கிடைத்துள்ள ஓய்வை வியாபாரிகள் நன்கு பயன்படுத்துவார்களா?

கிடைத்துள்ள ஓய்வை வியாபாரிகள் நன்கு பயன்படுத்துவார்களா?

றிப்தி அலி

புதிய வகையான கொரோனா வைரஸின் பரவல் காரணமாக இன்று முழு உலகமுமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. குறிப்பாக இலங்கை, இந்தியா, இத்தாலி, சவூதி அரேபியா, பஹ்ரேன், பிரித்தானியா மற்றும் குவைத் உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு பல நாட்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த கொரோனா பீதியில் இருந்து விடுபட இன்னும் எத்தனை வாரங்கள் அல்லது எத்தனை மாதங்கள் எடுக்கும் என எவராலும் சரியாக கணிக்க முடியாதுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த கொரோனாவின் பாதிப்பை சந்தித்தே தீரும். குறிப்பாக உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இந்த கொரோனாவின் தாக்கத்தை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே தீருவான் என்பது நிச்சயமாகும்.

இந்த கொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வரலாற்றில் முதற் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமான வீழ்ச்சியை கடந்த 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 190.61 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அது மாத்திரமல்லாம் கொழும்பு பங்குச்சந்தையின் பங்குபரிவர்த்தனை நடவடிக்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கொழும்பு பங்குச்சந்தையின் பங்குபரிவர்த்தனை ஐந்து நாள் விடுமுறைக்குப் பின்னர் கடந்த மார்ச் 20ஆம் திகதி  ஆரம்பமானது.

ஆரம்பித்து இரண்டு நிமிடங்களுள் ஐந்து சதவீதம் தீடிரென சரிந்து 30 நிடங்களுக்கு வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டது. மீண்டும் ஆரம்பித்த வர்த்தகம் முடிவின் போது மொத்தம் 11.90 சதவீதம் சரிந்தது. வரலாற்றில் ஒரு நாளையில் சரிந்த மிகப் பெரிய தொகை இதுவாகும் என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் யுத்த இடம்பெற்ற காலத்தில் கூட இந்தளவு பாரிய சரிவை கொழும்பு பங்குகள் சந்தித்தது இல்லை என்பது முக்கிய விடயமாகும். அதேவேளை, கொரோனா வைரஸினை நாட்டில் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஏழு கோடி ரூபாவினை அன்பளிப்பு செய்த நாட்டின் முன்னணி பணக்காரரான தம்மிக்க பெரேரா முதல் தினசரி கூலித் தொழில் செய்யும் நபர் வரை அனைத்து தரப்பினரும் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில், எமது நாட்டில் மார்ச் நடுப் பகுதியிலிருந்தே ஏப்ரல் புதுவருட பண்டிகை காலப் பகுதிக்கான வியாபாரம் கலைகட்டத் தொடங்கும். எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரன நிலை காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்த நிலை ஏப்ரல் புதுவருடம் வரை தொடரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 2020ஆம் ஆண்டுக்கான புதுவருட வியாபாரம் முற்றாக தடைப்படும். இந்த பருவ வியாபாரத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான முன்னேற்பாடுகளை அனைத்து விதமான வியாபாரிகளும் மேற்கொண்டுள்ளனர். இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மத்தியில் பாரிய அச்ச உணர்வொன்று தற்போது தோன்றியுள்ளது.

கடந்த 11 மாத காலப் பகுதிக்குள் நாட்டில் இரண்டு தடவைகள் அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் மற்றம் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் போன்ற சம்பவங்களாகும்.

இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் நேரடியாக பாதிக்கப்படவர்கள் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களேயாகும். ஈஸ்டர் தற்கொலை தாக்குதலினால் ஏற்பட்ட நட்டத்திலிருந்து இதுவரை மீள முடியாத நிலையில் பல வர்த்தகர்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் மற்றுமொரு பொருளாதர நெருக்கடியினை எமது நாட்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனாலே வர்த்தகர்களுக்கு அச்ச உணர்வொன்று ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 12 மணித்தியாலங்களுக்கு மேல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக தற்போது வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வீடுகளிலிருந்து தற்போது உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதன் காரணமாகவே இந்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸினை விடக் கொடியது தான் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ள பய உணர்வாகும். இக்காலப் பகுதியில் வியாபாரம் தொடர்பில் அதிகம் யோசிக்காமல் ஓய்வை நன்கு பயன்படுத்திக் கொள்வதே பயனுள்ளதாகும்.

