'கொரோனா பரிசோதனைக்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு கல்முனையில் மிகக் குறைவு'

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு கல்முனையில் மிகக் குறைவாக காணப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.

'இதனை யாவரும் அறிந்த விடயமாகும். இதனால், குறித்த பிரதேசத்தின்  தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் தற்போது எதுவும் அறிவிக்க முடியாது' என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் இன்று (04) திங்கட்கிழமை விடியல் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"கல்முனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் போது இளைஞர்கள் மாத்திரம் தான் வருகின்றனர். இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள். இவர்கள் எமதுக்கு தேவையில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியற்ற அபாய நிலையினைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சரியான முறையில் ஒத்துழைக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் எதிர்காலத்தில் சிறந்த தீர்மானமொன்றினை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது பண்டிகைக் காலம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு மற்றும்  காத்தான்குடியிலுள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, காத்தான்குடியினைச் சேர்ந்த 48 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதனை அடுத்தே காத்தான்குடி பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது.

அப்பிரதேசத்திலும் எதிர்பார்த்த நாட்களுக்குள் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இவற்றினை அடிப்படையாக வைத்து தான் அப்பிரதேசம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.