இன்றிரவு முஸ்லிம் சேவை ஒலிபரப்பாகவில்லை

இன்றிரவு முஸ்லிம் சேவை ஒலிபரப்பாகவில்லை

சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன இன்று (16) திங்கட்கிழமை மு.ப 11.30 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக SLBC தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி அமைச்சின் அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் 'விசன் எப்.எம்' எனும் கல்விச் சேவையொன்று இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையின்  102.1 அலைவரிசையும், பிறை எப்.எம் இயங்கிய 102.3 அலைவரிசையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிறை எப்.எமிற்கு விசேட அலைவரிசையொன்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய சேவைக்கு எந்தவித அலைவரிசையும் ஒதுக்கப்படவில்லை.

இதனால் தமிழ் தேசிய சேவை மற்றும் அதில் ஒலிபரப்பாகிய முஸ்லிம் சேவை ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், "முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் நாளை (17) செவ்வாய்க்கிழமை முதல் தென்றல் எப்.எம் இல் ஒலிபரப்பாகும்" என தமிழ் தேசிய சேவையின் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எனினும் தமிழ் தேசிய சேவை தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த புதிய சர்ச்சை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறவுள்ளதாதக தெரிவிக்கப்படுகின்றது.

SLBC தமிழ் தேசிய சேவை அதிகாலை 4.00 மணி முதல் இரவு  10.30 மணி வரை ஒலிபரப்பாகியது. இதில் காலை 8.00 - 10.30 மணி வரையும், இரவு 8 - 9 மணி வரையும் முஸ்லிம் சேவை ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.