இணையம் ஊடான நிதி மோசடி பற்றி அவதானமாக இருக்கவும்: மத்திய வங்கி

இணையம் ஊடான நிதி மோசடி பற்றி அவதானமாக இருக்கவும்: மத்திய வங்கி

சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையில் அமைந்த செயலிகள் மற்றும் செல்லிட கொடுப்பனவுச் செயலிகள் ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றுக்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இம்மோசடிகளில் அநேகமானவை பொதுமக்களைக் கவருகின்ற வலைத்தளம் அல்லது செல்லிடத் தொலைபேசி செயலி அடிப்படையில் அமைந்த இலகு கடன் திட்டங்கள் ஊடாகவே நடாத்தப்படுகின்றன.

அத்தகைய கடன் விண்ணப்ப மதிப்பீட்டுச் செயன்முறையின் போது மோசடிக்காரர்கள் பின்வருவன போன்ற அந்தரங்கமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல்களைப் அல்லது தரவுகளைப் பகிர்வதற்கு பொதுமக்களை தூண்டுகின்றனர்.

• கடன் அட்டை – அட்டை இலக்கம், தனிப்பட்ட அடையாள இலக்கங்கள் (PINs), CVV, CVC அல்லது CVS இலக்கங்களாக அட்டையின் பின்புறத்தில் பொதுவாகக் காணப்படுகின்ற சரிபார்த்தல் எண்கள், அட்டை காலாவதித் திகதி, ஒரு – தடவை - கடவுச்சொற்கள் (OTPs) போன்ற கொடுக்கல் வாங்கல் சரிபார்த்தல் தகவல்

• இணைய வங்கிச் சேவை – பயன்படுத்துநர் அடையாளம்  அல்லது பயன்படுத்துநர் பெயர், கடவுச்சொல், ஒரு தடவை கடவுச்சொற்கள் (OTP)

• செல்லிட வங்கிச்சேவை (கொடுப்பனவுச் செயலிகள்) - பயன்படுத்துநர் அடையாளம் அல்லது பயன்படுத்துநர் பெயர், கடவுச்சொல், ஒரு தடவை கடவுச்சொற்கள் (OTP)

பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு கண்டிப்பான ஆலோசனை வழங்கப்படுகின்றது:

• பணம் கடன் வழங்கல் தொழில் என்ற போர்வையில் தொழிற்படுகின்ற மோசடிகளுக்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்கு உரிய விழிப்புணர்வு கவனத்தினையும் அவதானத்தினையும் பிரயோகித்தல்.

• ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கு முன்னர் நிதியியல் கொடுக்கல் வாங்கல் மற்றும் கடன் வழங்கும் தரப்பினர் பற்றிய முழுமையான தகவல்களையும் பெற்றுக்கொள்ளல்.

• ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் நிதியியல் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுதல்.

• இலகு அல்லது உடனடிக் கடன் திட்டங்களுடன் தொடர்புகளை கையாளுகின்ற போது மிகவும் விழிப்புடன் செயற்படல்.

• நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ளடக்கங்களின் உள்ளார்த்தங்களை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு கடினமாகவுள்ள உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதைத் தவிர்த்தல்.

• பின்வரும் பண்புகளைக்கொண்ட இலகு அல்லது உடனடிக் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கின்ற போது எச்சரிக்கையாக இருத்தல்;

1. முதலாவது கடனுக்கு பூச்சிய வட்டி போன்ற வாடிக்கையாளர்களை ஈர்க்கின்ற கவர்ச்சிகரமான சுலோகங்கள்

2. ஆரம்ப வட்டி வீதங்கள் குறைவாக இருக்கக்கூடிய போதிலும் மிகவும் உயர்வான வட்டி வீதங்கள்

3. ஆவணங்கள் எதுவும் தேவையில்லை அல்லது குறைவான ஆவணங்களே தேவை போன்ற விளம்பரங்கள்

4. கடன் வழங்குநர்கள் பற்றிய போதுமான தகவல்களை தேடிக்கொள்ள முடியாமை

5. எந்தவொரு சூழ்நிலைக்கு மத்தியிலும் கடன் நீடிப்புக்களைக் கோர முடியும். அத்துடன் எந்நேரத்திலும் கடன் நீடிப்புக்கள் வழங்கப்படுகின்றன.

6.  துரிதமான அனுமதி போன்ற விளம்பரம்

7. தொலைபேசியில் உள்ள தொடர்பு அட்டவணை, புகைப்படங்கள், கோவைகள் மற்றும் ஆவணங்களுக்கு அணுகுவழிக்கான சம்மதத்தினைக் கோருதல்

இம்மோசடிகள் மற்றும் ஏமாற்றுக்கள் பற்றி அவதானமாக இருக்குமாறும் எவையேனும் அந்தரங்கத் தகவல்களை விசேடமாக பயன்பாட்டாளர் பெயர்கள், கடவுச்சொற்கள், தனிப்பட்ட அடையாள இலக்கங்கள் (PINs), ஒரு தடவை கடவுச்சொற்கள் (OTP) அல்லது கணக்கு சரிபார்த்தலுக்குத் தேவையான எவையேனும் தகவல்களை எவரேனும் ஆளுடன் பகிரவேண்டாம் என்றும் பணம் கடன் வழங்குபவர்களுக்கு தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கான அணுகுவழிக்கு சம்மதிக்க வேண்டாம் என்றும் மத்திய வங்கி பொதுமக்களுக்கு கண்டிப்பாக ஆலோசனை வழங்குகின்றது.

மேலும், மத்திய வங்கியானது தமது வங்கிகளிடமிருந்து அல்லது வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிடமிருந்து குறுந்தகவல் விழிப்பூட்டல்கள் போன்ற நிகழ்நேர அறிவிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களைக் கோருவதுடன் இதன்மூலம் அவர்களது கணக்குகளைப் பயன்படுத்தி இடம்பெறுகின்ற ஏதேனும் மோசடியான செயற்பாடுகள் பற்றி அவர்கள் உடனடியாக அறியக்கூடியதாகவிருக்கும்.