கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அரசாங்கம் என்ன சொல்கிறது?

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அரசாங்கம் என்ன சொல்கிறது?

தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை

றிப்தி அலி

கல்முனை பிரதேச செயலகம் மற்றும் சர்ச்சைக்குரிய கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பாக உள்ளூர் மட்டத்தில் மட்டுமன்றி, அரச நிறுவனங்களுக்கிடையிலும் மாறுபட்ட, குழப்பகரமான தகவல்கள் உள்ளமை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் ஊடாக வெளிப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டு அரச நிறுவனங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் எல்லை நிர்ணயம் போன்ற விடயங்களில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இழுபறி நீடித்து வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை அடுத்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி கல்முனை ஸ்ரீ சுபத்ராராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரினால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உறுதிமொழியினை அடுத்து குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை, தேர்தல் காலங்களில் அனைத்து இன அரசியல்வாதிகளும் இந்த விடயத்தினை கையில் எடுத்து தேர்தல் முதலீடாக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் அமைச்சர் கருணா அம்மன் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரின் பேசுபொருளாக இந்த விடயமே காணப்பட்டது.

தேர்தலுக்குப் பின்னர் கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசியல்வாதிகள் எடுக்கவில்லை. இந்த சர்ச்சையினை ஆராயும் நோக்கில் நாட்டிலுள்ள பல அரச நிறுனவங்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் சமர்ப்பித்திருந்தோம்.

அரசியல்வாதிகள் போன்று அரச நிறுவனங்களும் இந்த விடயத்தில் மாறுபட்ட தகவல்களையே வழங்கியது. தகவல் அறியும் விண்ணப்பங்களிற்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, அம்பாறை மாவட்ட செயலகம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கல்முனை மாவட்ட காணிப் பதிவகம், கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப் பெற்ற பதில்களை அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டுரை எழுதப்படுகின்றது.

பின்னணி

நீண்ட வரலாற்றினைக் கொண்டு கல்முனை பொது நிர்வாகம், கரைவாகு என்றும் அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் 'வன்னிமை' முறையில் இயங்கிய இந்த நிர்வாக சபை, 1946 இல் பிரதேச வருமான அதிகாரி (DRO) முறைக்கும், 1978 இல் உதவி அரசாங்க அதிபர் முறைக்கும் மாற்றப்பட்டது.

இவ்வாறு செயற்பட்ட கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தினை இரண்டாகப் பிரித்து உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் - கரைவாகு வடக்கு  (தமிழ்)  என்ற ஒன்றை உருவாக்குமாறு 1989.01.12ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சராக செயற்பட்ட கே.டப்ளியூ. தேவாநாயகம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்தார்.

இது போன்ற உத்தியோகபூர்வ அறிவித்தல் அமைச்சின் செயலாளரினாலேயே மேற்கொள்ள முடியுமே தவிர அமைச்சரினால் மேற்கொள்ள முடியாது என்பதனால், அப்போது கரைவாகு உதவி அரசாங்க அதிபராக செயற்பட்ட எம்.எச். முயினுதீன் இந்த உத்தரவினை அமுல்படுத்தவில்லை.

இதனால், இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் அக்கால கட்டத்தில் செயற்பட்ட தமிழ் ஆயுதக் குழுவான ஈ.என்.டி.எல்.எப் என அழைக்கப்படும் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினால் 1989.04.12ஆம் திகதி ஆயுத முனையில் சட்டவிரோதமாக கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முஸ்லிம் மற்றும் தமிழ் என இரண்டாக பிரித்தது.


இதனை உறுதிப்படுத்தும் வகையில் 1985ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கல்முனை உதவி அரசாங்க அதிபராக செயற்பட்ட எம்.எச். முயினுதீன் சத்தியக் கடதாசியொன்றினையும் வழங்கியுள்ளார்.

எனினும், பிரதேச மக்களிற்கு சேவையாற்றுவதற்காக 1989.01.12ஆம் திகதி இந்த பிரதேச செயலகம்' உருவாக்கப்பட்டது என கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் இயங்கிய அனைத்து உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களும் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க தத்துவங்கள் கைமாறல் (பெரும்பாகச் செயலாளர்கள்) சட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களாக மாற்றப்பட்டன.

