பேருவளையில் நீதவான் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை

பேருவளையில் நீதவான் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை

பேருவளை பிரதேசத்தில் நீதவான் நீதிமன்றமொன்றினை அமைக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல் மாகாணத்தில் ஆறு புதிய நீதிமன்றங்களை அமைக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே பேருவளையில் நீதவான் நீதிமன்றமொன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேல் மாகாணத்தில் மஹர மாவட்ட நீதிமன்றம், மீரிகம மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம், வெலிசர மாவட்ட நீதிமன்றம், களுத்துறை - மீஹகத்தென்ன நீதவான் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற நீதியரசர் சமயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு இதற்கு அமையவே மேற்குறிப்பிட்ட புதிய நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே நீதி அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை,  நீதிமன்ற கட்டமைப்பில் தற்பொழுது காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்து விரைவில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூன்று வருட விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்கும் தற்பொழுது காணப்படும் நீதிமன்றங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான மூன்று வருட விசேட திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, சாஹர காரியவசம், ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்ஹ, மர்ஜான் பளீல், சந்திம வீரக்கொடி மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு 200ற்கும் அதிகமான நீதிபதிகள் காணப்படுவதாகவும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய நீதிபதிகளின் எண்ணிக்கையை 218 ஆக உயர்த்துவதற்கும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 245ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நீதிபதிகளுக்கு அவசியமான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், இதனை எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நீதிமன்றக் கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், E-Filing  முறைமை மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

மத்தியஸ்த சபையை பலப்படுத்தவும், இவற்றின் ஊடாக தீர்க்கப்படும் பிரச்சினைகளின் எண்ணிக்கையை அடுத்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி மத்தியஸ்த சபையை யாழ்ப்பாணம், அநுராதபும், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றங்களில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றை புனரமைப்பதற்கு இந்த மூன்று வருட விசேட திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாரிய நிதி மோசடி மற்றும் சிறிய நிதி மோசடி வழக்குகள் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்கு நிதி மோசடிகள் தொடர்பில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் போது 1.5 மில்லியன் ரூபா நிதி மோசடிகளுக்கான வழக்குகளுக்கு தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தண்டனைக்கு பதிலாக செயல்படுத்தப்படும் சமூக சீர்திருத்த செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
நீதிமன்றங்கள் பலவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து ஏற்கனவே கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் நீதிமன்ற வளாகத்தைப் பூர்த்தி செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது 6.5 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்றங்களைக் கொண்டதாக இந்த நீதிமன்ற வாளாகம் அமைக்கப்படுகிறது. இதில் நீதி அமைச்சும் நிறுவப்படும் மற்றும் நீதிபதிகளுக்காக 50 வீடுகளும் கட்டப்படும். நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதியை புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நோக்கத்திற்காக சீன அரசாங்கம் சுமார் 500 மில்லியன் யுவான் மானியம் வழங்கியிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு முதல் தாமதமாகி வரும் பணியை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இங்கு விளக்கமளித்தார்.

பிரதம நீதியரசர் அண்மையில் இது தொடர்பில் விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருப்பதாகவும், இதற்கு அமைய சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.