உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் விதமாக பள்ளிகளில் விஷேட நிகழ்ச்சி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும்  விதமாக பள்ளிகளில் விஷேட நிகழ்ச்சி

கடந்த வருட உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத் தனமான பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூறும் முகமாகவும் நாட்டுக்கு நிலையான சமாதானத்தையும் சகவாழ்வையும் வேண்டியும் அனைத்துப் பள்ளிவாயல்களும் நாளை 2020 ஏப்ரல் 21 ம் திகதி அன்று காலை 8.40 மணி முதல் 8.55 மணி வரையில் விஷேட நிகழ்ச்சியொன்ன்றினை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை வக்ப் சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வேண்டிக்கொள்கின்றன.

இதன் தேசிய மட்டத்திலான முஸ்லிம் நிகழ்ச்சி கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த உயிர்த்த ஞாயிறன்று நமது கிருஸ்தவ சகோதரங்கள் மீதும் உள்ளாச விடுதிகளில் இருந்த அப்பாவி ஆண்கள், பெண்கள். மற்றும் குழந்தைகள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2020 ஏப்ரல் 21 அன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

அந்த மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலால் 259 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் 500 க்குமதிகமானோர் காயப்படுத்தப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலினால் ஏற்பட்ட வடுக்கள் இலங்கையர் எல்லாரது உள்ளங்களிலும் இன்னும் ஆறாமல் இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்வதிலும் அவர்களுக்காக பிரர்த்திப்பதிலும் முஸ்லிம் சமூகம் அனைத்து இலங்கையருடனும் இணைந்து கொள்கிறது. இந்தப் பயங்கரவாதிகள் செய்த அந்த இழி செயலை நாம் வண்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் குண்டுத்திக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் இனம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து இலங்கையினரோடும் ஐக்கியப்பட்டுள்ளோம்.

நிகழ்ச்சி நிரல்

8.40 மணி – கிராஅத்
8.45 – 8.47 மணி – இரண்டு நிமிட மௌனம். ( இறந்தவர்களை கௌரவிக்க )
8.47. மணி – துஆ பிரார்த்தனை
8.55 மணி – நிறைவு

கிராஅத்துக்கும் துஆவுக்குமான ஒலி நாடா அல்லது வழிகாட்டல்கள் அனுப்பப்படும். இதற்காக ஒலிபெருக்கியைப் பாவிக்கவும். பள்ளிவாயல் இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.

ஏ. பி. எம். அஷ்ரப்
பணிப்பாளர், இலங்கை வக்ப் சபை மற்றும்
பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலவல்கள் திணைக்களம்