பாலியல், பாலினம்சார் வன்முறையில் தப்பியவர்களுக்கு இணையவழி பயிற்சி

பாலியல், பாலினம்சார் வன்முறையில்  தப்பியவர்களுக்கு இணையவழி பயிற்சி

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியமானது, ஆய்வு மற்றும் உளவியலுக்கான நிறுவனத்துடன் (CIRP) இணைந்து, பாதுகாப்பான புகலிடங்களில் தங்கியிருந்து, ஆதரவு சேவைகளைப் பெற்று வரும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்களுக்கான தொடர்ச்சியான விரிவான இணையவழி பயிற்சிக் கற்கைநெறிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த பாதுகாப்பான புகலிடங்களை இலங்கை பெண்கள் பணியகம் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஆதரிக்கின்றன. மேலும் இந்த புகலிடங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் அமைந்துள்ளன.

தொற்றுநோய்க்கு மத்தியில், பொது முடக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சமூகத்தில் காணப்படும் சமத்துவமின்மையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது, இதன் விளைவாக பாதுகாப்பான புகலிடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

கொவிட்-19க்கு முன்பே, உலகளவில் மிகவும் பொதுவான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை இருந்து வந்தது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பெண்கள் நல்வாழ்வு கணக்கெடுப்பின்படி, இலங்கையில் இதுவரை துணையுடன் வாழ்ந்த பெண்களில் ஐவரில் ஒருவர்; (20.4%) தங்கள் வாழ்நாளில் நெருங்கிய வாழ்க்கைத் துணையால் உடல் மற்றும்  பாலியல் வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் (2019).

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு, தங்குமிடங்கள் தற்காலிக புகலிடங்களாக செயல்படுவதோடு, பெண்கள் மற்றும் இளம்பெண்களை மீள வலுவடைய தேவையான உடல், உளவியல் மற்றும் சட்ட சேவைகளையும் வழங்குகின்றன.

இலங்கையில் புகலிடங்கள் மத்தியில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சி தேவைகள் குறித்த விரைவான மதிப்பீடு, புகலிடம் தற்காலிக வீடாகச் செயல்பட்டாலும், தப்பிப்பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு முழுமையாகத் தயாராகும் வரை நீண்ட காலம் தங்கியிருப்பதைக் குறிப்பிடுகிறது.

புகலிடங்களை விட்டு வெளியேறியவுடன் ஒரு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதில் அவர்களுக்கு நன்மை பயக்கும், திறன் மேம்பாட்டு பயிற்சியை புகலிடங்களில் வாழும்; 97மூமானோர் விரும்புவதாகவும் மதிப்பீடு கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் இந்த தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நித்தியத்தினால் செயற்படுத்தப்படும் 'வாக்குறுதிகள்' (PROMISES) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கொழும்பு, ஆய்வு மற்றும் உளவியலுக்கான நிறுவனத்தின் மூலம், இணையவழி திறன் அபிவிருத்தி கற்கைநெறிகளை உருவாக்க ஏற்பாடுகள் செய்தது.

"பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

உண்மையில், பெண் அல்லது சிறுமி ஒருவருக்கு எதிரான எந்த வடிவத்திலான வன்முறையும், குறித்த தனிநபரில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த குடும்பத்திலும், சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த கூட்டு முயற்சசியின் மூலம் வழங்கப்படும் பயிற்சி நெறிகள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்த பெண்கள் மற்றும் சிறுமியர் தம் வாழ்வை மீளக்கட்டியெழுப்பவும் மற்றும் மீள வலுப்பெறுவதற்குமான வாய்ப்பை வழங்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்" என இலங்கை பிரதிநிதி நவச்சா சுரேன் தெரிவித்தார்.

இந்த பயிற்சி கற்கை நெறிக்கான தேவையை அங்கீகரித்த, பெண்கள் பணியகத்தின் பணிப்பாளர் திருமதி. சம்பா உபசேன,

"பெண்கள் பணியத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பான புகலிடங்கள், எல்லா நேரங்களிலும் பெண்கள் மீள வலுப்பெற வேண்டும் என்பது மட்டுமன்றி அவர்களின் வாழ்வை பொருளாதார ரீதியாக மற்றும் சமூக ரீதியாக மீள கட்டியெழுப்பவும் வேண்டுமென்பதற்காகவும் தம் பணிகளை முன்னெடுக்கிறன.

பாலியல் மற்றும் பாலின வன்முறைகளில் இருந்து தப்பிப்பிழைத்த பெண்களுக்கு தேவையான அறிவு மற்றும் ஆற்றல்களை இந்த கற்கைநெறிகள் வழங்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.

தொழில் ஒன்றைக் கட்டியெழுப்பல், பதிவுகளைப் பேணல் மற்றும் நிதி முகாமைத்துவம், தொழில் செயற்பாடுகளுக்காக மென்பொருள் மற்றும் ஏனைய அம்சங்களின் பயன்பாடு போன்ற அடிப்படைகளை உள்ளடக்கிய வகையில் இந்த சான்றளிக்கப்பட்ட இணையக் கற்கைகளின் உள்ளடக்கங்கள் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.

புகலிடங்களில் உள்ள தப்பிப் பிழைத்தவர்களுக்கு அத்தியாவசிய தொழில் திறன்கள் மற்றும் வாழ்க்கைத் தொழிலை ஆரம்பிப்பதற்கும், நிதி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுயாதீனமாக இருப்பதற்கும் தேவையான திறன்களை கற்பிக்கும் வகையில் இந்த கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த கொழும்பு, ஆய்வு மற்றும் உளவியலுக்கான நிறுவனத்தின்; செயல்திட்ட பிரதானி சதுர கொட்டகம,

"ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடனான் இந்த செயல்திட்டத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தினை குறித்து கொழும்பு, ஆய்வு மற்றும் உளவியலுக்கான நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகின்றது.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையிலிருந்து  தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள்.

உளவளத்துணை மற்றும் உளவியல் சேவைகளில் இயலுமையைக் கட்டியெழுப்புவதே கொழும்பு, ஆய்வு மற்றும் உளவியலுக்கான நிறுவனத்தின் பிரதான இலக்காகும். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன் இணைந்து பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பங்களிக்க கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை எண்ணி நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்" என்றார்.