பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள 'சுவ தரணி' மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கி வைப்பு

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள 'சுவ தரணி' மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கி வைப்பு

பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான 'சுவ தரணி' சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியினால் உத்தியோகபூர்வமாக இந்த 'சுவ தரணி' மருந்துப் பொதி  பிரதமரிடம் வழங்கப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய பயணித்து ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் உன்னத நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான 'சுவ தரணி' சுதேச மருந்துப் பொதியானது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான 'சுவ தரணி' பானம், மருத்துவ கஞ்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இந்த சுதேச மருந்துப் பொதிகளை முதல் கட்டமாக நாடு முழுவதும் அமைந்துள்ள சகல வழிபாட்டு தளங்களுக்கும், இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர்  காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக் குழாம் பிரதானி  யோஷித ராஜபக்ஷ மற்றும் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.