கொரோனா: இலங்கையில் மரணித்த முதல் நபர் முஸ்லிமா? (போலிச் செய்தி உருவானது எப்படி)

கொரோனா: இலங்கையில் மரணித்த முதல்  நபர் முஸ்லிமா? (போலிச் செய்தி உருவானது எப்படி)

-றிப்தி அலி-

புதிய வகையான கொரோனா வைரஸின் பரவல் காரணமாக சுமார் 150க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் பரவும் வீதத்தினை விட அதிக வேகத்தில் இது தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்டுகின்றன.

கொரேனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாரவில பிரதேசத்தினைச் சேர்ந்து சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கடந்த சனிக்கிழமை (29) இரவு உயிரிழந்தார். இந்த அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்து. எனினும் அவரின் பெயரையோ அல்லது எந்த இனத்தினைச் சேர்ந்தவர் என்றோ சுகாதார அமைச்சு அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 8.00 மணியளவில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் முஹம்மத் றுபினாஸ் எனும் முஸ்லிம் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாக தகவல் பரப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்த முஹம்மத் றிப்னாஸின் ஜனாஸா முஸ்லிம் மையாவடியொன்றில் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வீடியோ ஒன்றும் வைரலாகியது.

இதே செய்தியுடன் இணைந்ததாக வைத்தியசாலையில் ஜனாஸா தொழுகை நடத்தப்படும் படமொன்றும் பகிரப்பட்டது. சிங்களவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மாரவில பிரதேசத்தில் எவ்வாறு முஸ்லிமொருவர் வாழ்ந்திருக்க முடியும் என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது.

இதனையடுத்து மேற்குறிப்பிட்ட செய்திகளை தனக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பிய இருவரையும் தொடர்புகொண்டு வினவினேன். "தங்களுக்கு வட்ஸ்அபிள் கிடைத்த செய்தியினை தன்னுடன் பகிர்ந்துகொண்டதாக" சிறு பிள்ளை போன்று இருவரும் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த போலி செய்தி எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் ஆராய முற்பட்டேன். மேற்குறிப்பிட்ட இரண்டு செய்திகள் தொடர்பிலும் சக ஊடகவியலாளர்கள் பலரை தொடர்புகொண்டு ஆராய்ந்த போதும், அவர்கள் இது தெரியாது என்றனர்.

இச்சயமத்தில் குறித்த இரண்டு செய்திகளும் சமூக ஊடகங்களில் மிக வைரலாக பரவுகிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பேஸ்புக் சென்ற போது தான் இந்த போலி செய்தி உருவான விடயம் தெரிய வந்தது.

அதாவது 28ம் திகதி சனிக்கிழமை இரவு 8.01 மணிக்கு ஆதம்பா ஜெலீல் என்பவர் முதலாவது கோவிட்19 மரணம் நிகழ்ந்ததாக பேஸ்புகில் பதிவொன்றை இடுகிறார். உடனே அந்தச் செய்தியின் ஆதாரத்தை முஹம்மத் றுபினாஸ் என்பவர் கொமன்டில் வினவுகிறார்.

பதிவை இட்டவர் இதற்கான ஆதாரத்தை றுபினாசுக்கு கொமென்டில் தெரிவிக்கிறார். அந்த கொமன்டை முஹம்மத் றுபினாஸின் பெயரோடு சேர்த்து யாரோ ஒருவர் கொப்பி பேஸ்ட் பண்ணி மெஸேஜ் ஆக ஏனையோருக்கு அனுப்புகிறார். இதனால் முஹம்மது றுபினாஸ் என்பவர் தான் இறந்த முதலாவது கோவிட் நோயாளி என்பதாக வட்சப் மற்றும் பேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களில் வேகமாக பொய்ச் செய்தி பரப்பப்படுகின்றது.

குறித்த கொமன்டினை கொப்பி பேஸ்ட் பண்ணி மெஸேஜ் ஆக அனுப்பியவரினாலேயே இந்த போலிச் செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் யாரென்று இதுவரை தெரியாதுள்ளது. குறித்த நபர் தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பது யாருக்கும் இதுவரை தெரியாது.

