இலங்கையில் தாய்ப்பாலூட்டுதலுக்கு ஏன் இத்தனை தடங்கல்கள்?

இலங்கையில் தாய்ப்பாலூட்டுதலுக்கு ஏன் இத்தனை தடங்கல்கள்?

றிப்தி அலி

இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், நாட்டில் வருடமொன்றுக்கு சராசரியாக 323,561 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் அதிகமான குழந்தைகள் கொழும்பு மாவட்டத்திலேயே பிறந்துள்ளன.

இந்தக் குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களில் சுமார் 65 சதவீதத்துக்கு மேற்பட்டோர் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றுபவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் குழந்தைகளுக்கு தாய்ப் பாலுட்டல், குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் அவர்கள் நாளாந்தம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த வருகின்றனர். இதுபோன்றதொரு பிரச்சினையை கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் எதிர்நோக்கியிருந்ததுடன், அவரை கைது செய்யுமளவிற்கு அது சென்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினையும் இட்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று கடந்த மார்ச் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நான் மன்றில் ஆஜராகாமையினால் எனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு வழங்கப்பட்ட சமயத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே நான் இருந்தேன். எனினும், எனது ஒன்றரை மாத கைக் குழந்தைக்கு வாகனத்திலிருந்து பாலூட்டிக் கொண்டிருந்தமையினால் நீதிமன்றம் அழைத்தபோது என்னால் ஆஜராக முடியவில்லை. எவ்வாறாயினும் பின்னர் மன்றில் ஆஜராகி பிடியாணையினை வாபஸ் பெற்றுக்கொண்டேன்” என்றார்.

“நீதிமன்றத்தில் ஒரு தாய் தனது குழந்தையை பராமரிக்கவும், தாய்ப்பால் கொடுக்கவும், குழந்தையை கவனித்துக்கொள்ளவும் பொருத்தமான இடமொன்று இல்லாமையினால் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றங்களுக்கு சிறு குழந்தைகளை சுமந்து செல்லும் தாய்மார்களுக்கென விசேடமாக இடமொன்றை ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறுவது போன்று நீதிமன்றம் உள்ளிட்ட அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் தாய்ப் பாலுட்டுவதற்கான வசதி இன்று வரை ஏற்படுத்தப்படவில்லை.

“குழந்தையினை பிரசவித்த பெண்ணொருவர், குழந்தைக்கு பெயர் பதிவு வைத்தல், தடுப்பூசி ஏற்றல் உள்ளிட்ட தனது  அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக குழந்தையுடன் வெளியே செல்ல வேண்டியுள்ளது. இதன்போது தாய்ப் பாலூட்டல் செயற்பாட்டிற்காக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்” என பெண் மனித உரிமை செயற்பட்டாளர் நளினி ரட்ணராஜா தெரிவித்தார்.

“எவ்வாறாயினும் இந்த பிரச்சினைகள் ஒருபோதும் வெளியே வருவதில்லை. இப்பிரச்சினையினால் அவர்கள் தாய்ப் பாலுட்டலை நிறுத்தவும் முயற்சிக்கின்றனர். எதிர்கால தலைவர்களான இந்த குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பதற்கு தாய்ப்பாலுட்டல் இன்றியமையாதொன்றாகும். இதற்காக அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் தாய்ப் பாலுட்டுவதற்கான வசதி உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

குழந்தையினை பிரசவித்த பெண்ணெருவருக்கு சம்பளத்துடன் 84 நாட்கள் (வார இறுதி நாட்கள், போயா மற்றும் பொது விடுமுறைகள் உள்ளடக்கப்படாமல்) கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எந்தவளவிற்கு தனியார் அலுவலகங்களில் அமுல்படுத்தப்படுகின்றது என்பது பாரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதேவேளை, அரசாங்கத்தினால் கடந்த வருடம் நியமனம் வழங்கப்பட்ட பெண் பட்டதாரிகளுக்கு வார இறுதி நாட்கள், போயா மற்றும் பொது விடுமுறைகள் உள்ளடங்களாக 42 நாட்கள் மாத்திரமே மகப்பேற்று விடுமுறை வழங்கப்படுகின்றன.

