தனிமைப்படுத்தல் நிலையங்களில் பழுதடைந்த உணவு விநியோகம்; அறிக்கை கோருகிறார் கிழக்கு ஆளுநர்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் பழுதடைந்த உணவு விநியோகம்; அறிக்கை கோருகிறார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் விநியோகிக்கப்படும் உணவுகள் தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசூரிய மற்றும் மாகாண பதில் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
'கிழக்கு மாகாணத்திலுள்ள சில தனிமைப்படுத்தல் நிலையங்களில் பழுதடைந்த உணவுகள் விநியோகிக்கப்படுவதாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் படி உத்தரவிட்டுள்ளேன்' என அவர் கூறினார்.  
 
'நாடளாவிய ரீதியில் சுமார் பல தனிமைப்படுத்தல் நிலையங்கள் செயற்படுகின்றன. இவற்றின் உணவு விநியோகத்திற்கு பொறுப்பாக சுகாதார துறையினரும் இராணுவத்தினரும் செயற்படுகின்றனர்.
 
இவ்வாறன நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சில தனிமைப்படுத்தல் நிலையங்களில் மாத்திரம் பழுதடைந்த உணவுகள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது' என ஆளுநர் அனுராதா யஹம்பத் மேலும் தெரிவித்தார்.
 
கரடியனாறு மற்றும் காத்தான்குடி கொரோனா தனிமைப்படுத்தல்  வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள், உண்பதற்கு ஏற்றவிதத்தில் இல்லை என அங்கு சிகிச்சை பெற்று வருவபவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதுடன், பேஸ்புக்கிலும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இவ்வாறான நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரான ஏ.எல்.எம்.சபீல் கிழக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்து மூல முறைப்பாடொன்றை கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.