எனினும், ஒருவர் செய்த பிழையான நடவடிக்கையின் காரணமாக போலிச் செய்தியொன்று உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பரப்பட்டுள்ளது. அவருக்கு பிரார்த்தனை செய்யுமாறு மற்றவர்களையும் வட்சப் மற்றும் பேஸ்புகில் வேண்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று செய்திகளும் எங்கிருந்து வெளியானது,  யாரால் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. எனினும் இந்த செய்திகளினை வட்சப் மற்றும் பேஸ்புகில் பார்வையிட்டவர்கள் இவற்றின் உண்மைத் தன்மையினை ஆராயாமல்  செய்தி கிடைத்த வேகத்தில் பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்தனர்.

இதுவும் ஒரு தவறான விடயமாகும். ஒரு செய்தியொன்று கிடைத்தால் அதனை ஏனையவர்களுக்கு பகிர முன் பின்வரும் விடயங்களை கட்டாயம் அவதானிக்க வேண்டும். அதாவது:

1.    இந்த செய்தி உண்மையானதா?
2.    இந்த செய்தி ஏனையோருக்கு உதவக் கூடியதா?
3.    இந்த செய்தி ஏனையவருக்கு ஊக்கமளிக்குமா?
4.    இந்த செய்தி நம்பகத் தன்மையான ஊடகமொன்றிலிருந்து வந்துள்ளதா?
5.    இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மூலம் (source) பொருத்தமான நபரா?

மேற்குறிப்பிட்ட விடயங்களை கட்டாயம் அவதானித்த பின்னரே ஒரு செய்தியினை ஏனைய நபர்களுக்கு பகிர வேண்டும். இவற்றினை அவதானிக்கமாலேயே நாம் செய்தி கிடைத்த வேகத்தில் சமூக ஊடகத்தில் செய்திகளை பரப்புகின்றோம்.

இவ்வாறு சில நபர்களின் அறியாமையினால் பரப்பப்படும் போலிச் செய்திகள் காரணமாக சில அப்பாவிகள் சட்ட நடவடிக்கையினை எதிர்நோக்கிய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.

தற்போ எம்மோடு உயிர்  வாழ்ந்து கொண்டிருக்கிற முஹம்மத் ருபினாஸிற்கே இந்த நிலை என்றால் ஊர், பெயர் தெரியாத பல்வேறு நாடுகளில் உள்ள நபர்களில் பெயர்களில் இருந்து எவ்வளவு பொய்கள் பரவும் என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

இன்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம், சுகாதார அமைச்சு, அதன் கீழுள்ள சுகாதார மேம்பாட்டு திணைக்களம், இராணுவம், அரசாங்க தகவல் திணைக்களம் போன்ற அரச அமைப்புக்கள் உடனுக்குடன் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

இந்த செய்திகளை நாட்டிலுள்ள பிரதான ஊடகங்களான பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் நம்பகமான செய்தி இணையத்தளங்கள் உடனுக்குடன் மக்களுக்கு வழங்கி வருகின்றன.

தகவல்களை செய்திகளாக தருவதற்கென்று தொழில் முறையான ஊடகவியலாளர்கள் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் செயற்படுகின்றனர். அவர்களின் வேலையை நான் முந்தி, நீ முந்தி என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளும் அனுபவம் அற்றவர்களினாலேயே இந்த போலிச் செய்திகள் பகிரப்படுகின்றமை அவதானிக்கப்படுகின்றது.

இந்த போலிச் செய்தி பரப்புகின்ற செயற்பாடு அனைத்து சமயங்களினாலும்  தடை செய்துள்ளது. அது மாத்திரமல்லாமல்  போலிச் செய்தி பரப்புகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது வீடுகளில் ஓய்வாக இருக்கின்றோம் என்ற அடிப்படையில் வரும் அனைத்து செய்திகளையும் பகிர்வதை தவிர்த்து நம்பத்தகுந்த மூலங்களில் இருந்து வரும் செய்திகளை மாத்திரம் நம்பி, அதனை ஏனையவர்களுடன் பகிர்வோம்.