உள்ளுராட்சிப் பெண் உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

உள்ளுராட்சிப் பெண் உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிப் பெண் உறுப்பினர்களுக்கான 'கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்' எனும் செயற்திட்டத்தின் நான்காவது அமர்வு அண்மையில் (31ஆம் திகதி) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground) நிறுவனத்தின் அனுசரணையுடன், பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தின் ஊடாக இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்படி அமர்வு காலை மற்றும் மாலை நிகழ்வுகளாக இடம்பெற்றன.

காலை நிகழ்வில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசீஸ் வளவாளராக கலந்து கொண்டு; 'உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்குரிய சட்டங்கள் மற்றும் வகிபங்குகள்' எனும் தலைப்பில் விளக்கமளித்தார்.

இந்த அமர்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் மற்றும் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதனையடுத்து மாலை அமர்வு - அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர்களுக்கும் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கும்  இடையிலான கலந்துரையாடலாக  நடைபெற்றது.

இதன்போது, 'அரசியலில் பெண்களின் பங்களிப்பும் கண்காட்சியும்' எனும் தலைப்பிலான கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களை ஊடகவியலாளர்களுக்கு  காட்சிப்படுத்துவதற்கும், இரு தரப்பினருக்கும் இடையில் நெருங்கிய வலையமைப்பினை கட்டியமைப்பதற்குமான தளமாக - இந்த அமர்வு திட்டமிடப்பட்டிருந்தது.

நிகழ்வின் இறுதியில், ஜூன் 05ம், 06ம் திகதிகளில்  'பாலினக் கூர் உணர்வுடைய  செய்திகளை அறிக்கையிடல்' பற்றிய இணையச் செயலமர்வில்  கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த செயலமர்வினை  மேற்படி நிகழ்வுகளில் சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground) ஏற்பாடு செய்திருந்தது.

மேற்படி நிகழ்வுகளில் சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground) நிறுவனத்தின் பாலின ஆலோசகர் (Gender advisor) நளினி ரட்ணராஜா, டொக்டர் லவப்பிரதன் (ஆதார வைத்தியசாலை, அம்பாறை), பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தின் (AWF)  இணைப்பாளர் வாணி சைமன், அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர் (NGO Coordinator) இர்பான் மற்றும் வில் & வேஜ் திட்ட இணைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.