கலையரசன் எம்.பியின் இடைக்கால நிவாரணக் கோரிக்கை நிராகரிப்பு

கலையரசன் எம்.பியின் இடைக்கால நிவாரணக் கோரிக்கை நிராகரிப்பு

றிப்தி அலி

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் இடைக்கால நிவாரணமொன்றை வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி. கலையரசனினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24) நிராகரிக்கப்பட்டுள்ளது

கடந்த ஜனவரி 26ஆம் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரீட் மனுவில் கோரப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கான உத்தரவு 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 15ஆம் திகதி அறிவித்திருந்தது.

இதற்கமைய, குறித்த ரீட் மனுவில் கோரப்பட்ட இடைக்கால நிவாரணங்களை வழங்க முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனியான பதிவேட்டை நிறுத்துமாறு காணிப் பதிவாளர் நாயகத்தினால்  மேலதிக மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ள 2022.04.18 திகதிய கடிதத்தை இரத்து செய்தல், கல்முனை வடக்கு பிரிவு ஓர் உப பிரதேச செயலகமாக அல்லது கல்முனை பிரதேச செயலாளரின் ஆளுகைக்கு உட்பட்ட அலுவலகமாக செயற்படுத்துவதிலிருந்தும் பிரதிவாதிகளை தடை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக காரியாலயத்தை  முழு அதிகாரமும்  வலுவும் உடையதுமான பிரதேச செயலகமாக தொடர்ந்தும் செயற்பட பிரதிவாதிகளைப் பணித்து நிவாரணம் வழங்கல் மற்றும் வழக்கு முடியும் வரை கல்முனை வடக்கு பிரிவின் மேல் கல்முனை பிரதேச செயலாளருக்கு உள்ள அதிகாரத்தை தடை செய்தல் உள்ளிட்ட 11 நிவாரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் டி. கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தன.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொது நிர்வாக அமைச்சர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அம்பாறை மாவட்ட செயலாளர், கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த மனுவிற்கான இடையீட்டு மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜயவர்த்தன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கடந்த பல மாதங்களாக வாய் மொழி மூலமும், எழுத்து மூலம் இந்த மனுவிற்கான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே மனுதாரர் கோரிய இடைக்கால நிவாரணத்தை வழங்க முடியாது என்றும் இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும ஜனவரி 17ஆம் திகதி இடம்பெறும் என்றும் மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.