பாதுகாப்பு காரணங்களினாலேயே இம்ரானுடனான ஹக்கீம், றிசாதின் சந்திப்பு ரத்து: அரசாங்கம்

பாதுகாப்பு காரணங்களினாலேயே இம்ரானுடனான ஹக்கீம், றிசாதின் சந்திப்பு ரத்து: அரசாங்கம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பர்காப்பு காரணங்களின் அடிப்படையிலேயே ரத்துச் செய்யப்பட்டது என அரசாங்கம் இன்று (23) செவ்வாய்க்கிழமை அறிவித்தது  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (23) செவ்வாய்க்கிழமை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.

இதன்போது, ஊடகவியலாளரொருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"அத்துடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலானது இருதரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட ரீதியில் நபர்களை தேர்ந்தெடுத்து சந்திப்புக்களுக்கான ஏற்பாடு செய்யப்படுவதில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் , றிசாத் பதியுதீன் உள்ளிட்டோருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அந்த சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே?

அமைச்சர்: வெளிநாட்டு அரச தலைவர்கள் நாட்டுக்கு விஜயம் செய்யும்போது அவர்களின் நிகழ்ச்சி நிரல், சந்திப்புக்கள் தொடர்பில் இருதரப்பு இராஜாதந்திர குழுக்களாலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதே போன்று அவர்கள் செல்ல திட்டமிட்டுள்ள இடங்களுக்கு செல்ல முயாத நிலையில் அந்த நிகழ்வு இரத்தாகக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. இவ்வாறான சகல நடவடிக்கைகளும் இரு தரப்பினராலும் நியமிக்கப்படுகின்ற இராஜதந்திர குழுவினாலேயே முன்னெடுக்கப்படும்.

இது போன்ற தீர்மானங்களை எடுக்கும் போது பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்படும். அந்த பொறுப்பு எம்முடையது. மாறாக தனிப்பட்ட நபர்களை தேர்ந்தெடுத்த எந்த சந்திப்புக்களும் இடம்பெறுவதில்லை.