மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளரின் பெயரை வர்த்தமானியில் வெளியிட தடை விதிப்பு

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளரின் பெயரை வர்த்தமானியில் வெளியிட தடை விதிப்பு

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளரின் பெயரை வர்த்தமானியில் வெளியிட மேல் நீதிமன்றம் நேற்று (29) புதன்கிழமை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட எஸ்.எச்.எம். முஜாஹிர், அப்பதவியின் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்கள் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில்இ கடந்த 14ஆம் திகதி முதல் தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து வட மாகாண ஆளுநரினால் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவி நீக்கம் தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி வட மாகாண ஆளுநரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடி அற்றதாக்குமாறு கோரி, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தெரிவு, நேற்று (29) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில், மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது  மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இத்தேர்தலில், 21 உறுப்பினர்களில் 20 பேர் வாக்களித்தனர். இத்தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் கீழ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 06 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 02 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி கட்சி சார்பில் 01 உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 01 உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினரும் மொத்தம் 20 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர்.

இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜே.ஈ. கொன்சல் குலாஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் என். செபமாலை பீரீஸ்
ஆகியோர் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

இதில் முதல் சுற்றில், திறந்த போட்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ் 08 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இரண்டாம் சுற்று போட்டியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேசாலை உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகளைப் பெற்று, ஒரு மேலதிக வாக்கால் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தவிசாளர் தெரிவில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், புதிய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் ஆகியோருக்கும் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

எனினும் மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்தல், அவரது பெயரை வர்த்தமானியில வெளியிடுவதை நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கப்பட்ட தவிசாளரின் ரீட் மனு மீதான விசாரணைகள் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.