அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை ஜூலை 15 சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தைத் தணிப்பதற்கும் வழங்கப்பட்ட தவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

யு.எஸ். எயிட் ஊடாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஒக்சிமீட்டர்கள் போன்ற அவசர மருத்துவப் பொருட்களையும், கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளையும் அனுப்பியமைக்காக அவர் குறிப்பாக அமெரிக்க சாங்கத்தைப் பாராட்டினார்.

இரு நாடுகளும் அனுபவித்து வரும் வலுவான அரசியல் மற்றும் பொருளாதார இருதரப்பு ஒத்துழைப்பைப் பயன்படுத்தி, அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் தனியார் துறை முதலீடுகளையும் வெளிநாட்டு அமைச்சர் வரவேற்றார்.

பங்காண்மை உரையாடல் மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.