இந்திய உயர் ஸ்தானிகர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

இந்திய உயர் ஸ்தானிகர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ  விஜயமொன்றை அவர்கள் நேற்று (11) வியாழக்கிழமை ஆரம்பித்தார்.

அருட்கடாட்சம் நிறைந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்துகொண்டதன் மூலம் அவர் இந்த விஜயத்தினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதன் பின்னர் இந்திய அரசாங்கத்தால் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகளை உயர் ஸ்தானிகர் பார்வையிட்டார்.

இந்த திட்டமானது 326 மில்லியன் இலங்கை ரூபா நன்கொடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியா - இலங்கையை இணைக்கும் பாலமான ராம்சேது (ஆதாம் பாலம்) பகுதியிலும் அன்றைய தினம் உயர் ஸ்தானிகர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்.

மன்னார் மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே. காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன் ஆகியோரின் பிரசன்னத்திற்கு மத்தியில் மன்னார் புனித மடு மாதா ஆலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான  அடிக்கல்லினை,  சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து உயர் ஸ்தானிகர் நாட்டி வைத்தார்.

இந்த வீட்டு அலகுகள் இந்தியாவினால் வழங்கப்படும் 300 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாகாணத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதியபோசன சந்திப்பிலும் உயர் ஸ்தானிகர் கலந்து கொண்டிருந்தார்.

கல்வி, ஆளுமை விருத்தி, சுகாதாரம், விவசாயம், நீர் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் ஆழமான ஈடுபாடு குறித்து அவர்கள் பரந்தளவிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய கொன்சியூலர் ஜெனரல் எஸ் பாலச்சந்திரனினால் உயர் ஸ்தானிகரைக் கௌரவிக்கும் முகமாக  ஏற்பாடுசெய்யப்பட்ட இராப்போசன விருந்துபசாரம் ஒன்றிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளைச்சேர்ந்த முன்னணி பிரமுகர்களுடன் உயர் ஸ்தானிகர் சம்பாஷணையினை மேற்கொண்டிருந்தார்.

இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதிகளவான முதலீடுகள் போன்றவற்றினூடாக வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக இராப்போசன விருந்துபசாரத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடல்களில் கவனஞ் செலுத்தப்பட்டது.

வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, கைத்தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டிருந்தமைக்கான வரலாற்றினை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.