செயற்திட்டம் இடைநிறுத்தம்

றிப்தி அலி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,600 மில்லியன் ரூபா  கடனுதவியுடன் 'இரண்டாம் நிலை நகரங்களின் நிலைதகு அபிவிருத்தித் திட்டம்' என்ற செயற்திட்டத்தின் ஊடாக கல்முனை மாநகரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து செயற்திட்டங்களும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

''கல்முனை மாநகரத்தில் இரண்டாம் நிலை நகரங்களின் நிலைதகு அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 1,900 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கியுள்ளது'' என கடந்த  19.01.2018ஆம் திகதி கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவராக செயற்பட்ட போது  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்திருந்தார்.

குறித்த திட்டத்தின் ஊடாக நகர மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்தல், போக்குவரத்து முகாமைத்துவம், நகர வடிகாலைமைப்புத் திட்டம், திண்மக்கழிவு முகாமைத்துவம், பொது கட்டிடங்களையும் சந்தைகளையும் மெருகூட்டுதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்புப் பணிகளை செய்தல், உள்ளூராட்சி சபைக்கு உட்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்தல், குடியிருப்பு மற்றும் தொழில் நிலையங்களின் உட்கட்டமைப்பு, கழிவு நீரகற்றல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, "குறித்த திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு 2,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை அங்கீகாரத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்" கடந்த 2020.08.14ஆம் திகதி மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

நான்கு வருடங்களைக் கொண்ட இந்த திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும் கல்முனை மேயர் இதன்போது குறிப்பிட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இந்த செயற்திட்டம் பாரிய பேசுபொருளாக தேர்தல் பிரசார மேடைகளில் காணப்பட்டன.

இவ்வாறான நிலையிலேயே குறித்த செயற்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த செயற்திட்டம் தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.   

நாட்டில் தற்போது நிலவும் நிதி நிலைமையின் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவதில் சிக்கல் உள்ளமையினாலேயே இந்த திட்டத்தினை இடைநிறுத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணனுக்கு கடந்த 2020.09.25ஆம் திகதி குறித்த அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த செயற்திட்டம் இடைநிறுத்தப்படுவது தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால், கல்முனை மாநகர ஆணையாளருக்கு கடந்த 2020.10.07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் கிண்ணியா நகர சபை உட்பட நாட்டிலுள்ள 25 உள்ளூராட்சி மன்றங்கள் இந்த திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.