பிரிவேல்த் குளோபலின் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டாலினிடம் உதவி கோரல்

பிரிவேல்த் குளோபலின் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டாலினிடம் உதவி கோரல்

-நூருல் ஹுதா உமர்-

பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தில் நிதி வைப்புச் செய்தமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க உதவுமாறு தமிழக முதல்வர் மு.கா ஸ்டாலினிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நிதி வைப்புச் செய்தது பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று (06) திங்கட்கிழமை கல்முனையில் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தனர். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்கள்,

"சுமார் 200 கோடி ரூபாவினை மோசடி செய்த இந்நிறுவனத்தின் தலைவர் ஷிஹாப் ஷரீப் மற்றும் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோர் கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்த போது கைது செய்யப்பட்டு கடந்த பல வருடங்களாக தமிழகத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல்கொடுத்துவரும் முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின், இந்த விடயத்தில் தலையீடு செய்து குறித்த இருவரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட 1,400க்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்று  பொருளாதார நெருக்கடியினால் நிர்க்கதியாகியுள்ளன. குருவி சேர்ப்பது போன்று சேமித்த பணம், வீடு கட்ட சேமித்த பணம், அங்கவீனர்களின் பணம் என பல தரப்பினருடைய பணத்தினை இந்த நிறுவனம் கொள்ளையடித்துள்ளது.

ஷிஹாப் ஷரீப் மற்றும் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோர் தொடர்பில் இந்தியாவில் நடைபெற்று வருகின்ற நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் 95 சதவீத அளவில் முடிந்துள்ளதாக அறிகின்றோம்.

சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதன் ஊடாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும்.

மட்டக்களப்பு, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை என பல நீதிமன்றங்களில் இவர்களுக்கு எதிராக 100க்கு மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி விடயத்தில் நீதித் துறை மற்றும் பொலிஸார் அதிக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்" என்றனர்.