பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு MSMEs நிதியளிப்பினை வழங்கும் DFCC வங்கி மற்றும் ஐக்கிய அமெரிக்கா

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு MSMEs நிதியளிப்பினை வழங்கும் DFCC வங்கி மற்றும் ஐக்கிய அமெரிக்கா

இலங்கையில் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (MSME) நிதிச் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக DFCC வங்கிக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) தனியார் துறை அபிவிருத்திச் செயற்திட்டத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

“இந்த சவாலான காலங்களில் MSMEகளுக்கு கடன் வழங்குவதானது மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என DFCC வங்கியினைப் போன்றே அமெரிக்க அரசாங்கமும் நம்புகிறது” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கூறினார்.

“DFCC வங்கியுடன் இது போன்ற பலம்வாய்ந்த பங்காண்மைகள் ஊடாக, தமது வருவாயை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் விசேடமாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் MSMEகளுக்கு நாம் உதவ முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக, DFCC மற்றும் USAID இன் தனியார் துறை அபிவிருத்திச் செயற்திட்டம் என்பன MSMEகளுக்கான நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும், MSMEகளுக்கான டிஜிட்டல் ஊடுருவல் மற்றும் சந்தை இணைப்புகளை வலுப்படுத்தும், மற்றும் MSME களுக்கு - விசேடமாக மேல் மாகாணத்திற்கு வெளியே அமைந்துள்ள மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் தொழில்முயற்சிளுக்கு வர்த்தகக் கடன் வழங்கலுக்கான அணுகலை அதிகரிக்கும்.

இப்பங்காண்மை குறித்து DFCC வங்கியின் முதன்மை நிறைவேற்று அதிகாரி திமல் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

“DFCC வங்கியில், எமது வாடிக்கையாளர்கள் பலர் MSMEகளாக ஆரம்பித்து எங்களுடன் இணைந்து பொருளாதாரத்திற்கு பெறுமதி சேர்க்கும் பெரிய கூட்டுத்தாபனங்களாகவும் பல்கூட்டு நிறுவனங்களாகவும் வளர்ச்சியடைந்துள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.

USAID மற்றும் Palladium உடனான இந்த புதிய பங்காண்மை ஊடாக, இலங்கையில் MSME துறையின் - குறிப்பாக பெண்கள் தலைமையிலான தொழில்முயற்சிகளின் - வலுவான வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு வசதியளிப்பதற்கும் வலுவூட்டுவதற்குமான எங்களது திறனை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.

1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட DFCC வங்கியானது தெற்காசியாவின் மிகவும் பழமையான அபிவிருத்தி வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கியானது வரலாற்று ரீதியாக தனியார் துறையின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளதுடன் தற்போது இலங்கையில் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் பல நிறுவனங்கள் அவை முதன்முதலாக முன்னோடி தொழில்முயற்சிகளாக ஆரம்பித்தபோது தொடக்க நிலையில் அவற்றிற்கு நிதியளித்துள்ளது.

2021 ஜூலை மாதத்தில் ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தினால் (DFC) DFCC வங்கிக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி வழங்கப்பட்டது. அதன் ஊடாக முன்னுரிமை வட்டி விகிதங்கள் மற்றும் காப்புறுதித் தெரிவுகள் உட்பட பல நிதி மற்றும் நிதியல்லாத சேவைகள் மூலம் பெண்கள் தலைமையிலான வணிகங்கள் பயனடைய DFCC ஆலோக்க  (DFCC Aloka) திட்டத்தை அவ்வங்கி அறிமுகப்படுத்தியது.

MSMEகளின் போட்டித்திறன், உற்பத்தித்திறனுள்ள வேலை வாய்ப்பு, புத்தாக்கம் மற்றும் சந்தை இணைப்புகளை அதிகரிக்கும் நிதியளிப்பிற்கு வசதியளிப்பதன் மூலம் USAID PSD செயற்திட்டமானது MSME களுக்கான நிதியிடல் வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது.

இது தற்சார்புடைமைக்கு உதவிசெய்வதற்கும், ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையின் அங்கமொன்றாகும்.