சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நாணயம் வெளியீடு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு  நிறைவை முன்னிட்டு நாணயம் வெளியீடு

சீன - இலங்கை உறவுகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம், மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் முன் பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது. கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் "இலங்கை - சீனா 65 ஆண்டுகள்" என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் "சீன கம்யூனிஸ்ட் கட்சி" என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.