MCC தொடர்பான மீளாய்வு அறிக்கையை மக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

MCC தொடர்பான மீளாய்வு அறிக்கையை மக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

MCC என்று அழைக்கப்படும் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தின் மீளாய்வு இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (24) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் ஒன்றிற்கேற்ப கடந்த ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன தலைமையிலான இந்த குழுவில் போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயரத்ன மற்றும் பட்டைய கட்டிடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் உறுப்பினர்களாவர்.

இந்த குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை, தன்னார்வ நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் ஆகியவற்றினை கடந்த ஆறு மாதங்களாக ஆராய்ந்த இந்த நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட  இறுதி அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த மீளாய்வு அறிக்கையினை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த பின்னர் கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன,

"கடந்த அரசாங்கத்தினால் 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் MCC ஒப்பந்தத்தில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளது. இதன் கீழ் 7.4 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருப்பினும், அதற்கான கணக்கு விபரங்கள் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

பகுப்பாய்வுக்குப் பொறுப்பான அரசாங்கத்தின் மைய நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் பல்துறை பகுப்பாய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கவில்லை.

சட்ட ரீதியாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதென காணி ஆணையாளர் விளக்கியுள்ளார். இத்திட்டம் ஒரு பாராளுமன்ற சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கு எதிரான ஒரு கருத்தை அல்லது முன்மொழிவை முன்வைப்பது உடன்படிக்கைக்கு எதிரானதாகும்.

பிரதிநிதிகள் இருவருக்கு எந்தவொரு நிபந்தனையையும் கடிதம் ஒன்றின் மூலம் மாற்றுவதற்கு முடியும். அத்தகையதொரு தீர்மானம் பாராளுமன்றத்தின் இறைமையை மீறுகின்ற ஒரு விடயமாகும்.

சட்டமா அதிபருக்கு அரசாங்கத்தின் சார்பாக கருத்து தெரிவிப்பதற்கோ அல்லது நீதிமன்றத்திற்கு செல்லவோ முடியாத ஒரு பின்புலம் இதன்மூலம் உருவாகியிருக்கின்றது" என்றார்.

இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்திய ஏனைய நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்தும் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அந்நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும் என தெரியவந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எந்தவொரு வெளித்தரப்பினதும் தலையீடு இன்றி நடுநிலையான அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு சந்தர்ப்பமளித்தமை குறித்து குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் ஜனாதிபதிக்கு  நன்றி தெரிவித்தார்.

அனைத்து விடயங்களையும் கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி,  அறிக்கையின் பரிந்துரைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.