இதன் காரணமாக அவர்கள் தாய்ப்பாலுட்டல் செயற்பாட்டில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குழந்தையொன்றுக்கு ஆகக் குறைந்தது ஆறு மாதங்களாவது தாய்ப் பாலுட்ட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகியன தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

இவ்வாறான நிலையில் மகப்பேற்று விடுமுறையின் பின்னர் அலுவலங்களிற்கு செல்லும் பெண்கள் தாய்ப் பாலுட்டலில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கின்றனர். இதன் காரணமாகவே அலுவலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தாய்ப்பாலுட்டும் நிலையங்களை உருவாக்குமாறு யுனிசெப் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்றது.

“இந்த நிலையங்கள் சிறந்த காற்றோட்டமுள்ளதாகவும், நீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டு உட்காருவதற்கு சிறந்த கதிரைகள் போடப்பட்டிருந்தால் மாத்திரமே முழுமைபெறும்” என பெண் மனித உரிமை செயற்பட்டாளர் நளினி ரட்ணராஜா தெரிவிக்கிறார்.

தாய்மார்களின் மனநிலையினைப் பொருத்தே அவர்களுக்கு பால் சுரக்கின்றது. அதனாலேயே அவர்களின் மனநிலையினை திடமாக வைத்துக்கொள்வதற்கு இப்படியான நிலையங்களின் அவசியம் தேவைப்படுவதற்கான பிரதானமாக காரணமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல உலக நாடுகளில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளான உகண்டா மற்றும் சிம்பாபே போன்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் தனியான தாய்ப் பாலுட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கான  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எமது அண்டை நாடான இந்தியாவில் பொது இடங்களில் தாய்ப்பாலுட்டுவதற்கான நிலையங்களை அமைத்து தருமாறு கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக அவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இலங்கையில் தாய்ப் பாலூட்டுவதற்கு பொது இடங்களில் தனியான இடவசதி தேவை என்ற விழிப்புணர்வு இதுவரை சமூக மட்டத்தில் ஏற்படுத்தப்படாமை கவலையளிக்கும் செயற்படாகும்.

கொழும்பிலுள்ள சில தனியார் வைத்தியசாலைகளில் மாத்திரமே குழந்தைகளுக்கு தாய்ப் பாலுட்டும் அறைகளை காணமுடிந்தது. பொது இடங்களில் தாய்ப் பாலூட்டுவதற்கான நிலையங்கள் இல்லாமையால் தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

எவ்வாறாயினும், கைக் குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும், தாய்மார்கள் இருக்கும் இடத்திலேயே பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் பாலூட்டுகின்றனர்.

இந்த சமயத்தில் கைக் குழந்தைகளுக்கு தேவையானளவு தாய்ப் பால் வழங்கப்படுகின்றதா என்பது பாரியதொரு கேள்வியாகும். இந்தப் பிரச்சினையினால் பெண்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. பொது இடங்களில் இருக்கின்ற ஆண்களும் பாதிக்கின்றனர்.

இதேவேளை, நீதிமன்ற முறையில் பாலூட்டும் தாய்மார்களுக்கான விசேட ஏற்பாடொன்றினை மேற்கொள்வதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் பேஸ்புக் பதிவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்

குறித்த பேஸ்புக் பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்ற முறையில் பாலுட்டும் தாய்மார்களுக்கான எந்த விசேட ஏற்பாடும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இது வாழ்க்கையின் முக்கியமான பகுதியாகும். எந்தவொரு தாயும் நீதிமன்றில் ஆஜராகும்போது தங்களின் குழந்தைக்கு உணவளிப்பதில் எந்த சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை

நீதிமன்ற முறையில் குழந்தை பராமரிப்புக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த பணிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன், தற்போது நடந்துகொண்டிருக்கும் நீதி செயற்பாட்டு சீர்திருத்தத்தில் இதற்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றார்.

எவ்வாறாயினும், “பொது இடங்கள் மற்றும் தொழில்புரியும் நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் அறைகள், குழந்தை வளர்ப்பு நிலையங்கள் இன்மையினால் குழந்தைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதுடன், தாய்மாரும் வேலையில் கவனம் செலுத்துவது மிகக்குறைவாக உள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.

“இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம்செலுத்தி பொது இடங்களில் பாலூட்டும் அறைகள், குழந்தை வளர்ப்பு நிலையங்கள் ஆகியவற்றினை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.