கழிவுகளிலிருந்து சக்தி உருவாக்கல்; கடுவெல மாநகர சபை - UNDP இணைந்து கழிவுப்பொருள் முகாமைத்துவம்

கழிவுகளிலிருந்து சக்தி உருவாக்கல்; கடுவெல மாநகர சபை - UNDP இணைந்து கழிவுப்பொருள் முகாமைத்துவம்

உக்கக்கூடிய திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரத்தையும் திரவப் பசளையையும் உற்பத்தி செய்வதன் மூலம் மாநகரக் கழிவுப்பொருள் முகாமைத்துவச் செயற்பாட்டில் பெரும் மாற்றத்திற்கு வழிகோலும் முகமாக, ஒரு உயிர்வாயு உற்பத்தி அமைப்பு கடுவெல மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடுவெல மாநகர முதல்வர் புத்திக்க ஜயவிலால் தலைமையில் இது தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரொபட், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த உயிர்வாயு அமைப்பு, நாள் ஒன்றிற்கு 1 மெட்ரிக் தொன் கழிவுகளைப் பதனிடக்கூடியதென வெற்றிகரமான முன்னோடிக் கட்டம் எடுத்துக்காட்டியுள்ளதைத் தொடர்ந்து, UNDPயும்  KMCயும் கூட்டாக மேற்கொள்ளும் இம் முன்முயற்சியின் மூலம் நாள் ஒன்றிற்கு 10 மெட்ரிக் தொன் உக்கக்கூடிய திடக்கழிவுகளைப் பதனிடக்கூடியதாக அதன் செயற்றிறனை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வழமையாக குப்பை மேடுகளுக்கு அனுப்பப்பட வேண்டியிருந்த இத்திடக்கழிவுகள் மூலம் இப்பொழுது தேசிய மின்னுற்பத்தி அமைப்பிற்கு வழங்கக்கூடிய மின்சக்தியையும் திரவச் சேதனப் பசளையையும் உற்பத்தி செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அது மட்டுமன்றி, கிறீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை ஆண்டொன்றிற்கு 1,000 முதல் 3,000 மெட்ரிக் தொன்னால் குறைப்பதற்கும் வழிபிறந்துள்ளது.    நாட்டில் தினமும் சேகரிக்கப்படும் கழிவுப்பொருள்களில் 59 சதவீதமானவை மேல் மாகாணத்திலிருந்தே சேகரிக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, மேல் மாகாணத்தில் தினமும் 4,200 மெட்ரிக் தொன்னுக்கு மேற்பட்ட கழிவுப்பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் உயிரியல் ரீதியாக உக்கக்கூடியவை. எனினும், பயன்விளைவான மற்றும் செயற்றிறன் வாய்ந்த கழிவு முகாமைத்துவ அமைப்புகள் ஏற்படுத்தப்படாவிட்டால், கழிவுகளின் இந்த உக்கும் தன்மை காரணமாக சுற்றாடல் மற்றும் சமூகத்திற்குப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

இலங்கையில் UNDP ஆனது 2016 டிசம்பரில் கடுவேலா நகராட்சி மன்றத்துடன் இணைந்து அரசாங்க கூட்டு நிதியுதவியுடனான வேலை திட்டம் ஒன்றை மேற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. மேலும் திடக்கழிவுகளை திறம்பட நிர்வகிக்கவும், உயிர்வாயு உற்பத்தியை மேற்கொள்ளவும் கடுவேலா நகராட்சி மன்றம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகிறது.

2023ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை 70 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட பசுமை மிக்க இலங்கைக்கான அரசாங்கத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது.

மேலும் 2030க்குள் இலங்கையை எரிசக்தி தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் 2015 எரிசக்தி துறை மேம்பாட்டு திட்டதின் ஒரு பகுதியாகவும் இது காணப்படுகிறது.