கல்முனை RDHSற்கு எதிராக வழக்கு தாக்கல்

கல்முனை RDHSற்கு எதிராக வழக்கு தாக்கல்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனிற்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனர்தீன் என்பவரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை காலதாமதமாவதற்கு நீதிமன்ற செயற்பாடு காரணமாகும்" என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன், கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

"கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர்களை சட்டத்தின் முன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும் நீதிமன்ற செயற்பாடு காரணமாக காலதாமதமாகின்றது. நீதிமன்ற செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கும் பட்சத்தில் எத்தனை பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும்," எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் கல்முனை சுகாதார பிராந்தியத்திலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குகள் எதனையும் தாக்கல் செய்யமாலும், நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்றங்கள் முறையாக இயங்குவதில்லை என்றும் பிராந்திய  சுகாதார பணிப்பாளர் கூறியமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை கல்முனை நீதவான் ஐ.ஏன் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணனையும், குறித்த செய்தியினை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த ஊடகவியலாளர் பாறுக் சிஹானையும் எதிர்வரும் 16ஆம் திகதி புதன்கிழமை மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.