எனினும், வட – கிழக்கு மாகாண சபையின் ஆசிர்வாதத்துடன் செயற்பட்ட கரைவாகு தமிழ் உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் இன்று வரை பிரதேச செயலகமாக மாற்றப்பட்டவில்லை.

புதிய பிரதேச செயலகமொன்றினை ஸ்தாபித்தல் அல்லது உப பிரதேச செயலகமொன்றினை பிரதேச செயலகமாக தரமுயர்த்துதல் ஆகியவற்றுக்கு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும்.

அவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் இன்று வரை குறித்த உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்காக வெளியிடப்படவில்லை.  இவ்வாறான நிலையில் இந்த உப பிரதேச செயலகம் 'பிரதேச செயலகம் - கல்முனை வடக்கு' மற்றும் 'பிரதேச செயலகம் - கல்முனை தமிழ் பிரிவு' என பயன்படுத்தப்படுவதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.

எனினும், அம்பாறை மாவட்டத்தில் 'கல்முனை – தமிழ் அல்லது கல்முனை - வடக்கு' என்ற பிரதேச செயலகமொன்று இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்தது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 19 பிரதேச செயலகங்களும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமும் காணப்படுவதாக உள்நாட்டலுகல்கள் இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டது. அவையாவன:

01    அட்டாளைச்சேனை
02    ஆலையடிவேம்பு
03    அம்பாறை
04    தமண
05    தெஹியத்தகண்டி
06    கல்முனை தெற்கு
07    காரைதீவு
08    லகுகல
09    மகாஓயா
10    நிந்தவூர்
11    பொத்துவில்
12    சம்மாந்துறை
13    திருக்கோவில்
14    உஹண
15    இறக்காமம்
16    சாய்ந்தமருது
17    நாவிதன்வெளி  
18    அக்கரைப்பற்று
19    பதியத்தலாவ

அது மாத்திரமல்லாமல் கல்முனை தெற்கு  பிரதேச செயலகத்தின் கீழே கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் செயற்படுகின்றது என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், கல்முனை பிரதேசத்தில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகள் காணப்படுகின்றமையினால் 'கல்முனை வடக்கு மற்றும் தெற்கு' என இரண்டு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, இந்த உருவாக்கம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் எமது அலுவலகத்தில் இல்லை என கூறுகின்றது.

அது மாத்திரமல்லாமல், அம்பாறை மாவட்டத்தில் 'கல்முனை தமிழ் பிரிவு' மற்றும் 'கல்முனை முஸ்லிம் பிரிவு' என்ற இரண்டு பிரதேச செயலகங்கள் காணப்படுவதாக கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் தெரிவித்தது.

இவ்வாறான நிலையில், கல்முனை பிரதேச செயலகம் இன ரீதியாக 'கல்முனை முஸ்லிம்' மற்றும் 'கல்முனை தமிழ்' பிரதேச செயலகங்கள் என பதிவாளர் திணைக்களத்தின் கீழுள்ள கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தினால் பிரிக்கப்பட்டு காணிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இங்கு மாத்திரமல்லாமல், கிழக்கு மாகாணத்திலுள்ள பல அரச நிறுவனங்களினால் இந்த உப பிரதேச செயலகம், 'பிரதேச செயலகம் - கல்முனை தமிழ் பிரிவு' என அழைக்கப்படுவதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.

இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக எந்தவொரு பிரஜையும் ஓரங்கட்டுதல் ஆகாது என இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் 2ஆவது உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சரத்தினை மீறியே கல்முனையில் தமிழ் மற்றும் முஸ்லிம் என நிர்வாக செயற்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

பெயர் மாற்றம்

இதேவேளை, கல்முனை பிரதேச செயலகத்தின் எல்லைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் இறுதியாக 2001.01.31ஆம் திகதி அப்போதைய பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு அமைச்சர் ரிச்சட் பத்திரணவினால் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானியில் கல்முனை பிரதேச செயலகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வழங்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் 'கல்முனை தெற்கு' பிரதேச செயலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் இணையத்தளத்திலும் 'கல்முனை தெற்கு' பிரதேச செயலகம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

எனினும், "எமது பிரதேச செயலகத்தின் பெயரில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவுமில்லை, அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவுமில்லை" என கல்முனை பிரதேச செயலகம் தெரிவித்தது.