இந்த வேளையில் இறையச்சத்தினை அதிகரிக்கும் நடவடிக்களில் அதிகமாக ஈடுபட வேண்டும். குறிப்பாக பர்ளான மற்றும் சுன்னத்தான தொழுகைகளில் ஈடுபடல், அல்குர் ஆன் ஓதுதல், நோன்பு பிடித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

இதற்கு மேலதிகமாக அதிகாலையில் எழுந்து உடற் பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு வர்த்தகருக்கு தேக ஆரேக்கியம் மிக முக்கியமானதாகும். அதனை உடற் பயிற்சியின் ஊடாகவே பெற முடியும். இதற்கு மேலதிகமாக மனதில் காணப்படுகின்ற அச்சயம், கவலை, சோகம் போன்றவற்றினை இந்த உடற் பயிற்சியின் ஊடாக இல்லாமலாக்க முடியும்.

உலகில் வெற்றியடைந்த அனைத்து தொழலதிபர்களும் இஸ்லாம் கூறுவது போன்று அதிகாலையில் எழுந்து தங்களது தினசரி கடமைகளை முன்னெடுத்தவர்களாவார். அவர்கள் போன்றும் நானும் அதிகாலையில் எழுந்து உடற் பயிற்சிகளை தினசரி மேற்கொள்ளும் பழக்கத்தினை இன்றிலிருந்த உருவாக்கிக் கொள்வோம்.

அதிகாலையில் எழும்புகின்ற போது அதிக நேரம் கிடைக்கும். இதனால் வர்த்தக நடவடிக்கை நேர காலத்தோடு ஆரம்பிக்க முடிவதோடு அதற்கு முன்னர் எமது சொந்தத் தேவைகள் அனைத்தினை நிவர்த்தி செய்ய முடியும்.

அதேபோன்று, 'கண்டது கற்க பண்டிதனாவான்' எனும் முதுமொழிக்கு அமைய இந்த காலப் பகுதியில் வர்த்தகர்கள் வாசிக்கும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் கற்பதல்ல. மாறாக, தினசரி பத்திரிகளை, வியாபார சஞ்சிகைகள், வெற்றியடைந்த தொழிலதிபர்களின் வரலாறுகள் போன்றவற்றினை எமது வர்த்தகர்கள் வாசிக்க முடியும்.

வாசிப்பு என்பது ஒரு மனிதனின் குழப்பமான மனநிலையை அகற்றி நன்னிலைப்படுத்த உதவுகிறது. மனதில் எவ்வளவு துன்பங்கள் மற்றும் தாங்க முடியாத துயரங்கள் காணப்பட்டாலும் தினசரி வாசிப்பின் ஊடாக அவற்றினை இல்லாமலாக்க முடியும்.

அதேபோன்று புதிய விடயங்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை வாசிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், இந்த வாசிப்பு - எமக்கு சிறந்த வழிகாட்டியாக,  அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் வாசிப்பு என்பது வர்த்தகரொருவருக்கு இன்றியமையாததொன்றாகும். எனினும் வர்த்தகர்களின் வேலைபழு, நேர முகாமைத்துவமின்மை மற்றும் ஒழுங்கான திட்டமிடலின்மை போன்ற காரணங்களினால் வாசிப்பு தவறவிடப்படுகின்றது.

எனவே, கொரோனா வைரஸினால் கிடைக்கப் பெற்றுள்ள இந்த ஒய்வு காலப் பகுதியிலிருந்து வர்த்தக்கர்கள் வாசிக்கும் பழக்கத்தினை உருவாக்க வேண்டும். எதிர் மறையான சூழ்நிலையினை நேர்  மறையான சூழ்நிலையாக மாற்றுபவனே ஒரு தொழில் முயற்சியாளராவார்.

அந்த அடிப்படையில் நாம் அனைவரும் எதிர் மறையாக கருதும் கொரேனா வைரஸினால் கிடைக்கப் பெற்ற இந்த ஓய்வு காலத்தினை நேர்  மறையாக மாற்ற வேண்டிய பொறுப்பும் வர்த்தகர்கள் அனைவரிடமுள்ளது.

எனவே ஓய்வு காலப் பகுதியில் இறை நம்பிக்கை. உடற் பயிற்சி மற்றும் வாசிப்பு ஆகிய மூன்று விடயங்களையும் அனைத்து வர்த்தகர்களும் தங்களுக்கு ஏற்படுத்தி மரணிக்கும் வரை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த மூன்று விடயங்களும் எதிர்காலத்தில் தங்களின் வியாபாரத்தில் எதிர்கொள்ளப் போகின்ற சவால்களை வெற்றி கொள்ள பெரிதும் பங்களிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.