திருகோணமலை துறைமுகத்திற்கு இந்தியாவின் ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக் வருகை

திருகோணமலை துறைமுகத்திற்கு இந்தியாவின் ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக்  வருகை

சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக், இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக (கலப்பு வாயு முறைமை)  இன்று (28) திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் இக்கப்பலுக்கு சிறந்த வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அக்கப்பலின் தளபதி மொகமட் இக்ரம், கிழக்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸை சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பின்போது, எதிர்வரும் 10 நாட்கள் இக்கப்பல் தரித்து நிற்கும் காலப்பகுதியில் சுழியோடல் குறித்து மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆறு பேர் பயணிக்கும் வசதிகொண்ட இரு கலங்களையும், மூவர் பயணிக்கும் வசதியுடனான ஒரு சுழியோடல் கலத்தையும் இந்திய கடற்படைக் கப்பலான நிரீக்‌ஷாக் (A-15) கொண்டுள்ளது.

அத்துடன் ஆபத்தில் இருக்கும் நீர்மூழ்கி கப்பலை மீட்கும் திறனையும் சுழியோடிகளுக்கான பயிற்சிகளை வழங்கும் ஆற்றலையும் கொண்டுள்ளதாக இக்கப்பல் காணப்படுகின்றது.

இலங்கை கடற்படையினருக்கான இதேபோன்ற சுழியோடல் பயிற்சிக்காக 2019 செப்டெம்பரிலும் இக்கப்பல் திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

இந்திய கடற்படைக் கப்பல்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான இவ்வாறான தொடர்ச்சியான ஈடுபாடு இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியாவால் முன்னெடுக்கப்படும் திறன் விருத்தி செயற்பாடுகளுடன் இணைந்ததாக அமைகின்றது.