இதேவேளை, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால்   அம்பாறை மாவட்ட செயலாளருக்கு 2021.03.31ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் 'பிரதேச செயலகம் - கல்முனை' மற்றும் 'உப பிரதேச செயலகம் - கல்முனை வடக்கு' என்றே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலினால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த அறிவிப்பை நீக்குவதற்கு பல தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்த போதிலும் அது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இராஜாங்க அமைச்சின் குறித்த அறிவித்தலையும் மீறி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், 'கல்முனை வடக்கு பிரதேச செயலகம்' என்ற இறப்பர் முத்திரையும் கடித தலைப்பினையும் தற்போதும் பயன்படுத்தி வருகின்றது.

கடந்த 2021.04.18ஆம் திகதி குறித்த உப பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலிலேயே இந்த விடயம் வெளிப்பட்டது.

அதிகாரம்

பிரதேச செயலாளர் இதுவரை நியமிக்கப்படாமையினால் உப பிரதேச செயலாளரே நிறுவனத் தலைவராக இருந்து பிரதேச செயலாளருக்குரிய கடமைகளை நிறைவேற்றி வருவதாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.

அது மாத்திரமல்லாமல் அம்பாறை மாவட்ட செயலாளருக்கே அறிக்கையிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், "கல்முனை தெற்கு பிரதேச செயலாளரே கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் தலைவராக செயற்படுகின்றார் எனவும், சந்தர்ப்பங்களுக்கேற்ப அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் உப பிரதேச செயலாளருக்கு பகிர்ந்தளிக்க முடியும்" எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிக்கிறது.

இதேவேளை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் உப பிரதேச செயலாளரான ரீ.ஜே. அதிசயராஜிற்கு கடந்த 2019.05.27ஆம் திகதி கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நசீர் கடமைப் பட்டியலொன்றை வழங்கியுள்ளார். இதில் காணி மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

கோரிக்கை நிராகரிப்பு

கல்முனை பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகம் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையினை மாவட்ட செயலக தகவல் அதிகாரியான மேலதிக மாவட்ட செயலாளர் வீ. ஜெகதீசன் நிராகரித்தார்.

இதற்கு எதிராக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிக்கு மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டுக்கு இன்று வரை எந்தவித பதிலுமில்லை. இது தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போதும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் குறித்த கோரிக்கைக்கான பதிலினை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கால இழுத்தடிப்பு

அது மாத்திரமல்லாமல், கல்முனை பிரதேச செயலகத்தின் பெயர் மாற்றப்பட்டமை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பான மேலதிக ஆவணங்களை வழங்கக் கோரி உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கு 2021.03.31ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையும் 2021.12.14ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினாலேயே தகவல் வழங்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டது.

தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம், சுமார் ஒரு மாத காலப் பகுதிக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நிராகரிப்பு அறிவிப்பிற்கு இராஜாங்க அமைச்சு ஒன்பது மாதங்கள் எடுத்து கால இழுத்தடிப்பு செய்தது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்கு 2019 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் உப பிரதேச செயலகம் தொடர்பில்  2021.03.19ஆம் திகதி பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சு, குறித்த பதில் தொடர்பான மேலதிக தகவலை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தினை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிராகரிப்புக்கு எதிராக அங்கீகாரமளிக்கப்பட்ட அதிகாரியான உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்புக்கு எதிராக தற்போது தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளும், அரச நிறுவனங்களும் இந்த விடயத்தில் அசமந்தமாக செயற்பட்டு இரு சமூகங்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த வலிவகுக்கின்றன.

எவ்வாறாயினும் மூன்று தசாப்த காலமாக நீடிக்கும் குறித்த பிரச்சினைக்கு நிலத் தொடர்புடனான நிரந்தர தீர்வொன்று விரைவில் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே அப்பிரதேச மக்களின் அவாவாக உள்ளது.