கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அக்கரைப்பற்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அக்கரைப்பற்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

-நூருல் ஹுதா உமர்-

கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று (14) வியாழக்கிழமை தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் அமர்வு மேயர் அதாஉல்லா அகமட் சகி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, எமது மத உரிமையை பெற்றுக்கொள்ள கொவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்ட எங்களது முஸ்லிம்களின் னாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, காதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 தொற்று காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கான கோரிக்கை எனும் தலைப்பிட்ட குறித்த கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முழு உலகையும் ஆட்கொண்டுள்ள கொவிட் - 19 வைரஸ் எமது தாய்த் திருநாட்டையும் காவுகொண்டுள்ள இந்த இக்கட்டான நிலையில் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பதற்கு தங்களால் மேற்கொள்ளப்படும் அதிஉன்னத செயற்பாடுகளுக்கு எமது சபை சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த உன்னத பணியில் தங்களுடன் இணைந்து செயற்படுகின்ற தங்களின் கீழ் இயங்கும் செயலணி, சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத் துறையினர், பொலிஸார் போன்றோரின் சேவைகளைக் கௌரவிக்கின்றோம்.

உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளையே திண்டாட்டத்திற்குள்ளாக்கியுள்ள இந்த வைரஸ் தொற்றை வெற்றிகரமாக கையாளும் நாடுகளின் தரவரிசையிலும், அதன் தலைவர்களின் தரவரிசையிலும் முக்கிய இடத்தை எமது நாடும் அதன் தலைவரான நீங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது, எமது நாடும் எமது மக்களும் தங்களது தலைமையின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர் என்ற நம்பிக்கையை எமக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடிய தொற்றுக் காரணமாக உலக நாடுகள் அச்சமடைந்துள்ளதுடன், மக்கள் மன உளைச்சலுக்கும் உட்பட்டுள்ளனர். அதிலும் எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாங்கள் கடந்த 2020 ஏப்ரல் 11ஆம் திகதி வெளியான 2170/8ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டம் தொடர்பான அதிவிடே வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலுக்கமைய மிகுந்த மன வேதனையும் மன உளைச்சலையும் அடைந்துள்ளோம் .

எங்களது சமயத்தின் பிரகாரம் மரணித்த உடல்கள் ஜனாஸாக்கள் என அழைக்கப்படும் அவற்றிற்கு முக்கிய 04 கடமைகளை நிறைவேற்றுவது இஸ்லாமிய சமயத்தால் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் இறுதியானது அவ்வுடல்களை மண்ணில் புதைத்து நல்லடக்கம் செய்வதாகும்.

தீயிட்டு எரிவூட்டுவதற்கு எமது சமயத்தில் எந்த அனுமதியும் இல்லை . ஆனால் குறித்த வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தலில் 614 ( 1 ) ( அ ) . ( ஆ ) இன் பிரகாரம் முழுமையாக எரிவூட்டுவதற்கு ( 800 1200 ° C இல் 45 தொடக்கம் 60 நிமிடம் ) வலியுறுத்தப்பட்டுள்ளது . அதற்கேற்ப கடந்த காலங்களில் இத்தொற்று காரணமாக மரணமடைந்த 04 இஸ்லாமிய சகோதரர்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டுள்ளன .

இது இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய எங்களுக்கும் , முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மன வேதனையளிக்கின்றது . இதே வேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலில் கொரோனா தொற்று காரணமாக பரணமடையும் உடல்களை இறுதி அகற்றல் குறித்து குறிப்பிடுகையில் இது ஒரு அடிப்படை மனித உரிமையாகக் குறிப்பிடப்படுவதுடன் , இதனை மேற்கொள்ளும் முறைகளில் 1.5 முதல் 3 மீற்றர் ஆழமான குழிகளில் அடக்கம் செய்வதற்கும் வழிகாட்டியுள்ளது .

இந்நடைமுறையினை அனேக உலக நாடுகள் பின்பற்றுகின்றமையை காணக்கூடியதாயுள்ளன . ஆனால் எமது நாட்டில் இவ்வாறு எரிவூட்டுவதானது குறித்த ஒரு சமூகத்தின் மத உரிமையை பெற்றுக் கொள்ளமுடியாது தவிர்ப்பதாக முஸிலிம் சமூகம் கவலையடைகின்றது. எனவே பல்லின சமூகம் வாழுகின்ற இந்நாட்டில் மத நல்லிணக்கம் , சமூக ஒருமைப்பாடு என்பனவற்றைக் கருத்திற் கொண்டும் . இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கும், சமய முறைப்படி இறுதிக் கிரியைகளை நடாத்துவதற்கும் மதிப்பளித்து மேற்குறித்த 2170/8 ம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் - 19 தொற்றினால் மரணமடையும் ஜனாஸாக்களை மண்ணில் நல்லடக்கம் செய்வதற்கு திருத்தம் செய்யும் கட்டளையை பிறப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்" என அவ்வறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.