பட்ஜெட்டை தோற்கடிக்க வேண்டாம்: கிழக்கு ஆளுநர்

பட்ஜெட்டை தோற்கடிக்க வேண்டாம்: கிழக்கு ஆளுநர்

தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக உள்ளூராட்சி மன்ற வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலுள்ள கோமரன்கடவல, பதவிஸ்ரீபுர மற்றும் மொரவேவ ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (15) திங்கட்கிழமை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் வரவு - செலவுத் திட்டங்கள் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்ற நிலையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆளுநர்,

"அடுத்த வருடத்திற்கான வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் உள்ள தனிப்பட்ட குறைகளை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கத் தயாராக வேண்டாம்.

அப்படி நடந்தால் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகள் தடைப்படும். இந்த நாட்டை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

அதற்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு அந்த சபைகள் நிலையற்றதாக மாறினால் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பின்னோக்கிச் செல்லும்.

தனிப்பட்ட குறைகளை தனித்தனியாக தீர்க்கவும். ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என்ற வகையில், அபிவிருத்திப் பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கவும்.

அத்துடன் பிரதேச சபைக்கு வருமானம் ஈட்ட நல்ல வழிகள் உள்ளன. உங்கள் பிரதேச சபைகள் மூலம் இயற்கை உரத்தை உற்பத்தி செய்து வருமானத்தை ஈட்டவும். அதற்கு தேவையான ஆதரவை நாங்கள் வழங்குவோம்" என்றார்.